விசாரணைக்கு வந்த பிரபல நடிகர் கைது: நடிகை பாலியல் வன்கொடுமை வழக்கில் பரபரப்பு

விசாரணைக்கு வந்த பிரபல நடிகர் கைது: நடிகை பாலியல் வன்கொடுமை வழக்கில் பரபரப்பு

நடிகை கொடுத்த பாலியல் வன்கொடுமை புகாரில் நடிகர் விஜய் பாபு கைது செய்யப்பட்டார்.

மலையாள நடிகரும், தயாரிப்பாளருமான விஜய் பாபு மீது, அவர் படத்தில் நடித்த இளம் நடிகை ஒருவர் ஏப்ரல் 22-ம் தேதி பாலியல் வன்கொடுமை புகார் தெரிவித்திருந்தார். இதையடுத்து ஃபேஸ்புக் லைவில் தோன்றிய விஜய் பாபு, நடிகையின் பெயரை அதில் வெளியிட்டார். இது பரபரப்பானது. இந்த வழக்கு தொடர்பான விசாரணைக்கு ஆஜராகுமாறு போலீஸார் சம்மன் அனுப்பினர். ஆனால் விஜய் பாபு வெளிநாட்டுக்குத் தப்பி ஓடினார்.

சில நாட்களுக்குப் பிறகு கொச்சி திரும்பிய அவரிடம் போலீஸார் விசாரணை நடத்தினர். அவருடைய செல்போன்களைக் கைப்பற்றிய போலீஸார் தடயவியல் சோதனைக்கு அனுப்பினர்.

கேரள உயர் நீதிமன்றம் கடந்த 22-ம் தேதி அவருக்கு முன்ஜாமீன் வழங்கியது. அப்போது சாட்சிகளிடம் செல்வாக்கு செலுத்த முயற்சி செய்யக் கூடாது, மாநிலத்தை விட்டு வெளியேறக் கூடாது என்பது போன்ற நிபந்தனைகளுடன் ஜாமீன் வழங்கப் பட்டது.

இன்று முதல் ஜூலை 3-ம் தேதி வரை இந்த வழக்குத் தொடர்பாக போலீஸார் அவரிடம் விசாரணை நடத்தலாம் என்றும் நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. இதையடுத்து இன்று விசாரணைக்கு வந்த அவரை கொச்சி போலீஸார் கைது செய்தனர். அவர் நீதிமன்ற ஜாமீன் பெற்றிருப்பதால் போலீஸ் ஸ்டேஷன் ஜாமீனில் அவர் விடுவிக்கப்படுவார் என்று கூறப்படுகிறது.

இதற்கிடையே பாலியல் வன்கொடுமை நடந்ததாகக் கூறப்படும் நட்சத்திர ஓட்டல் மற்றும் அடுக்குமாடி குடியிருப்புக்கு அவரை அழைத்துச் சென்று போலீஸார் விசாரணை நடத்துகின்றனர். அவரிடம் சாட்சியங்கள் பெறப்பட இருப்பதாகக் கூறப்படுகிறது.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in