’லத்தி’ படப்பிடிப்பில் மீண்டும் இணைகிறார் விஷால்
கேரளாவில் சிகிச்சை பெற்றுவந்த நடிகர் விஷால், ’லத்தி’ படப்பிடிப்பில் நாளை முதல் இணைய உள்ளார்.
'வீரமே வாகை சூடும்' படத்தை அடுத்து விஷால் நடித்து வரும் படம், ’லத்தி’. ஏ.வினோத்குமார் இயக்குகிறார். இந்தப் படம் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் மற்றும் இந்தி மொழிகளில் தயாராகிறது. விஷால் நடிக்கும் 32-வது படமான இதை, நடிகர்கள் நந்தாவும் ரமணாவும் தயாரிக்கின்றனர். விஷால் ஜோடியாக சுனைனா நடிக்கிறார். பிரபு முக்கிய கேரக்டரில் நடிக்கிறார். பாலசுப்பிரமணியம் ஒளிப்பதிவு செய்கிறார். சாம் சி.எஸ் இசை அமைக்கிறார்.

இதன் மூன்றாம் கட்ட படப்பிடிப்பு ஐதராபாத்தில் நடந்து வந்தது. ஆக்ஷன் காட்சிகளை படமாக்கி வந்தனர். பீட்டர் ஹெய்ன் இந்தக் காட்சிகளை அமைத்தார். க்ளைமாக்ஸ் சண்டைக் காட்சிக்கான படப்பிடிப்பின்போது, எதிர்பாராத விதமாக, விஷாலுக்கு காயம் ஏற்பட்டது.
இதனால் அவரால் தொடர்ந்து படப்பிடிப்பில் கலந்து கொள்ள முடியாத நிலை ஏற்பட்டது. இதையடுத்து அவர் சிகிச்சைக்காக கேரளா சென்றார். சிகிச்சை முடிவடைந்ததை அடுத்து, ஐதராபாத் திரும்பிய விஷால், நாளை முதல் ’லத்தி’ படப்பிடிப்பில் பங்கேற்கிறார்.