படப்பிடிப்பில் தீ விபத்து ஏற்பட்டது எப்படி?- வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்த நடிகர்

படப்பிடிப்பில் தீ விபத்து ஏற்பட்டது எப்படி?- வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்த நடிகர்

படப்பிடிப்பில் தீவிபத்து ஏற்பட்டது எப்படி என்பது பற்றி பிரபல நடிகர் விளக்கம் அளித்துள்ளார்.

பிரபல மலையாள நடிகர் விஷ்ணு உன்னிகிருஷ்ணன். குழந்தை நட்சத்திரமாக மலையாள சினிமாவில் அறிமுகமான அவர் பல்வேறு படங்களில் நடித்துள்ளார். வசனகர்த்தாவுமான இவர், இப்போது ’வெடிகெட்டு’ என்ற படத்தை தனது நண்பரும் ஸ்கிரிப்ட் டைரட்டருமான பிபின் ஜார்ஜுடன் இணைந்து இயக்கி வருகிறார். இவர்கள் இயக்குநராக அறிமுகமாகும் முதல் படம் இது.

இதற்கு முன் இவர்கள் இணைந்து, அமர் அக்பர் அந்தோணி உட்பட சில படங்களின் கதை, வசனத்தில் இணைந்து பணியாற்றியுள்ளனர். ’வெடிவெட்டு’ படத்தில் ஷூட்டிங் கடந்த ஏப்ரல் மாதம் தொடங்கியது. இறுதிக்கட்ட படப்பிடிப்பு கொச்சி அருகே நடந்து வந்தது. கடந்த புதன்கிழமை படப்பிடிப்பில் திடீரென ஏற்பட்ட தீ விபத்தில் விஷ்ணு உன்னிகிருஷ்ணனுக்கு கைகளில் பலத்த காயம் ஏற்பட்டது. உடனடியாக அவர் கொச்சியில் உள்ள மருத்துவமனை ஒன்றில் சேர்க்கப்பட்டார். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில் அவர் உடல் நிலை குறித்து ஏகப்பட்ட வதந்திகள் வெளியாயின. அவருக்கு பிளாஸ்டிக் சர்ஜரி செய்ய இருப்பதாகவும் கூறப்பட்டது. தவறான செய்திகள் காரணமாக ரசிகர்கள், நலம் விரும்பிகளிடம் இருந்து ஏராளமான மெசேஜ்கள் வந்ததாகத் தெரிவித்துள்ள விஷ்ணு, வதந்திக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக, தனது சமூக வலைதளப் பக்கத்தில் மருத்துவமனையில் சிகிச்சை பெறும் புகைப்படத்தைப் பதிவிட்டுள்ளார்.

அதில், படப்பிடிப்பின் போது விளக்கில் இருந்த எண்ணெய் சிந்தி கைகளில் தீப்பற்றியது. அதற்காக சிகிச்சை எடுத்து வருகிறேன். ஓய்வெடுக்க வேண்டும் என்று மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். காயம் குணமடைந்ததும் படப்பிடிப்புத் தொடங்கும் என்று கூறியுள்ளார்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in