’லியோ’ படத்தின் வெற்றி விழாவை முடித்து விட்டு நடிகர் விஜய் ‘தளபதி 68’ படப்பிடிப்பில் பங்கேற்பதற்காக இன்று அதிகாலை சென்னையில் இருந்து விமானம் மூலம் தாய்லாந்து புறப்பட்டு சென்றார்.
விஜய் நடிப்பில் வெளியான ‘லியோ’ திரைப்படம் வசூல் ரீதியாக வெற்றிப் பெற்றதைுத்து இதன் வெற்றி விழா நேரு உள்விளையாட்டு அரங்கத்தில் நேற்று முன்தினம் நடைபெற்றது. இதில் ரஜினிக்கு பதிலடி கொடுக்கும் விதமாக அமைந்த விஜயின் பேச்சும் ரசிகர்கள் மத்தியில் கவனம் பெற்றது. ’லியோ’ வெற்றி விழா நல்லபடியாக முடிவடைந்த நிலையில் தற்போது நடிகர் விஜய் ‘தளபதி 68’ படத்தின் இரண்டாம் கட்ட படப்பிடிப்பிற்காக தாய்லாந்து சென்றுள்ளார். தாய்லாந்தின் தலைநகர் பாங்காக்கில் நடைபெறும் படப்பிடிப்பில் கலந்து கொள்கிறார்.
முதல் கட்டப் படப்பிடிப்பு முடிவடைந்து 15 நாட்கள் கழித்து இரண்டாம் கட்டப் படப்பிடிப்புத் தொடங்கியுள்ளது. முதல் கட்டப் படப்பிடிப்பில் ஆக்ஷன் காட்சிகளும், ஒரு பாடலும் படமாக்கப்பட்ட நிலையில், பாங்காக்கில் ஆக்ஷன் காட்சிகள் படமாக்கப்படவுள்ளது. வெங்கட்பிரபு மற்றும் படக்குழுவினர் ஏற்கனவே தாய்லாந்தில் உள்ள நிலையில் தற்போது நடிகர் விஜய், கெத்தாக பி.எம்.டபிள்யூ காரில், சென்னை விமான நிலையத்திற்கு வந்திறங்கும் வீடியோ வைரலாகி வருகிறது.