இந்த 32 வருடங்களுக்கு நன்றி: நெகிழ்ச்சி வீடியோ பதிவிட்ட நடிகர் விக்ரம்

இந்த 32 வருடங்களுக்கு நன்றி: நெகிழ்ச்சி வீடியோ பதிவிட்ட நடிகர் விக்ரம்

தமிழ் சினிமாவில் 32 வருடங்கள் நிறைவு செய்ததை ஒட்டி நடிகர் விக்ரம் நெகிழ்ச்சியான பதிவு ஒன்றைப் பகிர்ந்திருக்கிறார்.

சினிமாவில் நடிகராக ’என் காதல் கண்மணி’ படம் மூலமாக அறிமுகமானார் நடிகர் விக்ரம். அப்போது அஜித், பிரபுதேவா, அப்பாஸ் போன்ற நடிகர்களுக்கு பின்னணி குரல் கொடுத்தது, பாடகர், நடிகர் என பன்முகத் திறனோடு சினிமாவுக்குள் காலடி எடுத்து வைத்த விக்ரம் தற்போது 32 வருடங்களை நிறைவு செய்திருக்கிறார்.

சினிமாவில் ஒரே படத்தில் விதவிதமான கதாபாத்திரங்கள், படத்திற்கு படம் உடலை ஏற்றி இறக்கி வித்தியாசம் காட்டுவது என சொன்னாலே பலருக்கும் நடிகர்கள் சிவாஜி கணேசன், கமல்ஹாசன் வரிசையில் நினைவுக்கு வரக்கூடியவர்களில் விக்ரமும் ஒருவர். அந்த அளவிற்கு ஒவ்வொரு படத்திற்கும் அவர் கொடுக்கக் கூடிய உழைப்பு என்பது அபாரமானது.

நடிகர் என்ற அலட்டல் இல்லாமல் எப்போதும் கலகலப்பாகவும், எனர்ஜியாகவும் இருக்கக்கூடியவர் விக்ரம். சமீபத்தில் கூட அவருக்கு உடல்நிலை சரியில்லாமல் போனபோது ‘ஹார்ட் அட்டாக்’ என செய்தி வர ’அதெல்லாம் இல்லன்னு சொல்லதான் வந்திருக்கேன்’ என ஜாலி கவுண்ட்டரோடு ‘கோப்ரா’ படத்திற்காக மேடை ஏறினார் விக்ரம்.

‘சேது’, ‘பிதாமகன்’, ‘அந்நியன்’ படங்களில் ஆரம்பித்து இப்போது வெளியாகியுள்ள ‘பொன்னியின் செல்வன்’ படம் வரை அவரது நடிப்புக்கு தீனி போடும் படங்களைத் தேர்ந்தெடுத்த அதே சமயம் ’ஜெமினி’, ‘தூள்’, ‘சாமி’ என கமர்ஷியல் படங்களிலும் ஹிட் கொடுத்தார்.

இப்போது சினிமாவில் 32 வருடங்கள் நிறைவு செய்ததை ஒட்டி தன்னுடைய சமூக வலைதளப் பக்கத்தில் வீடியோ ஒன்றை பகிர்ந்து, ‘இத்தனை வருடங்கள், அத்தனை கனவுகள், முயற்சி திருவினை ஆக்கும் என்பார்கள். நீங்கள் இல்லையெனில் அது வெறும் முயற்சி மட்டுமே. இந்த 32 வருடங்களுக்கு நன்றி’ என நெகிழ்ச்சியாகத் தெரிவித்துள்ளார்.

ரசிகர்கள், திரைத்துறையச் சேர்ந்தப் பிரபலங்கள் என பலரும் நடிகர் விக்ரமுக்கு தங்களது வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றனர்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in