இனி எங்கேயும் தப்ப முடியாது: பாலியல் வழக்கில் தலைமறைவான நடிகரை பிடிக்க கேரள போலீஸ் அதிரடி

இனி எங்கேயும் தப்ப முடியாது: பாலியல் வழக்கில் தலைமறைவான நடிகரை பிடிக்க கேரள போலீஸ் அதிரடி

பாலியல் வன்கொடுமை வழக்கில் தலைமறைவாக உள்ள நடிகரின் பாஸ்போர்ட் ரத்து செய்யப்பட்டுள்ளது.

மலையாள இளம் நடிகை ஒருவர், கொச்சி போலீஸில் நடிகரும் தயாரிப்பாளருமான விஜய் பாபு மீது பாலியல் வன்கொடுமை புகார் அளித்தார். இதுபற்றி போலீஸார் விசாரிக்கத் தொடங்கியதும், விஜய் பாபு துபாய்க்குத் தப்பியோடினார். கடந்த 2-ம் தேதி, விசாரணைக்கு ஆஜராக வேண்டும் என்று போலீஸார் அவருக்கு நோட்டீஸ் அனுப்பினர்.

மே 19-ம் தேதி வரை கால அவகாசம் வேண்டும் என்று விஜய் பாபு மின்னஞ்சலில் பதிலளித்தார். இந்நிலையில் மற்றொரு பெண்ணும் சமூக வலைதளத்தில் அவர் மீது பாலியல் புகார் கூறினார். இதையடுத்து இவ்விவகாரம் மேலும் பரபரப்பானது. சர்வதேச போலீஸ் உதவியுடன் அவரைக் கைது செய்ய நடவடிக்கை மேற்கொண்டனர். நீதிமன்றமும் பிடிவாரன்ட் பிறப்பித்துள்ளது.

இந்நிலையில் நேற்று ஆஜராவார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அவர் ஆஜராகவில்லை. இதனால், கொச்சி காவல்துறை நடிகர் விஜய் பாபுவின் பாஸ்போர்டை ரத்து செய்ய உள்துறை அமைச்சகத்துக்கு கோரிக்கை வைத்தது. அதை ஏற்று அவரது பாஸ்போர்ட் ரத்து செய்யப்பட்டுள்ளது.

பாஸ்போர்ட் ரத்து செய்யப்பட்டுள்ளதால் அவர் விசாவும் ரத்தாகும். இதனால் ஐக்கிய அரபு அமீரக போலீஸார் அவரை கைது செய்து இந்தியாவுக்கு அனுப்புவார்கள் என்று நம்புவதாக கொச்சி போலீஸ் கமிஷனர் சி.ஹெச்.நாகராஜு தெரிவித்துள்ளார்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in