பாலியல் வன்கொடுமை வழக்கில் சிக்கிய நடிகர் வெளிநாட்டுக்கு தப்பியோட்டம்!

விஜய் பாபு
விஜய் பாபு

இளம் நடிகை கொடுத்த பாலியல் வன்கொடுமை புகாரை அடுத்து நடிகர் விஜய்பாபு துபாய்க்கு தப்பிச் சென்றுவிட்டதாக போலீஸார் தெரிவித்துள்ளனர்.

மலையாள நடிகர் விஜய் பாபு, ஃபிரைடே ஃபிலிம் ஹவுஸ் என்ற தயாரிப்பு நிறுவனம் மூலம் படங்களையும் தயாரித்து வருகிறார். ’பெருச்சாழி’, ’ஆடு’, ’முத்துக்கவு’, ’ஆடு2’, ஓடிடியில் வெளியான ’சுஃபியும் சுஜாதாயும்’ ’ஹோம்’ உட்பட சில மலையாளப் படங்களை தயாரித்துள்ளார். இவர் மீது, கோழிக்கோடு பகுதியை சேர்ந்த இளம் மலையாள நடிகை ஒருவர், கடந்த 22-ம் தேதி போலீஸில் புகார் கொடுத்துள்ளார்.

அதில், விஜய் பாபு சினிமா வாய்ப்பு வாங்கித்தருவதாகக் கூறி, கடந்த மார்ச் 13-ம் தேதியில் இருந்து ஏப்ரல் 14-ம் தேதி வரை, பலமுறை மயக்க மருந்துகளைக் கொடுத்து, பாலியல் வன்கொடுமை செய்தார் என்றும் அதை வீடியோவாக எடுத்து வைத்து மிரட்டுவதாகவும் கூறியிருந்தார். இதையடுத்து போலீஸார், விஜய் பாபு மீது வழக்கு பதிவு செய்தனர்.

இதற்கிடையே பேஸ்புக் லைவ்வில் தோன்றிய விஜய் பாபு, தன் மீதான குற்றச்சாட்டுகள் பொய் என்றும் அந்த இளம் நடிகையுடன் நடந்த சாட்-களையும் வெளியிட்டார். அப்போது அந்த நடிகையின் பெயரையும் அவர் வெளிப்படுத்திவிட்டார். இதற்காக அவர் மீது மற்றொரு வழக்கை பதிந்துள்ள போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர். அவர் மீதான குற்றச்சாட்டுக்கு ஆதாரம் கிடைத்துள்ளதாகக் கூறப்படுகிறது. அவர் வெளிநாடு தப்பிவிடாமல் இருக்க, லுக் அவுட் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.

இந்நிலையில், அவர் கடந்த 24-ம் தேதியே துபாய் சென்று விட்டதாக போலீஸார் தெரிவித்துள்ளார். இளம் நடிகை புகார் கொடுத்ததை தெரிந்துகொண்டு அவர் அங்கு தப்பிச் சென்றுள்ளார். அவர் தரப்பில் முன் ஜாமீன் எடுக்க முயன்று வருகின்றனர். விஜய் பாபுவின் நண்பர்களிடம் போலீஸார் விசாரணை நடத்த உள்ளனர்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in