வித்யாபாலனுக்கு எதிர்ப்பு... கடைசி வரை நிறைவேறாத ஆசை; நடிகர் வினு சக்ரவர்த்தி நினைவுநாள்!

வினு சக்ரவர்த்தி
வினு சக்ரவர்த்தி

நடிகர், எழுத்தாளர், திரைக்கதையாசிரியர் எனப் பன்முகம் கொண்ட வினு சக்ரவர்த்தியை அத்தனை சீக்கிரத்தில் ரசிகர்கள் மறந்திருக்க வாய்ப்பில்லை.

தமிழ், மலையாளம், தெலுங்கு, படகா என ஆயிரத்துக்கும் அதிகமான படங்களில் நடித்து நீங்கா புகழ் பெற்றவரின் ஏழாம் ஆண்டு நினைவுநாளான இன்று, அவர் குறித்தான நினைவுகளில் சிலவற்றைப் பார்க்கலாம்.

மதுரை உசிலம்பட்டியில் பிறந்த வினு சக்ரவர்த்தி, ஆரம்ப காலங்களில் தென்னிந்திய ரயில்வேயில் துணை ஆய்வாளராகப் பணிபுரிந்தார். சினிமா மீது கொண்ட தீராத காதலால், கிடைத்த அரசு வேலையை விட்டுவிட்டு சினிமாவிற்குள் நுழைந்தார். பிரபல இயக்குநர் புட்டண்ணா கனகலிடம் கதாசிரியராக சேர்ந்தது தான் முதல் திரையுலக அனுபவம்.

திரைக்கதை எழுதும் ஆர்வம் ஒருபக்கம் இருந்தாலும் நடிப்பின் மீது கொண்ட காதல் அவரை விட்டு வைக்கவில்லை. 1979ல் வெளியான ‘ரோசாப்பூ ரவிக்கைக்காரி’ படத்தில் சிறுகதாபாத்திரத்தில் நடித்து நடிகராக அறிமுகமானார்.

இயல்பிலேயே நகைச்சுவை உணர்வு கொண்டவராக இருந்தாலும், இவரது முரட்டுத்தனமான தோற்றமும் கட்டைக் குரலும் வில்லன் கதாபாத்திரத்திற்கு இலகுவாகப் பொருந்தி ரசிகர்களின் மனதிலும் சிம்மாசனமிட்டு அமர்ந்தார்.

வில்லன், நகைச்சுவைக் கதாபாத்திரம், குணசித்திர வேடம் என தனது தேர்ந்த நடிப்பால் ஆயிரத்துக்கும் மேற்பட்ட படங்களில் நடித்து ரசிகர்கள் மனதில் நீங்கா இடம் பிடித்தார். இவரது சினிமா பயணத்தில் நடிகை சில்க் ஸ்மிதாவை திரையுலகிற்கு அறிமுகப்படுத்திய விஷயத்தை நிச்சயம் குறிப்பிட வேண்டும்.

ஆந்திராவில் இருந்து தமிழகத்திற்கு வந்த விஜயலட்சுமிக்கு நடிப்பு சொல்லிக் கொடுத்து ’வண்டிச்சக்கரம்’ படம் மூலம் சில்க் ஸ்மிதாவாக மாற்றிய பெருமை வினு சக்ரவர்த்தியையே சாரும். தன் மனைவியைக் கொண்டு சில்க் ஸ்மிதாவுக்கு ஆங்கிலம் கற்றுக்கொடுத்தவர் என்பது பலருக்கு தெரியாத செய்தி.

சில்க் ஸ்மிதாவின் பயோபிக் படமாக ‘தி டர்டி பிக்சர்’ உருவான போது அதில் வித்யாபாலன் நடிக்க அதிருப்தி தெரிவித்தார் வினு. ”சில்க் ஸ்மிதாவை எல்லோரும் க்ளாமர் பொண்ணாக மட்டுமே பார்க்கிறார்கள். சில்க் ஸ்மிதாவிற்கு காந்தம் போன்ற ஈர்க்கும் கண்கள் இருக்கும். அவரது கிறங்கடிக்கும் பார்வை பல படங்களின் வெற்றிக்கு துணை நின்றுள்ளன. ஆனால், அதுபோன்ற எந்த அம்சங்களும் வித்யாபாலனிடம் இல்லை” என்று தனது அதிருப்தியை பகிரங்கமாகவே வெளிப்படுத்தியிருந்தார்.

ரஜினி, கமல், விஜயகாந்த் போன்ற பல முன்னணி கதாநாயகர்களுக்கு நெருக்கமானவராகவும் இருந்தார் வினு சக்கரவர்த்தி. ’அண்ணாமலை’, ‘நாட்டாமை’, ‘சுந்தரா டிராவல்ஸ்’ உள்ளிட்டப் பல படங்களில் நடித்திருந்த அவருடைய கடைசி படம் தமிழில் ‘வாயை மூடி பேசவும்’. எழுத்தாளர், கதாசிரியர், நடிகர் என வலம் பேசப்பட்டாலும் இயக்குநராக வேண்டும் என்ற அவர் கனவு கடைசி வரை நிறைவேறாமல் போனது சோகம். அதிகளவு சர்க்கரை நோய் பாதிப்பு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், சிகிச்சைப் பலனளிக்காமல் கடந்த 2017ல் தனது 71-வது வயதில் நம்மை விட்டு பிரிந்தார் வினு சக்ரவர்த்தி!

இதையும் வாசிக்கலாமே...

தீவிரவாதிகள் தாக்குதலில் 2 சிஆர்பிஎஃப் வீரர்கள் மரணம்; 6 பேர் படுகாயம்

மார்க் நெக்ஸ்ட்... ஸ்கில்ஸ் ஃபர்ஸ்ட்... பள்ளி மாணவர்களுக்கான டிப்ஸ்!

பீகாரில் இருந்து உ.பி.,க்கு 95 குழந்தைகள் கடத்தல்? - அதிரடியாக மீட்ட குழந்தைகள் நல ஆணையம்!

பாலஸ்தீனத்துக்கு ஆதரவாக போராட்டம்... அமெரிக்காவில் கோவை மாணவி கைது!

சல்மான் கான் வீட்டின் மீது துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்ட வழக்கு... போர்ச்சுகல் நாட்டில் அன்மோல் பிஷ்னோய் பதுங்கலா?

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in