`சூர்யா42’ ஐந்து வேடங்களில் நடிக்கும் சூர்யா?

`சூர்யா42’ ஐந்து வேடங்களில் நடிக்கும் சூர்யா?

நடிகர் சூர்யா, இயக்குநர் சிவாவுடன் இணையும் ‘சூர்யா 42’ படத்தில் ஐந்து வேடங்களில் நடிப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

’எதற்கும் துணிந்தவன்’ படத்திற்கு பிறகு நடிகர் சூர்யா இயக்குநர் பாலாவுடன் ‘வணங்கான்’, ‘சிறுத்தை’ சிவா இயக்கத்தில் தன்னுடைய 42-வது படம் மற்றும் தயாரிப்பாளராகவும் கைவசம் படங்கள் என பிஸியாக இருக்கிறார் சூர்யா. இதில் ‘சிறுத்தை’ சிவாவுடன் இணையும் படத்திற்கான மோஷன் போஸ்டர் வீடியோ கடந்த சில நாட்களுக்கு முன்பு வெளியானது.

யுவி கிரியேஷன்ஸ் மற்றும் ஸ்டுடியோ க்ரீன் இணைந்து இந்தப் படத்தை தயாரிக்கிறது. தேவி ஸ்ரீ பிராசாத் படத்திற்கு இசையமைக்கிறார். கழுகுப் பார்வையுடன் ஆரம்பிக்கும் அந்த வீடியோவில் போர்க்களக் காட்சிகளுடன் ட்ரெய்லர் விரியும். போர்க்கள உடைகளோடு நடிகர் சூர்யா போர்வீரனாக அதில் காட்சியளிப்பார். போரில் சண்டையிடுபவர்களாக அரத்தர், வெண்காட்டர், மண்டாங்கர், முக்காட்டர், பெருமனத்தார் என ஐந்து கதாபாத்திரங்களின் பெயர்களும் அந்த மோஷன் போஸ்டரில் காட்டப்பட்டிருக்கும்.

இதனை அடுத்து நடிகர் சூர்யாவே இந்த ஐந்து கதாபாத்திரங்களிலும் நடிக்க இருக்கிறார் என தகவல் வெளியாகியுள்ளது. இது குறித்தான அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்ப்பார்க்கலாம். படத்தின் முதல்கட்ட படப்பிடிப்பு சென்னையில் முடிவடைந்த நிலையில், அடுத்தக்கட்டப் படப்பிடிப்பு இந்த வாரம் கோவாவில் தொடங்க இருக்கிறது. இதில் இருநூறுக்கும் மேற்பட்ட பவுன்சர்களை நடிக்க வைக்க இருக்கிறார்கள்.

இந்தப் படத்தில் நடிகர் சூர்யாவுக்கு ஜோடியாக பாலிவுட் நடிகை திஷா பட்டாணி நடிக்கிறார். பத்து மொழிகளில், 3டி தொழில்நுட்பத்தில் இந்தப் படம் உருவாகி வருகிறது. எழுத்தாளர் சு.வெங்கடேசன் எழுதிய ‘வேள்பாரி’ கதையில் நடிகர் சூர்யா நடிக்கிறார் என தகவல் வெளியாகிய நிலையில், அந்த வரலாற்றுக் கதைக்கான முன்னோட்டம்தான் இந்தப் படம் எனவும் சொல்லப்படுகிறது.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in