`எவ்வளவோ பார்த்துட்டோம், இதெல்லாம் ஒண்ணுமில்லை’: நடிகர் விக்ரம் உருக்கம்!

`எவ்வளவோ பார்த்துட்டோம், இதெல்லாம் ஒண்ணுமில்லை’: நடிகர் விக்ரம் உருக்கம்!

அஜய் ஞானமுத்து இயக்கத்தில் விக்ரம் நடித்துள்ள படம், 'கோப்ரா'. ஸ்ரீனிதி ஷெட்டி, முன்னாள் கிரிக்கெட் வீரர் இர்பான் பதான், மியா ஜார்ஜ் உட்பட பலர் நடித்துள்ளனர். ஏ.ஆர்.ரஹ்மான் இசை அமைத்துள்ளார். ஆகஸ்ட் 11-ம் தேதி இந்தப் படம் வெளியாக இருக்கிறது. படத்தை ரெட் ஜெயண்ட் வெளியிடுகிறது. இதன் இசை வெளியீட்டு விழா சென்னையில் நடந்தது. கடந்த சில நாட்களுக்கு முன் உடல் நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் நடிகர் விக்ரம் சேர்க்கப்பட்டார்.

அவருக்கு மாரடைப்பு என்று வதந்திகள் வெளியாகி பரபரப்பானது. இந்நிலையில் இந்த விழாவுக்கு வந்திருந்த நடிகர் விக்ரம், தனது உடல்நலம் குறித்து வந்த வதந்திகள் தொடர்பாகவும் கூறினார். அவர் பேசியதாவது:

எனக்கு மாரடைப்பு என்று வதந்தி கிளப்பி விட்டார்கள். சில பேர் போட்டோஷோப் பண்ணி, யாரோ ஒரு பேஷன்ட் உடம்புல என் முகத்தை ஒட்ட வச்சிருந்தாங்க. ரொம்ப கிரியேட்டிவாதான் பண்ணியிருந்தாங்க. நல்லாயிருந்துச்சு. பரவாயில்ல. எவ்வளவோ பார்த்துட்டோம், இதெல்லாம் ஒண்ணுமில்லை. என் குடும்பம், நண்பர்கள், ரசிகர்கள் இவங்கதான் ரொம்ப சங்கடப்பட்டாங்க.

எனக்கு 20 வயசு இருக்கும்போது விபத்தைச் சந்திச்சேன். காலை எடுக்க வேண்டிய சூழ்நிலை வந்தபோது அதுல இருந்தே மீண்டு வந்துட்டேன். அதுக்குப் பிறகு இதெல்லாம் ஒண்ணுமே கிடையாது. எனக்கு சின்ன ஜெஸ்ட் டிஸ்கம்பர்ட் இருந்தது. அதனால்தான் மருத்துவமனைக்குப் போனேன். அதைவச்சு பின்னி பெடலெடுத்துட்டாங்க. நான் நல்லா இருக்கேன்னு சொல்றதுக்காகத்தான் இந்த விழாவுக்கு வந்தேன்.

சினிமாவுக்கு வருவதற்கு முன்னால, சோழா டீ விளம்பரத்துல ஆதித்த கரிகாலனா நடிச்சேன். அதுல, திலீப்புனு ஒருத்தர் இசை அமைச்சார். இன்னைக்கு மிகப்பெரிய காவியமான பொன்னியின் செல்வன் படத்தில் எனது கனவு இயக்குநர் மணிரத்னம் இயக்கத்தில் ஆதித்த கரிகால சோழனா நடிச்சுட்டேன். அன்னைக்கு திலீப்புன்னு இசை அமைச்சவர், இன்னைக்கு இரண்டு ஆஸ்கர் விருது வென்று உலகத்தில் எல்லோருக்கும் தெரிஞ்ச ஏ.ஆர்.ரஹ்மானாக நம் முன்னாடி இருக்கார். என்ன சொல்ல வர்றேன்னா, நமக்குன்னு ஒரு கனவு இருந்தா, ஒரு லட்சியம் இருந்தா, அதுக்காக உழைச்சோம்னா, யாராக இருந்தாலும் நீங்க நினைக்க முடியாத அளவுக்கு உங்களால உயர முடியும். ஏ.ஆர்.ரஹ்மான் பெரிய உதாரணம்.

இவ்வாறு நடிகர் விக்ரம் பேசினார்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in