ராஜராஜ சோழன் போல ஒரு அரசனைப் பார்க்க முடியுமா? - மும்பையை அதிரவைத்த நடிகர் விக்ரமின் பேச்சு!

ராஜராஜ சோழன் போல ஒரு அரசனைப் பார்க்க முடியுமா? - மும்பையை அதிரவைத்த நடிகர் விக்ரமின் பேச்சு!

மும்பையில் நடந்த ‘பொன்னியின் செல்வன்’ பட புரொமோஷன் நிகழ்வில், ராஜராஜ சோழன் குறித்து நடிகர் விக்ரம் பேசிய பேச்சு தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகியுள்ளது.

‘பொன்னியின் செல்வன்’ படக்குழு படத்தின் புரொமோஷன் நிகழ்ச்சிகளுக்கான மும்பை சென்றுள்ளது. இயக்குநர் மணிரத்னம், இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான், நடிகர்கள் விக்ரம், கார்த்தி, ஜெயம்ரவி, ஐஸ்வர்யா ராய், த்ரிஷா ஆகியோர் நேற்று நடைபெற்ற இப்படத்தின் செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டனர். அப்போது நடிகர் விக்ரம் பேசிய உணர்ச்சிமிகு பேச்சு இப்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

செய்தியாளர் சந்திப்பில் பேசிய விக்ரம் ராஜ ராஜ சோழன் ஆட்சி பெருமைகளை விவரித்தார். அதில், “நாம் எகிப்தில் உள்ள பிரமீடுகள் பற்றி பேசுகிறோம். அதை எப்படி கட்டி இருப்பார்கள் என்றெல்லாம் சிந்திக்கிறோம். ஆனால் நம் இந்தியாவில் நிறைய கோவில்கள் இருக்கின்றன. அதில் உயரமான கோபுரத்தை கொண்ட கோவில் என்றால் அது தஞ்சாவூரில் உள்ள பெரியக் கோவில் தான்.

ராஜராஜ சோழன்தான் அந்த கோவிலை கட்டினார். உலகத்திலேயே உயரமான கோபுரத்தை கொண்ட கோவில் அதுதான். அந்த கோவில் கோபுரத்தின் உச்சியில் உள்ள கல் மட்டும் 80 டன் எடை கொண்டது. நமக்கும் பிரமிடுகள் பற்றியும், பைசா கோபுரம் பற்றியும் தெரிகிறது. ஒழுங்காக நிற்காத பைசா கோபுரத்தை நாம் பார்த்து வியப்படைகிறோம், பாராட்டுகிறோம்.

ஆனால் இன்றளவும் திடமாக நிற்கக்கூடிய பழங்கால கோவில்கள் நம் நாட்டில் உள்ளது. அந்த காலத்தில் எந்தவிதமான இயந்திரங்களும் இல்லாத நிலையிலும் யானைகள், காளைகள் மற்றும் மனிதர்களின் உதவியுடன் மட்டுமே தஞ்சை பெரியக் கோவிலை கட்டி உள்ளார்கள். செயற்கை பூச்சுக்கள் எதுவும் பயன்படுத்தாமல் கட்டப்படுள்ள அந்த கோவில் 6 பூகம்பங்களை தாங்கி உள்ளது என்றால் நம்ப முடிகிறதா.

அது எப்படி சாத்தியமானது என்றால், அந்த கோவில் சுற்றுச்சுவர், பின்னர் 6 அடி நீளத்துக்கு தாழ்வாரம் அமைத்து அதன்பின்னர் மையப்பகுதியில் கோவிலை கட்டி உள்ளனர். அதனால் தான் அது இத்தனை பூகம்பங்களையும் தாண்டி இன்றளவும் நிலைத்து நிற்கிறது. அதுமட்டுமின்றி ராஜராஜ சோழன், அவரது ஆட்சி காலத்தில் 5 ஆயிரம் அணைகளை கட்டி உள்ளார். அந்த காலத்திலேயே நீர் மேலாண்மை ஆணையத்தையும் அவர் வைத்திருந்தார். அந்த காலத்தில் பெரும்பாலான ஊர்களுக்கு ஆண்களின் பெயர்களை மட்டும் சூட்டி வந்த நிலையில், பெண்களின் பெயரை சூட்டி மிகப்பெரிய மாற்றத்தை கொண்டுவந்தார் ராஜ ராஜ சோழன். இலவசமாக மருத்துவமனைகளை கட்டியுள்ளார். இதெல்லாம் மிகவும் ஆச்சர்யமாக இருந்தது. இவையெல்லாம் 9 ம் நூற்றாண்டில் நடந்தவை. இதற்கு 500 ஆண்டுகள் கழித்து தான் கொலம்பஸ் அமெரிக்காவையே கண்டுபிடித்தார்.

இதன்மூலம் நாம் எந்த அளவுக்கு பெருமைமிகு கலாச்சாரத்தை கொண்டிருக்கிறோம் என்பதை யோசித்து பார்க்கவே வியப்பாக உள்ளது. இதை நினைத்து நாம் பெருமைப்பட வேண்டும். வட இந்தியா, தென் இந்தியா என பிரித்து பார்க்க வேண்டாம். நாமெல்லாம் இந்தியர்கள். அதனால் நாம் இவர்களையெல்லாம் கொண்டாட வேண்டும்” என கூறினார்.

விக்ரமின் இந்த பேச்சுதான் இப்போது சமூக வலைத்தளங்களில் வைரல் கண்டெண்ட். இவரின் பேச்சை சக நடிகர்கள் உட்பட நெட்டிசன்கள் பலரும் பாராட்டி வருகின்றனர். மணிரத்னம் இயக்கத்தின் உருவாகியுள்ள ‘பொன்னியின் செல்வன்’ திரைப்படம் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் , இந்தி ஆகிய 5 மொழிகளில் வரும் செப்டம்பர் 30 ம் தேதி வெளியாகிறது. இப்படத்தின் ட்ரெய்லர், பாடல்கள், போஸ்டர்கள் வெளியாகி ரசிகர்களிடம் பெரும் வரவேற்பை பெற்றுள்ளதால், படத்தின் மீதான ஆர்வமும் அதிகரித்துள்ளது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in