
பெண் பத்திரிக்கையாளரிடம் அத்துமீறியதாக நடிகரும், பாஜக முன்னாள் எம்.பியுமான சுரேஷ் கோபி மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது கேரளாவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கேரளா மாநிலம், கோழிக்கோட்டில் நேற்று நடந்த பத்திரிகையாளர்கள் சந்திப்பில் பெண் பத்திரிக்கையாளர் ஒருவரிடம் பாஜக முன்னாள் எம்.பியும், நடிகருமான சுரேஷ் கோபி அநாகரிகமாக நடந்து கொண்டதாக பரபரப்பு புகார் எழுந்துள்ளது.
கோழிக்கோட்டில் நடந்த இந்த பத்திரிகையாளர்கள் சந்திப்பில் சுரேஷ் கோபி அருகில் நின்ற அந்த பெண் செய்தியாளர் கேள்வி கேட்க, அதற்குப் பதில் சொல்லும் போது அவரது தோளின் மீது கைவைத்துப் பேசியுள்ளார். சுரேஷ் கோபியின் கையை இரண்டு முறை பெண் செய்தியாளர் தட்டிவிட்ட போதும் கூட அவரை அருகே இழுத்து கை வைத்து மீண்டும் சீண்டலில் சுரேஷ் கோபி ஈடுபட்டுள்ளார்.
சுரேஷ் கோபியின் இந்த நடவடிக்கை குறித்து கேரள பத்திரிகையாளர்கள் சங்கம் அளித்த புகாரின் பேரில், காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்துள்ளனர். இந்தப் புகார் குறித்து சுரேஷ் கோபி கூறுகையில், “அந்த பெண் செய்தியாளர், என் வழியை பலமுறை மறைத்தார். அதன் காரணமாகவே அவரை நான் நகர்த்த முயன்றேன். நான் ஒரு தந்தையைப் போல அவரிடம் மன்னிப்புக் கேட்கத் தயாராக உள்ளேன். இந்த சம்பவத்திற்குப் பிறகு அவரிடம் மன்னிப்புக் கேட்க பலமுறை தொடர்பு கொண்டேன்” எனக் கூறியுள்ளார்.
இந்த விவகாரம் கேரளாவில் தற்போது பரபரப்பாகியுள்ளது.