
பாலிவுட்டில் தற்போது அதிக படங்களில் விஜய்சேதுபதி நடித்து வருகிறார்.
’கடைசி விவசாயி’, ‘விக்ரம்’, ‘காத்துவாக்குல ரெண்டு காதல்’, ‘19 (1) (a)’ என தன்னுடைய சமீபத்திய படங்களின் தேர்வு மூலம் கதாநாயகனாக மட்டுமல்லாது கதாபாத்திரத்தின் முக்கியத்துவம் அறிந்து அதில் நடித்ததன் மூலமும் கவனம் பெற்றார் விஜய்சேதுபதி. தற்போது தமிழில் இயக்குநர் வெற்றிமாறனின் ‘விடுதலை’ படத்தை கைவசம் வைத்திருப்பவர், இதற்கடுத்து ஒப்பந்தமாகி இருப்பது அனைத்தும் பாலிவுட் படங்கள் என்பது அவரது ரசிகர்களிடையே உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.
இயக்குநர் அட்லி பாலிவுட்டில் இயக்குநராக அறிமுகமாகும் ‘ஜவான்’ படத்தில் ஷாருக்கானுக்கு வில்லனாக நடிக்க சம்மதம் தெரிவித்துள்ளார் விஜய்சேதுபதி. ஏற்கெனவே, இந்தப் படத்தில் நடிகர் விஜய் சிறப்புத் தோற்றத்தில் நடித்துள்ள நிலையில் ஷாருக்கானுக்கு விஜய்சேதுபதி வில்லன் என்பது படத்திற்கு கூடுதல் ப்ளஸ்.
‘மாஸ்டர்’ படத்தில் விஜய் vs விஜய்சேதுபதி, ‘விக்ரம் வேதா’ படத்தில் மாதவன் vs விஜய்சேதுபதி என மாஸான ஆக்ஷன் காட்சிகள் எப்படி ரசிகர்களால் கொண்டாடப்பட்டதோ அதுபோல வலுவான ஆக்ஷன் காட்சிகள் ஷாருக்கான் மற்றும் விஜய்சேதுபதிக்கு இடையில் படமாக்கப்பட இருக்கிறது.
இந்தப் படம் தவிர்த்து ’மெர்ரி கிறிஸ்துமஸ்’, ‘காந்தி டாக்ஸ்’ ஆகிய பாலிவுட் படங்களிலும் ஒப்பந்தமாகி இருக்கிறார். ’மெர்ரி கிறிஸ்துமஸ்’ படத்தை பாலிவுட் இயக்குநர் ஸ்ரீராம் ராகவன் இயக்குகிறார். இப்படத்தில் விஜய் சேதுபதி நாயகனாக நடிக்கிறார். அவருக்கு ஜோடியாக பாலிவுட் நடிகை கத்ரீனா கைஃப் நடிக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு இறுதிக்கட்டத்தை எட்டி உள்ளது. இதுதவிர காந்தி டாக்ஸ் என்கிற மெளன படத்திலும் நடிக்கிறார் விஜய் சேதுபதி. இப்படத்தை கிஷோர் பாண்டுரங் இயக்குகிறார்.
’விடுதலை’ படம் தவிர்த்து தமிழிலும் ஒரு படத்தில் கதாநாயகனாக நடிக்க உள்ளார். இதில் விஜய் சேதுபதியுடன் இணைந்து வடிவேலுவும் நடிக்க உள்ளார். முழுக்க முழுக்க நகைச்சுவை கதையம்சம் கொண்ட இப்படத்தை ஆறுமுககுமார் இயக்க இருப்பதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
இவர் ஏற்கெனவே விஜய் சேதுபதி நடித்த ‘ஒரு நல்ல நாள் பார்த்து சொல்றேன்’ என்கிற படத்தை இயக்கியவர். இப்படத்தை ஆறுமுககுமாரே தயாரிக்க உள்ளதாகவும் கூறப்படுகிறது. முதல்முறையாக வடிவேலுவும், விஜய் சேதுபதியும் இணைந்து நடிக்க உள்ள படம் என்பதால் இப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் அதிகரித்துள்ளது.