
'லியோ’ படம் உலகளவில் 500 கோடி ரூபாயை வசூல் செய்துள்ள நிலையில் படத்தின் வெற்றி விழா எப்போது நடைபெற இருக்கிறது என்பது குறித்தானத் தகவல் தற்போது வெளியாகியுள்ளதால் ரசிகர்கள் உற்சாகத்தில் உள்ளனர்.
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடித்துள்ள ‘லியோ’ திரைப்படம் கலவையான விமர்சனங்களைப் பெற்றிருந்தாலும் உலகளவில் இந்தத் திரைப்படம் 500 கோடி ரூபாய் வசூலைத் தாண்டியிருக்கிறது. இதனைப் படக்குழு அதிகாரபூர்வமாக அறிவித்துள்ள நிலையில் ரசிகர்கள் உற்சாகமாக இதனை சமூக வலைதளப் பக்கத்தில் டிரெண்ட் செய்து வருகின்றனர்.
’லியோ’ திரைப்படம் வெளியாகும் முன்பு அதன் டிரெய்லர், பாடல் காட்சிகளில் இடம்பெற்றிருந்த சிகரெட் பிடிக்கும் காட்சிகள், போதைப் பழக்கத்தை ஊக்குவிக்கும் வகையிலான பாடல் வரிகள், பெண்களை இழிவுப்படுத்தும் வார்த்தைகள் எனத் தொடர்ச்சியான சர்ச்சைகளை சந்தித்தது.
இதுமட்டுமல்லாது, சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் நடைபெற இருந்த ‘லியோ’ படத்தின் இசை வெளியீட்டு விழாவும் கடைசி நேரத்தில் ரத்தானது. இதற்கு முன்பு இசையமைப்பாளர் ரஹ்மானின் சென்னை இசை நிகழ்ச்சி ஏற்பாட்டில் நடந்த குளறுபடிகளும் ‘லியோ’ இசை வெளியீட்டு விழா ரத்தாக முக்கிய காரணமாக சுட்டிக் காட்டப்பட்டது.
ரஹ்மான் நிகழ்ச்சியில் நடந்தது போல, போலி டிக்கெட்டுகள், அளவுக்கதிகமான ரசிகர்கள் பட்டாளம் போன்றவற்றால் ‘லியோ’ இசை வெளியீட்டு விழாவில் அசம்பாவிதம் ஏதும் ஏற்பட்டுவிடக்கூடாது என்பதற்காகவே இசை வெளியீட்டு விழா ரத்து செய்யப்பட்டது என லோகேஷ் கனகராஜ் தெரிவித்திருந்தார்.
இசை வெளியீட்டு விழா ரத்து செய்யப்பட்டாலும் விரைவில் ‘லியோ’ படத்தின் வெற்றி விழாவில் சந்திப்போம் எனவும் கூறியிருந்தார். அதன்படி, தற்போது நவம்பர் ஒன்றாம் தேதி சென்னையில் இதன் சக்சஸ் மீட் நடக்க இருக்கிறது என நடிகர் மன்சூர் அலிகான் தனது சமீபத்திய பத்திரிகை செய்தியில் குறிப்பிட்டுள்ளார். இதற்கு முன்பு, கேரளாவில் ‘லியோ’ படத்தின் வெற்றி விழா நடந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் வாசிக்கலாமே...
ஷவர்மா சாப்பிட்ட இளைஞர் உயிரிழப்பு; கேரளத்தில் மீண்டும் பரபரப்பு!
அதிர்ச்சி... தூக்கில் தொங்கிய 10 ம் வகுப்பு மாணவி! மர்ம மரணமாக போலீஸார் விசாரணை!
பெரும் சோகம்... டேங்கர் லாரியை மறைத்த பனிமூட்டம்... விபத்தில் 12 பேர் உயிரிழப்பு!
தொடர் துப்பாக்கிச் சூடு: 22 பேர் பலியான பரிதாபம், 50 பேர் காயம்