
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிகர் விஜய் நடித்து வரும் 'தளபதி 67' படத்தின் டைட்டில் தற்போது 'லியோ- ப்ளடி ஸ்வீட்' என அறிவிக்கப்பட்டுள்ளது. ஜனவரி முதல் வாரத்தில் சென்னையில் படப்பிடிப்பு பூஜையுடன் தொடங்கியது. படத்தில் நடிகை த்ரிஷா, சாண்டி, கெளதம் மேனன், மன்சூர் அலிகான், ப்ரியா ஆனந்த் என பலரும் நடிக்க அனிருத் இசையமைக்கிறார். படத்தின் பூஜை வீடியோவும் வெளியானது. தற்போது படக்குழு தனி விமானத்தில் அடுத்தக் கட்டப் படப்பிடிப்புக்காக காஷ்மீர் சென்றுள்ளது. இந்த வாரம் முழுக்க அடுத்தடுத்து 'தளபதி 67' படத்தின் அப்டேட் வரிசையாக கொடுக்கப்படும் என படக்குழு அறிவித்திருந்த நிலையில் இன்று 'லியோ' என படத்தின் தலைப்பை அறிவித்துள்ளது.
ஏற்கெனவே, 'விக்ரம்' படத்தின் அறிவிப்பும் புரோமோ வீடியோவாக தனியாக வெளியானது. அதே ஸ்டைலில், லோகேஷ் கனகராஜ் 'லியோ' அறிவிப்பையும் கிட்டத்தட்ட 3 நிமிடங்களுக்குள் வரும் வீடியோவாக வெளியிட்டுள்ளார். விஜய் சாக்லேட் செய்து கொண்டிருக்கும்படியாக சாந்தமான ஒரு தோற்றமும் இன்னொரு பக்கம் கேங்க்ஸ்டராக மற்றொரு தோற்றத்திலும் வருகிறார்.
'விக்ரம்' படத்தின் ஏஜெண்ட் டீனா, 'கைதி'யின் ஜார்ஜ் மரியான் ஆகியோரும் படத்தில் இருக்கும் நிலையில் 'லியோ' திரைப்படமும் இயக்குநர் லோகேஷ் கனகராஜின் 'LCU'-க்குள் வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.