`இந்த புகைப்படங்களை எடுக்க ஊக்கப்படுத்தியதே என் மனைவி தான்'- நடிகர் விஷ்ணு விஷால்

`இந்த புகைப்படங்களை எடுக்க ஊக்கப்படுத்தியதே என் மனைவி தான்'- நடிகர் விஷ்ணு விஷால்

கடந்த சில நாட்களுக்கு முன்பு நடிகர் ரன்வீர் சிங், ‘Nude Photography’ எனப்படும் தன்னுடைய நிர்வாண ஃபோட்டோஷூட் புகைப்படங்களை இணையத்தில் வெளியிட்டார். அமெரிக்க பாப் கலாச்சாரத்தின் அடையாளமும் நடிகருமான பர்ட் ரெனால்ட்ஸ்க்கு இந்த புகைப்படங்களை சமர்ப்பிப்பதாக ரன்வீர் தெரிவித்து இருந்தார். ரன்வீரின் இந்த புகைப்படங்களுக்கு வரவேற்பு கிடைத்த அதே சமயம், எதிர்மறை விமர்சனங்களும் வந்தது.

இதனையடுத்து, நடிகர் விஷ்ணு விஷாலும் இது போன்ற நிர்வாண படங்களை தனது அதிகாரப்பூர்வமான சமூக வலைதள பக்கத்தில் பகிர்ந்துள்ளார். இந்த புகைப்படங்களை பகிர்ந்து அவர் கூறியிருப்பதாவது, ‘நல்லது! நானும் இந்த ட்ரெண்டில் இணைகிறேன்’ என கூறி இந்த புகைப்படங்களை அவரது மனைவி எடுத்ததாகவும் கூறி இருக்கிறார். ரன்வீரை போல இவரது புகைப்படங்களுக்கும் அதிகமாக எதிர்மறை விமர்சனங்களே வந்திருந்தது.

இது பற்றி நடிகர் விஷ்ணு விஷாலிடம் காமதேனு மின்னிதழுக்காக பேசிய போது, “கொஞ்ச நாட்களுக்கு முன்பு நடிகர் விஜய் தேவரகொண்டா ‘லைகர்’ படத்தின் போஸ்டராக ஒரு நிர்வாண படத்தை பகிர்ந்திருந்தார். பின்பு நடிகர் ரன்வீர் சிங்கும் அதே போல இப்போது பகிர்ந்திருக்கிறார். சரி, நாமும் ஏன் அப்படி போடக்கூடாது என்று நினைத்து தான் பகிர்ந்தேன். மற்றபடி இதை பகிரும் போது சமூக வலைதளங்களில் நேர்மறை, எதிர்மறை விமர்சனங்களும் வரும் என்பது தெரியும். இதுவரை நான் நடித்த பெரும்பாலான படங்களில் நல்ல கதாபாத்திரம் இருக்கும்படியானவை தான் தேர்ந்தெடுத்தேன். ஆனால், என்னை அந்த வட்டத்திற்குள் மட்டும் யாரும் சுருக்கி விடக்கூடாது. நானும் வித்தியாசமான கதாபாத்திரங்களில் நடிக்க வேண்டும் என்று விரும்புகிறேன்.

ஏனெனில் ஒரு நடிகர் என்றால் எல்லா விதமான பாத்திரங்களிலும் முயற்சி செய்து பார்க்க வேண்டும். விஷ்ணு விஷால் என்றாலே நல்லவன் கதாபாத்திரங்கள் தான் நினைவுக்கு வரும். அது தவிர்த்து ஒரு கெட்டவன், ப்ளேபாய் கதாபாத்திரங்களும் செய்ய வேண்டும் என்றால் நான் நினைவுக்கு வர மாட்டேன். இந்த பாத்திரங்களில் வரும் கதைகள் குடும்பங்களோடு அமர்ந்து பார்க்க முடியாதபடிக்கு எல்லாம் இருக்கிறது. அது போன்ற கதைகளை முன்பு நான் தவிர்த்திருக்கிறேன். அந்த கதைகள் வெற்றியும் பெற்றிருக்கிறது. ஆனால், அவற்றை நான் சொல்லவில்லை. இவற்றிலும் சில நல்ல கதைகளும் உண்டு. அவற்றில் நான் நடிக்க விரும்புகிறேன்.

