திட்டமிட்டபடி தெலுங்கில் விஜயின் 'வாரிசு’ வெளியாகுமா?

என்ன செய்யப் போகிறது தமிழ்த் திரையுலகம்?
திட்டமிட்டபடி தெலுங்கில் விஜயின் 'வாரிசு’ வெளியாகுமா?

ஆந்திரா மற்றும் தெலங்கானாவில் விஜயின் ‘வாரிசு’ திரைப்படம் வெளியாகத் தடைவிதிக்கப்பட்டுள்ளது. “இந்தத் தடையை நீக்காவிட்டால் தமிழகத்தில் தெலுங்குப் படங்களைத் திரையிட விடமாட்டோம்” என எச்சரித்திருக்கிறார் சீமான். இயக்குநர்கள் லுங்குசாமி, பேரரரசு உள்ளிடோரும், “இந்தத் தடையை விலக்காவிட்டால் தமிழகத்தில் மாற்று மொழிப் படங்களை வெளியிடுவதில் சிக்கல் ஏற்படும் என தெரிவித்திருப்பதால் இதுபற்றி சூடான விவாதம் நடத்திக் கொண்டிருக்கிறது தமிழ்த் திரையுலகம்.

என்ன பிரச்சினை?

வம்சி இயக்கத்தில் தில் ராஜூ தயாரிப்பில் நடிகர் விஜய் நடித்திருக்கும் ‘வாரிசு’ திரைப்படம் தமிழ்- தெலுங்கு என பைலிங்குவலாக பொங்கலுக்கு வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

ஆனால், தெலுங்கில் சங்கராந்தி போன்ற விடுமுறை நாட்களின் போது நேரடித் தெலுங்கு படங்களுக்கு மட்டுமே முதலில் முக்கியத்துவம் அளிக்கப்பட்டு தியேட்டர்கள் கொடுக்கப்படும் எனவும் டப் செய்யப்பட்டு வெளியாகும் படங்களுக்கு குறைவான தியேட்டர்களே ஒதுக்கப்படும் எனவும் இதற்கு முன்பே தயாரிப்பாளர் தில் ராஜூ தீர்மானம் கொண்டு வந்திருக்கிறார். அந்தத் தீர்மானம் இப்போது அவரது ‘வாரிசு’ படத்திற்கே எதிராக திரும்பியுள்ளது.

இதனால், ‘வாரிசு’ திரைப்படம் தெலுங்கிலும் நேரடியாக பொங்கல் விடுமுறைக்கு வெளியாகுமா அல்லது தள்ளிப்போகுமா என விவாதங்கள் எழுந்துள்ளது. இந்த நிலையில், இயக்குநர்கள் சீமான், பேரரசு, லிங்குசாமி ஆகியோர் இதற்கு கடுமையான கண்டனங்களைத் தெரிவித்துள்ளனர்.

‘வாரிசு’ திரைப்படம் தெலுங்கில் முன்பு தீர்மானித்த தேதியில் வெளியாகவில்லை என்றால் தமிழிலும் பிறமொழிப் படங்களின் வெளியீட்டிற்குக் கடுமையான நிபந்தனைகள் விதிக்கப்படும். இனி ‘வாரிசு’க்கு முன், பின் என தமிழ் சினிமா பிரிக்கப்படும் எனவும் எச்சரித்துள்ளனர்.

வட்டார மொழிப் படங்களுக்கு முக்கியத்துவம்

‘வாரிசு’ படத்தின் பிரச்சினை குறித்து இயக்குநரும், தயாரிப்பாளருமான சி.வி.குமாரிடம் பேசினோம், “தெலுங்கில் இதுபோன்ற மற்ற மொழிப் படங்களுக்கு விடுமுறை தினத்தில் முக்கியத்துவம் தர மாட்டார்கள். அதேபோல, கன்னடத்தில் வெகுநாட்களாக மற்ற மொழிப்படங்களை டப் செய்து வெளியிடாமல் இருக்கிறார்கள். ஆனால், தமிழில் இதுபோன்று எந்தவொரு விதிமுறைகளும் நமக்கு இல்லை. இதுபோன்று நாமும் சில விதிமுறைகளைக் கொண்டு வருவது நம்முடைய சிறு பட்ஜெட் படங்களையும், வட்டார மொழிப் படங்களையும் பாதுகாக்கவும், சரியான எண்ணிக்கையில் தியேட்டர்களை ஒதுக்கவும் உதவும் என்பது உண்மைதான்.

 சி.வி.குமார்
சி.வி.குமார்

நம்முடைய தமிழ்ப் படங்களுக்கு மட்டுமல்ல, எந்தவொரு வட்டார மொழிப் படத்துக்கும் முதலில் முக்கியத்துவம் தர வேண்டும் என்பதுதான் என்னுடைய எண்ணம். அதுதான் சரியாகவும் இருக்கும். உதாரணத்திற்கு சொல்ல வேண்டும் என்றால், ’அவதார்’ போன்ற ஹாலிவுட் படத்தை எடுத்துக் கொள்வோம். அது ஆங்கிலத்தில் மட்டும் வெளியானால் பரவாயில்லை. அதை டப் செய்து 250 நாடுகளில் வெளியிட்டார்கள். அதுபோன்ற சமயங்களில் அந்தந்த வட்டார மொழிப் படங்கள் பாதிக்கப்படும் என்பது உண்மைதான்.

