விஜய் நடிக்கும் ‘வாரிசு’... பிரபல காமிக்ஸ் கதையா?

விஜய் நடிக்கும் ‘வாரிசு’... பிரபல காமிக்ஸ் கதையா?

’பீஸ்ட்’ படத்துக்குப் பிறகு நடிகர் விஜய் நடிக்கும் 66-வது படம் ‘வாரிசு’. ராஷ்மிகா மந்தனா, குஷ்பு, பிரகாஷ் ராஜ் உள்ளிட்ட பலர் இந்தப் படத்தில் நடிக்கின்றனர். சென்னை, ஹைதராபாத் என மாறி மாறி படப்பிடிப்பு நடந்து வருகிறது. நான்காவது கட்ட படப்பிடிப்பு தற்போது ஹைதராபாதில் நடந்துவருகிறது.

கடந்த மாதம் நடிகர் விஜயின் பிறந்தநாளன்று ‘வாரிசு’ படத்தலைப்பு அறிவிக்கப்பட்ட நொடியிலிருந்தே கதை இதுவாகத்தான் இருக்கும் ரசிகர்கள் இணையத்தில் தங்கள் ஊகங்களைப் பதிவிட்டு வந்தனர். இந்த நிலையில் தற்போது ‘வாரிசு’ படம் ‘லார்கோ வின்ச்’ என்ற காமிக்ஸ் கதாபாத்திரத்தை தழுவி எடுக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. வணிகத்தில் வெற்றிகரமாக இருக்கும் ஒருவர் தனக்கு பின்பு தன் தொழில் நிறுவனங்களை நிர்வகிக்கவும் எதிரிகளைக் கையாளவும் யாருக்கும் தெரியாமல் ஓர் இளைஞனை ‘வாரிசாக’ தத்தெடுக்கிறார்; எனினும் அவர்களுக்குள் ஏதோ ஒரு ரத்த உறவு இருக்கிறது என்பதுதான் இந்த காமிக்ஸின் அடிநாதம்.

பெல்ஜியத்தைச் சேர்ந்த ழாவ் வான் ஹேமி என்பவர் தான் இந்த ‘லார்கோ வின்ச்’ கதாபாத்திரத்தை உருவாக்கியவர். ஆரம்பத்தில் நாவல் தொடர்களாக வெளிவந்த இந்தக் கதை போதிய வரவேற்பில்லாமல் நிறுத்தப்பட்டுவிட்டது. பின்னர் 1970-களில் இது காமிக்ஸ் தொடராக வெளியாகி உலகமெங்கும் பெரும் வெற்றி பெற்றது. லயன் - முத்து காமிக்ஸ் வழியாகத் தமிழ் காமிக்ஸ் வாசகப் பரப்பிலும் ரசிகர் வட்டாரம் கொண்ட கதாபாத்திரம் இது. 2001-ல் தொலைக்காட்சித் தொடராகவும், 2008-ல் திரைப்படமாகவும் அதற்கு பின்பு 2011-ல் படத்தின் சீக்குவலும் வந்து ரசிகர்களிடையே வரவேற்பைப் பெற்றது.

மேலும், ‘லார்கோ வின்ச்- எம்யர் அண்டர் த்ரெட்’ என்ற ஆக்‌ஷன் அட்வென்ச்சர் வீடியோ கேமும் இளைஞர்களிடையே வெற்றி கண்டது. தற்போது ‘வாரிசு’ பட இயக்குநரான வம்சி ஏற்கெனவே இயக்கிய ‘தோழா’ படமும் பிரெஞ்சு படத்தின் ரீமேக் தான். அதனால், ‘வாரிசு’ படமும் இந்த நாவல் கதையாக இருக்க அதிக வாய்ப்புள்ளதாக தெரிகிறது. ஆனால், இது பற்றி படக்குழு எதுவும் இன்னும் அதிகாரபூர்வமாக அறிவிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

2012-ல் கவுதம் மேனன் இயக்கத்தில் விஜய் நடிப்பதாகச் சொல்லப்பட்ட ’யோஹன்: அத்தியாயம் ஒன்று’ திரைப்படம், லார்கோ வின்ச் கதாபாத்திரத்தைத் தழுவி உருவாக்கப்பட்டதாகத் தகவல்கள் பரவின. அந்தப் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர், லார்கோ வின்ச் திரைப்பட போஸ்டரைப் போலவே உருவாக்கப்பட்டிருந்தது அப்போது விவாதங்களைக் கிளப்பியது. எனினும், அந்தப் படம் பல்வேறு காரணங்களால் கைவிடப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in