நினைவுகளில் வாழும் சின்ன கலைவாணர்... நடிகர் விவேக் பிறந்த நாள்!

நடிகர் விவேக்
நடிகர் விவேக்

உருவகேலி இல்லாமல், இரட்டை அர்த்த வசனம் இல்லாமல், மற்றவர்களை காயப்படுத்தாமல் தன் நகைச்சுவை மூலம் மூட நம்பிக்கைகளை வாழைப்பழத்தில் ஊசி ஏற்றியது போல சொன்னவர் நடிகர் விவேக். சிரிக்கவும் சிந்திக்கவும் வைக்கும் இந்த மகத்தான செயலைத் தன் கடைசி மூச்சு வரை செய்த ‘சின்ன கலைவாண’ரின் 62வது பிறந்தநாள் இன்று.

தனது தாயாருடன் விவேக்...
தனது தாயாருடன் விவேக்...

நடிகர் விவேக் அங்கையா- மணியம்மாள் தம்பதிக்கு கடைசி மகனாகப் பிறந்தார். பிறந்தது தென்காசியில் என்றாலும் அவர் கல்லூரி படித்தது எல்லாமே மதுரையில் தான். அவரது தமிழார்வத்திற்கு மதுரை முக்கிய பங்காற்றியது. மதுரை அமெரிக்கன் கல்லூரியில் பி.காம் படித்தார். அங்கு பேராசிரியராகப் பணியாற்றிய சாலமன் பாப்பையா, விவேக்கின் பிரியத்துக்குரிய ஆசிரியராக இருந்தார். அவரது பேச்சாற்றலையும், நகைச்சுவைத் திறனையும் அப்போதே கணித்த பாப்பையா, கல்லூரி காலங்களில் விவேக்கை ஊக்குவிக்கவும் தவறவில்லை.

கல்லூரிக் காலங்களிலேயே அவருக்கு நடிப்பின் மீது தீராத ஆர்வம் இருந்தாலும் படிப்பிலும் கெட்டிக்கார மாணவராக இருந்ததாக அவரது நண்பர்களும் கல்லூரிப் பேராசிரியரும் பல பேட்டிகளில் நினைவு கூர்ந்துள்ளனர். எத்தனை பெரிய உயரத்தை அடைந்தாலும் நேரம் கிடைக்கும் போதெல்லாம் தன் கல்லூரிக்கு செல்லும் வழக்கத்தை வைத்திருந்தார் விவேக்.

கல்லூரிக் காலத்தில் நடிகர் விவேக்...
கல்லூரிக் காலத்தில் நடிகர் விவேக்...

விவேக்கின் முழுப்பெயர் விவேகானந்தன். ஆனால், அவரது அம்மா மணியம்மாளுக்கு ராஜூ. ’ராஜா போல மண்ணைக் கட்டி ஆள்வான் என அப்படிக் கூப்பிடுவேன். அதேபோல, தனது நகைச்சுவையால் மக்கள் மனதை வென்றுள்ளான்’ எனப் பூரித்தார்.

சிறுவயதில் இருந்தே மிமிக்ரியில் ஆர்வம் கொண்டவராக இருந்திருக்கிறார் விவேக். இவரது மூத்த அக்கா விஜயலட்சுமி மருத்துவராகவும் இரண்டாவது அக்கா வழக்கறிஞர். முதலில் பெரிய அக்கா போல மருத்துவராக ஆசைப்பட்ட விவேக் பின்பு கலைத்துறைக்குள் வந்தார்.