இதுபோன்ற எந்தவொரு விவாதத்தையும் நான் வரவேற்கிறேன். அதுதான் ஒரு நல்ல தீர்வைக் கொண்டு வரும். ‘வாரிசு’ படம் எப்படியானாலும் தெலுங்கில் குறித்த தேதியில் வெளியாகி விடும். ஒருவேளை, வெளியாகவில்லை என்றால், இனி தமிழில் நாமும் இதுபோன்ற கடுமையான நிபந்தனைகளை பிறமொழிப் படங்களுக்கு எடுத்து வரவேண்டிய நிலை வரும்” என்றார்.

வாரிசு’ தெலுங்கில் வெளியாகுமா?

இந்தப் பிரச்சினையின் ஆரம்பம் குறித்தும், பின்னணி குறித்தும் பத்திரிக்கையாளர் ஜெ.பிஸ்மியிடம் பேசினோம், “இந்தப் பிரச்சினை இங்கே சமூக வலைதளங்களில் பேசுவது போல மிகப்பெரிய பிரச்சினையாக மாறுவதற்கு வாய்ப்பில்லை. ஏனெனில், ஆந்திராவில் ஆக்டீவ் புரொடியூசர்கள் எல்லாம் சேர்ந்து வைத்திருக்கும் தயாரிப்பாளர்கள் சங்கத்தின் தலைவர்தான் தில் ராஜூ. மற்ற மொழிப் படங்களுக்கு குறைவான முக்கியத்துவம் என்ற தீர்மானத்தை கடந்த 2019-ல், தில் ராஜூதான் கொண்டு வந்தார். எந்தவொரு சமயத்தில் இந்த தீர்மானம் வந்தது என்றால், ‘பேட்ட’ படம் தமிழில் வெளியான சமயத்தில் தெலுங்கிலும் டப் செய்து கொண்டு வந்தார்கள்.

இதற்கு எதிராகதான் தில் ராஜூ தீர்மானத்தைக் கொண்டு வந்தார். அந்தப் படத்தை டப் செய்து கொண்டு வந்தவர் பிரசன்னகுமார். இவர்தான் தில் ராஜூவின் இந்தத் தீர்மானத்தை இப்போது கொண்டு வந்திருக்கிறார். காரணம், தில் ராஜூவின் அந்த தீர்மானத்தால் அப்போது பாதிக்கப்பட்டவர் அவர்தான்” என்றார் அவர்.

‘வாரிசு’ படம் தெலுங்கில் பொங்கல் பண்டிகைக்கு வெளியாவதில் சிக்கல் இருக்குமா என்று கேட்டதற்கு,

ஜெ.பிஸ்மி
ஜெ.பிஸ்மி

“தில் ராஜூ தெலுங்கில் முன்னணித் தயாரிப்பாளர் மட்டுமல்ல... விநியோகஸ்தரும் கூட. அதனால் அவரைப் பகைத்துக் கொள்வது தெலுங்கில் நடக்காது. மேலும், இந்தப் பிரச்சினைக்கு தில் ராஜு தரப்பில் சொல்வது என்னவென்றால் , ‘வாரிசு’ திரைப்படம் ஒரு பைலிங்குவல் படம். ஆரம்பத்தில் இருந்தே ‘வாரிசு’ -’வாரசுடு’ என்ற அறிவித்து வருகிறார்கள். மேலும், தமிழைப் போலவே தெலுங்கு நடிகர்களும் இந்தப் படத்தில் நடித்திருக்கிறார்கள். சென்னையைப் போலவே ஹைதராபாத்திலும் படப்பிடிப்பு நடத்தி இருக்கிறார்கள். மேலும், தெலுங்கில் விஜய் படத்திற்கு ஒரு நல்ல ஓப்பனிங் இருக்கிறது. அதனால் ‘வாரிசு’ தெலுங்கில் சங்கராந்தி பண்டிகைக்கு வெளியாகும் என்பதில் சந்தேகம் இல்லை.

அதுவுமில்லாமல், தங்களுடைய மொழிப் படங்களுக்கு முக்கியத்துவம் தரவேண்டும் என்று அவர்கள் நினைப்பதில் தவறில்லையே. அந்த தீர்மானத்தை நாம் கொண்டு வரத் தவறிவிட்டோம். உதாரணத்திற்கு ‘பீஸ்ட்’ வெளியான சமயத்தில் ‘கே.ஜி.எஃப் 2’ வெளியாகி அந்தப் படத்தின் வசூலைப் பாதித்தது. நீண்ட நாட்களாக கன்னட சினிமாத் துறையில் பிற மொழிப் படங்களை டப் செய்து வெளியிடுவதை தடுத்து இருக்கிறார்கள். அதுபோல, தமிழிலும் நடவடிக்கை எடுக்கலாமே தவிர இதில் பகைமையை வளர்க்கக் கூடாது” என்றார் பிஸ்மி.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in