இது போன்ற படங்களை ரன்வீர் சிங் போடுவார் என்றால் அவர் இது போன்று செய்வார் என்று எல்லாருக்கும் தெரியும். அதனால், அவருக்கு பெரிதாக எதிர்மறையான விமர்சனங்கள் வரவில்லை. அதுவே, நான் போட்டதும் பலரும் என்னிடம் வந்து, ‘நீங்கள் ஏன் இப்படி போட்டீர்கள்?’ என்று கேட்கிறார்கள். ஆபாசத்துக்கு செக்ஸியாக இருப்பதுக்கும் ஒரு சின்ன வித்தியாசம் தான். பெண்கள் கவர்ச்சியாக புகைப்படம் போடும் போது பலரும் லைக் போடுகிறார்கள். சூப்பர் செக்ஸி என கமெண்ட் போடுகிறார்கள். அதுவே நான் அது போன்ற புகைப்படங்களை போடும் போது ஆபாசம் என்கிறார்கள். என் புகைப்படம் அப்படி இல்லையே. ரசிகர்கள் என்ன சொல்கிறார்கள் என்பதை தெரிந்து கொள்ள இதை ஒரு பரிசோதனை முயற்சியாகவே பார்க்கிறேன். இது சரி தவறு என்பதை தாண்டி, நான் என் உடலை தயார் செய்தேன். என்னை போல மீடியாவில் இருக்கும் மற்ற நடிகர்களும் ஃபோட்டோஷூட் செய்து போடும் போது நானும் போட்டேன்” என்கிறார் விஷ்ணு விஷால்.

இந்த புகைப்படங்களை எடுத்தது அவருடைய மனைவி ஜூவாலா குட்டா என்பது மற்றொரு ஆச்சரிய தகவல். உங்களை போலவே அவரும் இந்த புகைப்படங்களுக்கு இதே கருத்துகளை தான் பிரதிபலித்தாரா என்று கேட்ட போது விஷ்ணு விஷால் சிரித்து கொண்டே, “அவர் ஒரு பெண்ணியவாதி! இந்த புகைப்படங்களை எடுக்க நான் கூட ஆரம்பத்தில் தயங்கினேன். ஆனால், எனக்கிருந்த அந்த தயக்கங்களை எல்லாம் உடைத்து இந்த புகைப்படங்களை எடுக்க ஊக்கப்படுத்தியதே அவர்தான்” என்கிறார்.

சமீபகாலங்களில் திரைக்கலைஞர்கள் மீதான் உருவ கேலிகள் இணையத்தில் அதிகரிப்பது குறித்தான கேள்வியையும் முன் வைத்தேன். “உருவ கேலி என்பது முற்றிலும் வேறானது. நடிகர்கள் உடல் இளைத்தாலும், அதிகரித்தாலும் கேலி செய்வது என்பது அதிகமாகவே நடக்கிறது. அதிலும் குறிப்பாக நடிகர்களை விட அதிகம் நடிகைகளே இதை எதிர்கொள்கிறார்கள். ஆனால், உடலை கட்டுப்கோப்பாக வைத்து கொள்ள வேண்டும் என்ற அழுத்தமும் இந்த துறைக்குள் இருக்கிறது என்பதை மறுக்க முடியாது. அப்போது தான் நீண்ட காலம் இங்கு நிலைத்து இருக்க முடியும். இது சிலருக்கு பொருந்தும். சிலருக்கு அவர்களது இயல்பே ரசிகர்களுக்கு பிடித்து போகும். உதாரணமாக நடிகர் விஜய்சேதுபதியை சொல்லலாம். அவருடைய உடல், நிறம் மீது அவர் நம்பிக்கை வைத்திருக்கிறார். பெரும்பாலான ரசிகர்களுக்கும் அது பிடித்திருக்கிறது. அவரை யாரும் கேலி செய்யவில்லையே. எந்த ஒரு விஷயம் எடுத்தாலும் பாசிட்டிவ், நெகட்டிவ் இரண்டுமே இருக்கிறது.

இறுதியாக நான் சொல்ல விரும்புவது இது தான். இதற்கு முன்பு நான் மதுவுக்கு அடிமையாகி, மன நலன் பாதிக்கப்பட்டேன். அதை எல்லாரிடமும் நான் வெளிப்படையாக ஒத்து கொண்டு அதில் இருந்து இப்போது வெளியே வந்திருக்கிறேன். அதுபோல தான், எனக்கு இருக்கும் மனத்தடை, தயக்கம் என அனைத்தையும் உடைக்க வேண்டும். தைரியமாக எதையும் எதிர்கொள்ள வேண்டும். அவ்வளவு தான்!” என்கிறார்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in