நடிகர் விவேக்,,,
நடிகர் விவேக்,,,

நடிகராகவும், மிமிக்ரி கலைஞராகவும் அறியப்பட்ட விவேக்கின் இன்னொரு முகம் பரதநாட்டியக் கலைஞர் என்பது தான். சிறுவயதிலேயே முறைப்படி பரதநாட்டியம் கற்றவர் அரங்கேற்றமும் செய்திருக்கிறார். இதுமட்டுமல்லாது, இசையிலும் அவருக்கு அலாதி ஆர்வம். வயலின், பியானோ, தபேலா, புல்புல்தாரா போன்ற இசைக்கருவிகளை நன்றாக வாசிக்கத் தெரிந்தவர். அவ்வபோது பாடவும் செய்வார். பியானோவை அப்துல் சத்தார் மாஸ்டரிடம் கற்றுக் கொண்ட விவேக் இளையராஜாவின் தீவிர ரசிகர்.

அப்துல் கலாமுடன் விவேக்...
அப்துல் கலாமுடன் விவேக்...

திரையில் முதல் அறிமுகமே கே. பாலச்சந்தர் இயக்கத்தில் தான். இவரது பரதநாட்டிய நிகழ்ச்சி ஒன்றின் மூலம் தான் பாலச்சந்தர் அறிமுகமாகி படவாய்ப்புப் பெற்றார் விவேக். முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாமுக்கு விவேக்கின் நகைச்சுவை ரொம்பவே பிடிக்கும். அந்த அன்பில் அவர் விவேக்கை அழைத்து 'நகைச்சுவையுடன் நீங்கள் மரம் நடுதலும் செய்து நாட்டை பசுமையாக்குங்கள்' எனக் கடந்த 2008 ஆம் ஆண்டில் சொன்னார். அவரது வார்த்தைக்காக ஒரு கோடி மரங்களை நட்டுவிட வேண்டும் என்ற இலக்கைத் தன் கடைசி மூச்சு வரை செய்தார்.

நடிகர் விவேக்...
நடிகர் விவேக்...

உடல் நலனில் அதிக அக்கறை கொண்டவர். சைக்கிள் ஓட்டுவது, வாக்கிங் செல்வது போன்ற விஷயங்களைத் தவறாமல் செய்து வந்தார். எல்லோரையும் அரவணைத்துப் போகக்கூடியவராக இருந்த விவேக்கிற்கு புத்தக வாசிப்பும் மிகவும் பிடித்தமானது. தன் அலுவலகத்தில் மினி லைப்ரரி ஒன்றை வைத்திருந்தார். அதில் ஆங்கில நாவல்களும் இடம்பெற்றிருந்தன. சிட்னி ஷெல்டனின் சிஷ்யை டில்லி பேக்‌ஷாவ்வின் எழுதிய 'மிஸ்ட்ரஸ் ஆஃப் த கேம்', அரவிந்த் அடிகாவின் 'வொயிட் டைகர்' இரண்டும் அவர் அடிக்கடி படித்து வந்த புத்தகங்கள்.

மனைவி மற்றும் குழந்தைகளுடன் விவேக்...
மனைவி மற்றும் குழந்தைகளுடன் விவேக்...

இவருக்கு அருட்செல்வி என்ற மனைவியும் அமிர்தா நந்தினி, தேஜஸ்வினி, பிரசன்ன குமார் என்ற மூன்று குழந்தைகளும் உண்டு. இதில் கடைசி மகன் பிரசன்ன குமார் உடல்நலக் குறைவால் 2015ல் இறந்தது விவேக்கை மனதளவில் கடுமையாகப் பாதித்தது. தன் நகைச்சுவையாலும் மூடநம்பிக்கைகளுக்கு எதிரான வசனங்களாலும் மக்கள் மனதில் நீங்கா இடம்பிடித்த விவேக்கிற்கு கோவிட் காலம் எமனாக அமைந்தது. கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்டு அது குறித்து மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப் பேசினார். பிறகு அவருக்கு திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். பின்பு சிகிச்சை பலனிள்ளாமல் கடந்த 2021, ஏப்ரல் 17 அன்று நம்மை விட்டுப் பிரிந்தார்.

தன் படங்களின் மூலமாக மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்திய விவேக், என்றென்றும் மக்களின் நினைவுகளில் வாழ்ந்து வருகிறார்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in