
மலேசியாவில் நடைபெற்று வரும் 'பிச்சைக்காரன் 2' படப்பிடிப்பில் நடிகர் விஜய் ஆண்டனிக்கு காயம் ஏற்பட்டு கோலாலம்பூரில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
கடந்த 2016-ம் ஆண்டு சசி இயக்கத்தில் விஜய் ஆண்டனி நடிப்பில் வெளியான படம் 'பிச்சைக்காரன்'. தமிழ், தெலுங்கில் வெளியாகி சூப்பர் ஹிட்டான இப்படத்தின் இரண்டாம் பாகம் குறித்து சில மாதங்களுக்கு முன் அறிவிப்பு வெளியானது. இந்தப் படத்தின் படப்பிடிப்பு மலேசியாவில் பல்வேறு பகுதிகளில் நடைபெற்று வருகிறது. தற்போது லங்காவி தீவில் படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது.
அப்போது படப்பிடிப்பின்போது விஜய் ஆண்டனி விபத்தில் சிக்கி காயம் அடைந்ததாக தகவல் வெளியாகியுள்ளது. இதைத் தொடர்ந்து அவருக்கு உடனடியாக படப்பிடிப்பு தளத்தில் முதலுதவி அளிக்கப்பட்டது. பின்னர் மலேசியா தலைநகர் கோலாலம்பூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
'பிச்சைக்காரன் 2' படத்தை தனது விஜய் ஆண்டனி புரொடக்ஷன் மூலம் தயாரிப்பதோடு, இசையமைப்பாளராக மட்டுமின்றி முதல் முறையாக இப்படத்தில் விஜய் ஆண்டனி இயக்குநராக அறிமுகமாவதும் குறிப்பிடத்தக்கது.