
நடிகர் விஜய்க்கு வருமான வரித்துறை ரூ.1.50 கோடி ரூபாய் அபராதம் விதித்துள்ளது.
கடந்த 2015ம் ஆண்டு நடிகர் விஜய், சிம்பு தேவன் இயக்கத்தில் ‘புலி’ திரைப்படத்தில் நடித்திருந்தார். இந்தப் படத்திற்கு நடிகர் விஜய் ரூபாய் 15 கோடி சம்பளம் பெற்றதாகவும் ஆனால், அதை மறைத்ததாக, நடிகர் விஜய்க்கு ரூபாய் ஒன்றரை கோடி அபராதம் விதித்துள்ளது வருமான வரித்துறை.
கடந்த 2016-17ம் நிதியாண்டிற்கான வருமான வரி கணக்கை நடிகர் விஜய் தாக்கல் செய்த போது, அந்த ஆண்டிற்கான வருமானமாக 35 கோடியே 42 லட்சத்து 91 ஆயிரத்து 890 ரூபாய் பெற்றதாக குறிப்பிட்டிருந்தார். அந்த ஆண்டுக்கான மதிப்பீட்டு நடவடிக்கையை மேற்கொண்ட வருமான வரித்துறை, நடிகர் விஜய் வீட்டில் கடந்த 2015ம் ஆண்டு நடத்திய சோதனையில் கைப்பற்றப்பட்ட ஆவணங்களுடன் ஒப்பிட்டு பார்த்தது.
அதன்படி, ’புலி’ படத்திற்கு பெற்ற 15 கோடி ரூபாய் வருமானத்தை கணக்கில் காட்டவில்லை என கண்டறிந்தது. இந்த வருமானத்தை மறைத்ததற்காக ஒன்றரை கோடி ரூபாய் அபராதம் விதித்து கடந்த ஜூன் மாதம் 30ம் தேதி வருமான வரித்துறை உத்தரவு பிறப்பித்தது.
இந்த உத்தரவை எதிர்த்து நடிகர் விஜய் தரப்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கில், ‘அபராதம் விதிப்பதாக இருந்திருந்தால், 2019ம் ஆண்டிலேயே உத்தரவு பிறப்பித்திருக்க வேண்டும். எனவே காலதாமதமாக பிறப்பிக்கப்பட்ட உத்தரவை ரத்து செய்ய வேண்டும்’ என மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த மனுவை விசாரித்த உயர்நீதிமன்றம், வருமான வரித்துறை உத்தரவுக்கு இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டது. மேலும் மனுவுக்கு வருமானவரித்துறை பதிலளிக்கவும் உத்தரவிட்டிருந்தது.
இந்த வழக்கு மீண்டும் நீதிபதி அனிதா சுமந்த் முன்பு விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி, ஏற்கெனவே பிறப்பித்த இடைக்கால தடை உத்தரவை நீட்டித்து உத்தரவிட்டு வழக்கை தள்ளி வைத்தார்.
இந்த வழக்கில் வருமான வரித்துறை தரப்பில் நேற்று பதில் மனு தாக்கல் செய்ததை அடுத்து, நடிகர் விஜய் தரப்பில் கால அவகாசம் கேட்கப்பட்டது. இதனையடுத்து வழக்கு விசாரணையானது வரும் 30ம் தேதிக்கு தள்ளி வைக்கப்பட்டுள்ளது.
இதையும் வாசிக்கலாமே...
கேபி சுந்தராம்பாள் பிறந்தநாள் பகிர்வு! கதையைத் தேர்ந்தெடுத்த ரியல் ஹீரோயின்!
ஆப்கானிஸ்தான் நிலநடுக்கம்… பலி எண்ணிக்கை 4 ஆயிரமாக உயர்வு!
மகனுக்கா... மருமகளுக்கா? சிவகங்கை தொகுதிக்கு மோதும் திமுக அமைச்சர்கள்!
காவிரி விவகாரத்தால் இன்று போராட்டம்; முடங்கியது டெல்டா மாவட்டங்கள்!
“லியோ பட ஷூட்டிங்... நடன கலைஞர்கள் சொல்றது பொய்” பெஃப்சி ஆர்.கே. செல்வமணி விளக்கம்!