விஜயுடன் அரசியல் கூட்டணிக்கு ரெடியா?: நடிகர் விஷால் பரபரப்பு பேட்டி!

நடிகர் விஜயுடன் விஷால்...
நடிகர் விஜயுடன் விஷால்...

அரசியல் என்பது பொழுதுபோக்குத் துறையோ, சும்மா வந்து போகிற இடமோ கிடையாது என நடிகர் விஷால் கூறியுள்ளார்.

சினிமாவில் கிடைக்கும் பிரபல்யத்தையும் பெயரையும் வைத்து அரசியலுக்குள் வரும் பிரபலங்கள் ஏராளம். குறிப்பாக எம்.ஜி.ஆர், ஜெயலலிதா, விஜயகாந்த், கமல்ஹாசன், விஜயகாந்த் என இந்தப் பட்டியல் ரொம்பவே பெரிது.

இந்த வரிசையில் கடந்த பிப்ரவரி 2-ம் தேதி அன்று நடிகர் விஜய் தமிழக வெற்றி கழகம் எனத் தனது அரசியல் கட்சியை ஆரம்பித்தார். இதனையடுத்து அவரின் ஒவ்வொரு அரசியல் செயல்பாடுகளும் ரசிகர்கள் மத்தியில் உற்றுநோக்கக் கூடிய ஒன்றாக மாறியுள்ளது.

இந்த நிலையில் நடிகர் விஷாலும் கட்சி ஆரம்பிக்கப் போகிறார் என்ற செய்தி வலம் வந்தது. இதற்காக அறிக்கை ஒன்றை வெளியிட்ட விஷால், மக்களுக்காகத் தொடர்ந்து பணி செய்வேன் என்றும், எதிர்காலத்தில் இயற்கை முடிவெடுக்க வைத்தால் தயங்க மாட்டேன் என்றும் அதில் கூறியிருந்தார்.

நடிகர் விஷால்
நடிகர் விஷால்

இந்த நிலையில் நடிகர் விஷால் செய்தியாளர்களிடம் கூறுகையில், “அரசியல் என்பது பொதுப்பணி. மற்றத் துறைகளைப் போல பொழுதுபோக்கும் இடம் கிடையாது. மக்களுக்கு என்ன தேவையோ அதை செய்வதே அரசியல். 2026-ல் தேர்தல் வருகிறது. மறைப்பதற்கு ஒன்றும் இல்லை. நான் வரமாட்டேன்.

ஆனால், அந்த நேரத்தில் அந்த காலக்கட்டத்தில் என்ன முடிவு எடுக்கப்படுமோ அது தான். நான் நடிகர் சங்கத் தேர்தலில் பொதுச் செயலாளராவேன் என்று நினைத்ததே கிடையாது. இதேபோல் தயாரிப்பாளர் சங்கத்தில் நான் நிற்பேன் என்று நினைக்கவே இல்லை. இவை எல்லாம் அந்தக் காலக்கட்டத்தில் எடுக்கக்கூடிய முடிவு தான்” என்றார். அவரிடம் நடிகர் விஜயின் அரசியல் வருகை குறித்தும், வருங்காலத்தில் அவர் கட்சியுடன் இணைந்தும் கூட்டணி வைப்பீர்களா என்றும் கேள்வி எழுப்பப்பட்டது.

விஜய், விஷால்...
விஜய், விஷால்...

அதற்கு, விஜய்க்கு வாழ்த்துக் கூறிய விஷால், “இப்போதே நான் எதையும் சொல்ல முடியாது. அந்த நேரத்தில் தான் அது பற்றி சொல்வது சரியாக இருக்கும். மக்களுக்கு நல்லது செய்ய வேண்டும் என்ற ஒரு எண்ணம் தான் எல்லோருக்கும். இதற்கு நிறைய கட்சிகள் தேவையில்லை. இப்போது இருப்பதே அதிகம். அதனைத் தாண்டி ஒருவர் அரசியலுக்கு வருகிறார் என்பதை இதையும் தாண்டி என்னால் மக்களுக்கு செய்ய முடியும் என்ற நம்பிக்கையில்தான்” என்று பதிலளித்தார்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in