பத்து ஆண்டுகளுக்கு பின்னர் மனம் திறந்த ’கூல்’ விஜய்!

பத்து ஆண்டுகளுக்கு பின்னர் மனம் திறந்த ’கூல்’ விஜய்!

பெரும் ரசிக எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் நாளை மறுநாள் (ஏப்.13) திரையரங்குகளில் வெளியாக உள்ளது ’பீஸ்ட்’ திரைப்படம். சில வளைகுடா நாடுகள் தடை விதிப்பு, தமிழகத்திலும் சில அமைப்புகள் சார்பிலான தடை கோரிக்கை என எழுந்திருக்கும் சர்ச்சைகளின் நிழல் எதுவுமின்றி, ’விஜய்யுடன் நேருக்கு நேர்’ என்ற தலைப்பிலான பேட்டி நேற்று இரவு (ஏப்.10) சன் டிவியில் வெளியானது. ஆடியோ லாஞ்ச் நடைபெறாத குறையை நிவர்த்தி செய்யும் வகையிலும், சுமார் 10 ஆண்டுகள் இடைவெளிக்குப் பிறகு விஜய் அளிக்கும் பேட்டி என்பதாலும், இந்த நிகழ்ச்சிக்கு எதிர்பார்ப்புகள் எகிறிக் கிடந்தன.

பேசி வைத்து உருவாக்கிய ’பேட்டி’யாகவே புலப்பட்டபோதும் சுவாரசியங்களுக்கு குறைவில்லை. கேள்விகளை எழுப்பிய பீஸ்ட் இயக்குநர் நெல்சன் தன்னுடைய பாணியில் கலகலப்பாகவே உரையாடலை கொண்டு சென்றார். பீஸ்ட் திரைப்படத்துக்கு அப்பால், விஜய்யின் இயல்பு வாழ்க்கை, விஜய் மகன் சஞ்சய் சினிமா வருகை, விஜய் மக்கள் இயக்கத்தினர் தேர்தல் பிரவேசம், விஜய்யின் அரசியல் நுழைவு குறித்தான கேள்விகளும் அவற்றில் இடம்பெற்றிருந்தன. வாக்குச்சாவடிக்கு சைக்கிளில் சென்றது, ரோல்ஸ்ராய்ஸ் கார் ஆகிய சர்ச்சைக்குள்ளான விவகாரங்களையும் விஜய் பேட்டி தொட்டுச் சென்றது.

ஊடக பேட்டிக்கு 10 ஆண்டுகள் இடைவெளி விட்டது தொடர்பான தன்னிலை விளக்கம் விஜய் பதில்களில் முதலாவதாக வெளிப்பட்டது. தான் அளித்த பேட்டி ஒன்று வேறு விதத்தில் பிரசுரமாகி இருந்ததில் அதிருப்தியடைந்ததே இந்த நீண்ட இடைவெளிக்கு காரணம் என மனம் திறந்தார் விஜய்.

தொடர்ந்து விஜய்யின் எளிமை, இனிமை உள்ளிட்ட உதாரணங்களை விதந்தோதும் வகையில், விஜய்யின் பதில்கள் வெளிப்படுமாறு சில கேள்விகளை நெல்சன் கேட்டார். பைரவா போன்ற படங்களில் தந்தையுடன் தோன்றி நடனமாடியிருக்கும் மகன் சஞ்சய்யின் சினிமா அறிமுகம் குறித்த விவாதங்கள் விஜய் ரசிகர்கள் மத்தியில் அவ்வப்போது எழுந்தடங்கும். அது குறித்தும் மனம் திறந்தார் விஜய்.

மகன் சஞ்சய் உடன்
மகன் சஞ்சய் உடன்

”பிரேமம் திரைப்படத்தின் இயக்குநர் (அல்போன்ஸ் புத்திரன்) ஒருமுறை என்னை சந்திக்க வந்திருந்தார். எனக்காக கதை சொல்லப் போகிறார் என ஆர்வமாக இருந்தேன். அவரோ மகன் சஞ்சய்யின் சினிமா அறிமுகம் குறித்து பேச ஆரம்பித்தார். இது பற்றி சஞ்சய்யிடம் பிறகு பேசினோம். இன்னும் 2 வருடம் போகட்டும் என்று அவர் கூறியதால் அப்படியே விட்டிருக்கிறோம்” என்று தெரிவித்திருக்கிறார் விஜய். ஜூனியர் விஜய்யின் திரை அறிமுகத்தை விரைவில் எதிர்பார்க்கலாம்.

கடவுள் வழிபாடு, ஆன்மிக ஈடுபாடு குறித்த பேச்சினூடாக, “சர்ச்சுக்கு மட்டுமல்ல; பிள்ளையார்பட்டி விநாயகர் கோயிலுக்கும், கடப்பாவின் பிரபல தர்காவுக்கும் சென்றிருக்கிறேன். கிறிஸ்துவ தாய், இந்து தந்தைக்கு பிறந்த நான் எல்லா வழிபாட்டு தலங்களிலும் ஒரே மாதிரியான இறையுணர்வை பெறுகிறேன். எனது குழந்தைகளின் வழிபாட்டு உரிமையிலும் குறுக்கிடாது இருக்கிறேன்” என்றார்.

