`என்னைவிட சிறந்த நடிகர் கார்த்தி’: நடிகர் சூர்யா பெருமை

`என்னைவிட சிறந்த நடிகர் கார்த்தி’: நடிகர் சூர்யா பெருமை

என்னை விட சிறந்த நடிகர் கார்த்தி என்றும் சினிமா பற்றி அதிகம் சிந்திப்பதும் அவர்தான் என்றும் நடிகர் சூர்யா கூறினார்.

முத்தையா இயக்கத்தில் கார்த்தி நடித்துள்ள படம், ’விருமன்’. சூர்யாவின் 2டி என்டர்டெயின்மென்ட் தயாரித்துள்ள இந்தப் படத்தை முத்தையாக இயக்கியுள்ளார். இயக்குநர் ஷங்கர் மகள் அதிதி நாயகியாக நடித்துள்ளார். பிரகாஷ்ராஜ், ராஜ்கிரண், வடிவுக்கரசி, கருணாஸ், சூரி உட்பட பலர் நடித்துள்ளனர். யுவன் சங்கர் ராஜா இசை அமைத்துள்ள இந்தப் படத்துக்கு செல்வகுமார் ஒளிப்பதிவு செய்துள்ளார்.

இந்தப் படத்தின் பாடல்கள் மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா மதுரையில் நடந்தது. இயக்குநர் ஷங்கர், பாரதிராஜா, சூர்யா, கார்த்தி உட்பட படக்குழுவினர் கலந்துகொண்டனர்.

விழாவில், நடிகர் சூர்யா பேசுகையில், ``தென் தமிழ்நாட்டின் வாசல் மதுரை. மதுரை என்றாலே அழகர், வாடிவாசல், மீனாட்சி அம்மன் என்று கூறுவது போல, அச்சு அசலாக மக்களின் அன்பு கிடைப்பது எங்களுக்கு வரம். மதுரையில் பல கதைகள் இருக்கிறது. கற்பனை கதையல்ல, நிஜத்தில் நடந்த கதையை சுவாரசியமாக சொல்வதற்கு நிறைய பேர் இருக்கிறார்கள். கடைக்கோடி கிராமத்தில் இருந்து வந்து, இயக்குநர் இமயமாக முடியும் என்று பாரதிராஜா எடுத்துக் காட்டியிருக்கிறார். அவர் நமக்கு மிகப்பெரிய அடையாளம். அவரைப் போன்று கிராமத்திலிருந்து வந்த ஒவ்வொருவருக்கும் நம்பிக்கையாக இருந்திருக்கிறார்.

கார்த்தி, அதிதி ஷங்கர்
கார்த்தி, அதிதி ஷங்கர்

ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு அடையாளத்தைக் கொடுத்து விடுவார்கள். ஆனால், நான் எந்த வட்டத்திற்குள்ளும் மாட்ட மாட்டேன் என்று தன்னுடைய உயரம், புகழ், பெயரை மீண்டும் மீண்டும் மறுவரையறைப் படுத்திக் கொண்டே இருப்பவர் இயக்குநர் ஷங்கர் சார். அப்போதே பான் இந்தியா படத்தை கொண்டு வந்தவர் இவர். இப்போது இந்தியன் 2 படத்திற்கு எதிர்பார்ப்பு அதிகமாகியுள்ளது.

அதிதி, உங்கள் வரவு நல்வரவாகுக. உங்களுக்கான மரியாதையை இந்த சினிமா உலகம் கொடுக்கும். இந்த துறையில் உங்களுக்கு முக்கியமான இடம் உள்ளது. காவல் கோட்டம், வேல்பாரி நம் தமிழர்களுடைய முக்கியமான அடையாளம். அதைத் தந்த நாடாளுமன்ற உறுப்பினர் சு. வெங்கடேசன் இங்கு வந்தது கூடுதல் மதிப்பு. அவருடன் சுவாரசியமான பயணத்தை ஆரம்பித்துவிட்டோம். அது முக்கியமான பதிவாக இருக்கும். அது என்னவென்று இன்னொரு மேடையில் கூறுகிறேன். பாலா மற்றும் அமீரின் பெயரைக் கூறாமல் இந்த மேடையை விட்டு இறங்க முடியாது. எனக்கும் கார்த்திக்கும் அவர்களால்தான் அடையாளம் கிடைத்திருக்கிறது.

கார்த்திக்கு முன்பே நான் நடிக்க வந்து இருந்தாலும், என்னை விட அதிகமாக சினிமாவைப் பற்றி பேசுவதும், செயல்படுவதும் கார்த்தி தான் என்று எந்த மேடையிலும் கூறுவேன். சினிமாவிற்காகவும், சினிமாத்துறைக்காகவும் என்னை விட அதிகம் சிந்திப்பது கார்த்தி . என்னைவிட சிறந்த நடிகர் அவர். யுவன், கார்த்தி இருவருமே என்னுடைய தம்பிகள்'' என்றார்.

நடிகர் கார்த்தி பேசும்போது, ’’இயக்குநர் முத்தையா, அதிதிக்கு சாதாரணமாக வாய்ப்பு கொடுத்து விடவில்லை. பல கோணங்களிலும் ஸ்க்ரீன் டெஸ்ட் வைத்துதான் தேர்வு செய்தார். சினிமாத்துறையில் ஒரு பெண்ணை எளிதில் அனுமதிக்கமாட்டார்கள். நான் நடிக்க வரும்போதே என் அப்பா வேண்டாம் என்றார். அப்படி இருக்கும்போது, தன் மகளை நடிக்க அனுமதித்த ஷங்கர் சாருக்கு சினிமாவின் மீது எந்த அளவுக்கு காதல் இருக்கும்? ஒரு பெண் நடிக்க வந்தால் அவரை பத்திரமாக பார்த்துக் கொள்ள வேண்டும் என்று எங்கள் அப்பா கூறுவார். அவர் தான் எங்களுக்கு உத்வேகம். படிப்பு வரவில்லை என்றால், சினிமாவிற்கு வருவார்கள் என்று கூறுவார்கள். ஆனால், அதிதி, மருத்துவம் படித்துவிட்டு இந்த துறையை தேர்ந்தெடுத்து இருக்கிறார். அவருக்கு சிறந்த எதிர்காலம் இருக்கிறது’’ என்றார்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in