புஸ்ஸி Vs எஸ்ஏசி: விஜய் மக்கள் இயக்க நிர்வாகிகள் ஊசலாட்டம்?

புஸ்ஸி - விஜய்
புஸ்ஸி - விஜய்

ரசிகர்களை காலில் விழ வைத்தது தொடர்பாக மாநில நிர்வாகி புஸ்ஸி ஆனந்துக்கு எதிராக திரும்பும் விஜய் மக்கள் இயக்க நிர்வாகிகள், எஸ்ஏசி தரப்பிலிருந்து கிடைக்கும் அனுதாபத்தால் குழம்பி போயிருக்கிறார்கள்.

அண்மையில் நடிகர் விஜய் சென்னை பனையூரில் தனது மக்கள் இயக்க நிர்வாகிகளுடனான நேரடி சந்திப்புக்கு ஏற்பாடு செய்திருந்தார். அடுத்து வரும் தேர்தலுக்கான ஆயத்தங்கள், வாரிசு படம் எதிர்நோக்கும் தடைகள், மன்ற நிர்வாகிகள் மத்தியிலான புகார்கள் உள்ளிட்டவை தொடர்பாக இந்த கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டதாகவும் தெரிகிறது. இந்த சந்தடியில், சந்திப்பின் நாயகனாக முக்கியத்துவம் பெற வேண்டிய விஜய், புஸ்ஸி ஆனந்தின் செயல்பாடுகளால் பின் தள்ளப்பட்டதும் நடந்தது. இதையொட்டி பரப்பப்பட்ட வீடியோக்கள் அவற்றுக்கு எழுந்த கண்டனங்கள் ஆகியவை விஜய் மக்கள் இயக்கத்தை புதிய அதிர்வுகளுக்கு ஆளாக்கி உள்ளன.

குறிப்பாக புஸ்ஸி ஆனந்த், நடிகர் விஜய்யின் அதிருப்தியை வெகுவாய் சம்பாதித்திருக்கிறார் என்பதே விஜய் மக்கள் இயக்கத்தினர் மத்தியில் பெரும் பேச்சாக உள்ளது. பனையூர் கூட்டத்தின்போது இயக்க நிர்வாகிகள் ஒவ்வொருவராக புஸ்ஸி ஆனந்த் காலில் விழுங்கி வணங்கிய பிறகே அனுமதிக்கப்பட்டதை விவரிக்கும் வீடியோ சமூக ஊடகங்களில் வைரலானது. இந்த வீடியோவை பார்த்த அஜித் ரசிகர்கள் ’விஜய் அடிமைகள் இயக்கம்’ என்றெல்லாம் கிண்டலடித்தார்கள். சுயமரியாதை போற்றும் மண்ணில் விஜய் மக்கள் இயக்க நிர்வாகியின் போக்கு கடும் விமர்சனத்துக்கும் ஆளானது.

மக்கள் இயக்க நற்பணியை தொடங்கி வைக்கும் புஸ்ஸி ஆனந்த்
மக்கள் இயக்க நற்பணியை தொடங்கி வைக்கும் புஸ்ஸி ஆனந்த்

தொடர்ந்து புஸ்ஸி ஆனந்தை வரவழைத்து தனது அதிருப்தியை தெரிவித்த நடிகர் விஜய், ரசிகர்களிடம் இது போன்ற அணுகுமுறைகளை தவிர்க்குமாறும் அறிவுறுத்தி இருக்கிறார். விஜய் மக்கள் இயக்கத்தின் அசைக்க முடியாத சக்தியாக விளங்கிய புஸ்ஸி ஆனந்த் மீது விஜய் அதிருப்தி அடைந்ததை அடுத்து, ஆனந்துக்கு எதிரான பழைய புகார்கள் பலவற்றையும் ரசிகர் மன்ற நிர்வாகிகள் தூசு தட்டி வருகிறார்கள். மக்கள் இயக்கத்தை கட்டமைப்பதில் பல இடங்களில் கடுமை காட்டிய புஸ்ஸி ஆனந்துக்கு தற்போது போறாத காலமாகி இருக்கிறது.