விஜய்யுடன் சர்ச்சைக்குள்ளான பல கேள்விகளும் அவற்றுக்கான பதில்களும் இவ்வாறே அமைந்தன. தந்தை குறித்த கேள்விக்கு, “கடவுளுக்கும் பெற்றோருக்கும் ஒரு வித்தியாசம் மட்டுமே உண்டு. கடவுளை பார்க்க முடியாது; பெற்றோரை பார்க்கிறோம். இது மட்டுமே கடவுள் மற்றும் பெற்றோர் இடையிலான வேறுபாடு” என திரைப்பட முத்திரை வசனங்களின் பாணியில் பஞ்ச் வைத்தார். அதற்கு அப்பால் தந்தை எஸ்.ஏ.சந்திரசேகருடனான உரசல், வழக்கு விவகாரம் குறித்த தகவல்கள் இந்த ‘பேட்டி’யில் கவனமாக தவிர்க்கப்பட்டிருந்தன.

அடுத்ததாக ’ஆடியோ லாஞ்ச்’ நிகழ்வுகளில் நிச்சயம் இடம்பெறும் ’குட்டி ஸ்டோரி’யும் இந்த பேட்டியில் இடம்பெற்றது. ’கால்பந்து ஒன்று தன்னில் அடைக்கப்பட்ட காற்றினை பிறருக்கு வழங்க விரும்பாததால் உதைபடுகிறது; ஆனால் புல்லாங்குழலோ தன்னில் நுழையும் காற்றை இசையாக வெளிப்படுத்துவதால் கொண்டாடப்படுகிறது. எனவே, பிறருக்கு உதவியாக இருப்போம்’ என்பதுதான் விஜய் சொன்ன குட்டிக் கதையின் சாராம்சம். கால்பந்து – புல்லாங்குழல் குறியீடுகள் யாரை சுட்டுகின்றன என்பதை முன்வைத்து, விஜய் – அஜித் ரசிகர்கள் இரவு முதலே சமூக ஊடகங்களில் காரசாரமாக மோதி வருகின்றனர்.

இன்னொரு இடத்தில் ஆங்கிலத்தில் விஜய் அருளிய வாசகம் ஒன்றும் அவரது ரசிகர்களால் அதிகம் சிலாகிக்கப்பட்டு வருகிறது. “வாய்ப்பினை இழக்க நேரிட்டால் கண்களில் கண்ணீரை நிரப்பாதீர்கள்; அது எதிரில் தென்படும் இன்னொரு சிறப்பான வாய்ப்பை மறைத்துவிடும்” என்பதாக பொருள்படும் வாசகத்தை வழங்கியவர், ‘ஒரு வாழ்க்கைங்க, ஜாலியா இருங்க’ என்ற தனது பின்னிணைப்பையும் வசீகர முறுவலுடன் தந்தார். இந்த வாசகமும் சமூக ஊடகங்களில் தற்போது அதிகம் பகிரப்பட்டு வருகிறது.

‘வாக்குச்சாவடிக்கு சைக்கிளில் சென்றதில்’ விஜய்யால் சர்ச்சைக்கு ஆளான இன்னொரு விவகாரம் குறித்து பளிச் பதிலும் கிடைத்தது. ”வீட்டுக்கு பின் தெருவில் வாக்குச்சாவடி இருந்தது. சைக்கிளில் போவது வசதி என தோன்றியதால் அப்படி போனேன்” என்று பதிலளித்து, மேற்படி விஜய்யின் சைக்கிள் விஜயத்தில் பல அடுக்கிலான குறியீடுகள் கண்டவர்களைச் சோர்வுறச் செய்தார்.

அதேபோன்று அண்மை சர்ச்சையான விஜய்யின் ரோல்ஸ்ராய்ஸ் கார் குறித்த நெல்சனின் உப்புச்சப்பில்லாத கேள்வி ஒன்றும் பேட்டியின் ஊடாக துறுத்தலாக நின்றது. அதற்கு விஜய்யின் பதிலாக, படக்குழுவினருடன் ரோல்ஸ்ராய்ஸில் விஜய் பவனி வந்த வீடியோவை ஒளிபரப்பினார்கள். பீஸ்ட் சக நடிகையான அபர்ணா சுடச்சுட அதே வீடியோவை ட்விட்டரில் பகிர்ந்து வைரலாக்கி விட்டார்.

விஜய் மக்கள் இயக்கத்தினரின் தேர்தல் பிரவேசம் குறித்த கேள்விக்கு விஜய் அளித்த பதில் ரஜினியின் பேட்டிகளை நினைவூட்டியது. ’உள்ளாட்சித் தேர்தலில் என்னுடைய புகைப்படத்தை உபயோகித்துக்கொள்ள அனுமதி கேட்டவர்களுக்கு இசைவு தெரிவிக்கப்பட்டது’ என்பதாக தான் சார்ந்த அரசியல் களமாடலை தன்னடக்கத்தின் பெயரில் சுருக்கிக்கொண்டார் விஜய். ’இளைய தளபதி என்ற முன்னொட்டு ’தளபதி’ ஆனது போல, தளபதி எப்போது தலைவர் ஆவார் என்ற நெல்சனின் கேள்விக்கு ‘அதற்கான சூழ்நிலை அமைய வேண்டும்’ என்று ரஜினி பாணியில் ரசிகர்களின் எதிர்பார்ப்புகளை கிளறிவிட்டார் விஜய்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in