என் வாழ்க்கையில் கல்யாணம் நடந்ததே சாதனைதான்! - நடிகர் சுகேஷ் பேட்டி

சுகேஷ்
சுகேஷ்

சின்னத்திரையின் ’செல்லத்தம்பி’ நடிகர் சுகேஷ். விஜய் டிவியின் ‘பாரதி கண்ணம்மா’ சீரியலில் அகில் என்ற ஹீரோவின் தம்பி கதாபாத்திரத்தில் நடித்துப் பிரபலமானார். இப்போது அந்த சீரியல் முடிந்துவிட்ட நிலையில், விஜய் டிவியில் தற்போது ஒளிபரப்பாகி வரும் ‘வீட்டுக்கு வீடு வாசப்படி’ சீரியலிலும் அஜய் என்ற தம்பி கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். நடனத்திலும் ஆர்வம் கொண்டவரான அவரிடம் பேசினோம்.

’பாரதி கண்ணம்மா’ சீரியலில் செல்லத்தம்பி, இப்போது ‘வீட்டுக்கு வீடு வாசப்படி’ சீரியலால் எல்லோரிடமும் பயங்கரத் திட்டு போலயே?

சுகேஷ்
சுகேஷ்

ஆமாம்! ’வீட்டுக்கு வீடு வாசப்படி’ சீரியலில் என் கதாபாத்திரம் கொஞ்சம் நெகட்டிவ் ஷேட்தான். நெகட்டிவ் என்று சொல்ல முடியாது. இருந்தாலும் ஆடியன்ஸூக்கு அப்படித்தான் பார்க்கும்போது என் கதாபாத்திரம் இருக்கும். ‘பாரதி கண்ணம்மா’ சீரியலில் அகில் கதாபாத்திரத்தில் கொஞ்சம் லேட்டாகத்தான் இணைந்தேன். இருந்தாலும் எனக்கு நல்ல ரெஸ்பான்ஸ் இருந்தது.

என்னை அவர்கள் வீட்டுப் பையனாகவே பார்த்தார்கள். ஆனால், இப்போது இன்ஸ்டாகிராம், யூடியூப் என எந்தப் பக்கம் போனாலும் எனக்கு செம திட்டுதான்! இருந்தாலும் நம்முடைய நடிப்புக்குக் கிடைத்த பாராட்டு என மனதைத் தேற்றிக் கொள்கிறேன். வாய்ப்பு கொடுத்த இயக்குநர் பிரவீனுக்கு நன்றி.

நீங்கள் திடீரென ரகசிய திருமணம் செஞ்சுட்டீங்கன்னு பரபரப்பு கிளம்புச்சே..?

மனைவியுடன் சுகேஷ்
மனைவியுடன் சுகேஷ்

அய்யய்யோ! ரகசிய கல்யாணம் எல்லாம் இல்லை. பெற்றோர் சம்மதத்துடன் நடந்த கல்யாணம்தான். எட்டு வருஷ காதல் அது. எங்க கல்யாணம் நடக்குமா, நடக்காதா அப்படிங்கற பிரச்சினைகளை எல்லாம் தாண்டி இரண்டு பேர் வீட்டுலயும் சம்மதம் வாங்கி நடந்த கல்யாணம் அது. இந்த பிரச்சினைகளைத் தாண்டி, என் வாழ்க்கையில கல்யாணம் நடந்ததே பெரிய சாதனைதான். என் நண்பர்கள், உறவினர்கள் அப்படின்னு எல்லோருக்குமே கல்யாண விஷயம் தெரியும்.

என் கல்லூரி தோழி அவர். அங்கிருந்து நண்பர்களாகி பின்பு பழகி காதலித்து திருமணம் செய்து கொண்டேன். நான் பிரைவேட் பர்சன் அப்படிங்கறதால கல்யாண விஷயத்தைப் பெருசு படுத்தல. அதனால, அந்த சமயத்துல ரகசிய திருமணம்ன்னு செய்தி கிளம்பிடுச்சு.

பல வருடங்கள் காதலித்து, திருமணம் செய்யும் பிரபலங்கள் பலரும் விவாகரத்து செய்வது அதிகமாகிவிட்டது என நினைக்கிறீர்களா? திருமண வாழ்வில் உள்ளவர்களுக்கு உங்களுடைய அட்வைஸ் என்ன?

மனைவியுடன் சுகேஷ்
மனைவியுடன் சுகேஷ்

சமூகவலைதளங்களில் வளர்ச்சி காரணமாக, இந்த விவாகரத்து செய்திகள் அதிகம் பார்க்க முடிகிறது. சின்ன விஷயம் கிடைத்தாலும் அதை இணையத்தில் ஊதிப் பெரிதாக்குவது உண்மையிலேயே வருத்தம்தான். நான் முன்பே சொன்னபடி, பிரபலங்கள் தங்கள் தனிப்பட்ட வாழ்க்கையை அதிகம் வெளியே கொண்டு வரக்கூடாது என்றுதான் நினைக்கிறேன். ஹோம்டூர், திருமணம், நிச்சயதார்த்தம் என ஒரு காட்சி விடாமல் யூடியூபுக்கு விற்பதெல்லாம் சரியா என்று யோசிக்க வேண்டும்.

நான் திருமண வாழ்வைத் தொடங்கி ஒருவருடம்தான் ஆகிறது. அதனால், அட்வைஸ் செய்யும் அளவுக்கு அனுபவசாலி இல்லை. எல்லார் வாழ்விலும் இருப்பது போலவே, சின்னச் சின்ன சண்டைகள் எங்களுக்குள்ளும் இருக்கத்தான் செய்கிறது. ஆனால், எங்களுக்குள்ளான மரியாதையும் சுதந்திரமும் அப்படியேதான் இருக்கிறது. பல உறவுகள் பிரிய முக்கிய காரணமாக இதைப் பார்க்கிறேன்.

நடிப்போடு சேர்த்து நடனத்திலும் அசத்துகிறீர்களே..?

இது இரண்டும் இரண்டு கண்கள் மாதிரி! கல்லூரியில் ஒரு ஷார்ட் ஃபிலிம்ஸில் நண்பர்களோடு சேர்ந்து விளையாட்டாகத்தான் நடிப்புப் பயணம் ஆரம்பித்தது. அதேபோல, பேக் டான்சராக நிறைய நடனம் ஆடியிருக்கிறேன். நான் நடிகனாக வேண்டும் என்பது என் மனைவியின் ஆசையும் கூட! அந்த விஷயம் நல்ல டிராக்கில் போய்க் கொண்டிருக்கிறது மகிழ்ச்சி. நான் நடிக்கும் கதாபாத்திரங்களும் மக்களிடம் போய் சேர்ந்திருக்கிறது. நேரம் கிடைக்கும்போதெல்லாம் டான்ஸ் பண்ண ஆரம்பித்துவிடுவேன். அதில் பெரிதாக சாதிக்க வேண்டும் என்ற கனவும் திட்டமும் இருக்கிறது. வருங்காலத்தில் ஆசைப்பட்டது எல்லாம் நடக்க வேண்டும்!

வாழ்த்துகள் ப்ரோ!

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in