இந்த இடைவெளியில் விஜய் மக்கள் இயக்கத்தில் ‘அப்பா’ ஆதரவாளர்கள் தங்கள் செல்வாக்கை நிலைநிறுத்த முயற்சிக்கிறார்கள். அவர்களுக்கு அப்பா எஸ்ஏசி தரப்பிலிருந்து உரிய சமிக்ஞைகளும் கிடைத்து வருகின்றனவாம். விஜய்க்கு அருகில் இருப்பவர்கள்தான் தந்தை மகன் தகராறுக்கு முதன்மையான காரணம் என வெளிப்படையாகவே பேசி வந்த எஸ்ஏசி வசம் அதிருப்தி நிர்வாகிகள் புலம்பி தள்ளுகிறார்களாம். விஜய் மற்றும் விஜய் மக்கள் இயக்கத்தின் வளர்ச்சிக்கு அரும்பாடுபட்ட எஸ்ஏசி, தற்போது சோர்ந்திருப்பதையும் விஜய் ரசிகர்கள் கரிசனத்தோடு பார்க்கிறார்கள்.

எஸ்ஏசி
எஸ்ஏசி

நடிகர் விஜயை பொறுத்தளவிலும் எதிர்வரும் தேர்தல் மட்டுமன்றி மாறும் திரை மற்றும் அரசியல் களமாடலுக்கு புதிய ஆலோசனை பீடம் அவசியமாகிறது. மாநிலத்தில் அரசியல் வெற்றிடம், மத்தியில் அவசியமான அரசியல் லாபி குறித்தெல்லாம் கடந்த சில மாதங்களாகவே தனக்கு நெருக்கமான வட்டத்தில் விவாதித்து வரும் விஜய், சரியான நேரத்துக்காக காத்திருக்கிறார் என்கிறார்கள். வாரிசு வெளியீட்டுக்கான பணிகள் முடிந்ததும், தற்போதைய சலசலப்புக்கான தீர்வுகளும், அதன் பின்னர் மக்களவை தேர்தல் நெருக்கத்தில் தொலைநோக்குத் திட்டங்களிலும் விஜய் இறங்குவார் என்கிறார்கள். மன்ற நிர்வாகிகள் மத்தியிலான நம்பிக்கை பகிரல்களும் அவர்களின் சமூக ஊடக பதிவுகளும் இந்த போக்கையே உறுதி செய்து வருகின்றன.

விஜய்
விஜய்

விஜய் காந்த் போல அதிரடியாக களம் காண்பாரா அல்லது ரஜினி காந்த் போல ஏமாற்றுவாரா என்பதுதான் விஜய் ரசிகர்கள் மத்தியில் நீடிக்கும் நெடுநாள் கேள்வி. ஆனால் மன்ற நிர்வாகத்தின் செயல்பாடுகளை சீரமைப்பதில் இருந்தே விஜய்யின் அரசியல் விஜயம் தொடங்க வேண்டும் என்பதையே புஸ்ஸி சர்ச்சைகளும் அதையொட்டிய ரசிகர் மன்ற அதிருப்திகளும் எடுத்துக்காட்டுகின்றன. கூடவே தந்தை எஸ்ஏசி அனுசரிப்புக்கான தொடரும் தூதுகளுக்கு தீர்வு காணும் நெருக்கடிக்கும் விஜய் ஆளாகி இருக்கிறார். இதையொட்டி ரசிகர் மன்ற நிர்வாகிகள் மற்றும் விஜய்யின் அணுக்க ஆலோசகர்களும் இப்போதே புஸ்ஸி - எஸ்ஏசி என எதிரெதிர் நிலைப்பாடுகளில் தடுமாற தொடங்கியிருக்கின்றனர்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in