`அன்றும் விசாரணை தான்; இன்றும் விசாரணை தான்'- பண மோசடி வழக்கில் நடிகர் சூரி விரக்தி

`அன்றும் விசாரணை தான்; இன்றும் விசாரணை தான்'- பண மோசடி வழக்கில் நடிகர் சூரி விரக்தி

பண மோசடிப் புகார் தொடர்பான வழக்கில் மத்திய குற்றப்பிரிவு அலுவலகத்தில் விசாரணைக்கு ஆஜரான நடிகர் சூரி, "முதல்முறை வந்தேன் விசாரணை நடந்தது, இரண்டாவது முறை வந்தேன் விசாரணை நடந்தது, மீண்டும் வந்தேன் விசாரணை நடந்தது, இன்றும் வந்தேன் விசாரணை நடந்தது" என விரக்தியுடன் கூறினார்.

திரைப்பட காமெடி நடிகரான சூரி, நடிகர் விஷ்ணு விஷாலின் தந்தையும் முன்னாள் டி.ஜி.பி-யுமான ரமேஷ் குடவாலா மற்றும் தயாரிப்பாளர் அன்புவேல் ராஜன் ஆகியோர் மீது நிலம் வாங்கித் தருவதாகக் கூறி 2.70 கோடி ரூபாய் பண மோசடி செய்ததாக கடந்த மார்ச் மாதம் அடையாறு காவல் நிலையத்தில் புகார் ஒன்றை அளித்திருந்தார். அந்தப் புகாரின் மீது போலீஸார் நடவடிக்கை எடுக்காதததால் நடிகர் சூரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். வழக்கை விசாரித்த நீதிமன்றம் புகாரை மத்திய குற்றப்பிரிவுக்கு மாற்றியதுடன், 6 மாதத்திற்குள் விசாரணை நடத்தி வழக்கை முடிக்க உத்தரவிட்டது. பின்னர்

வழக்கு சென்னை மத்திய குற்றப்பிரிவுக்கு மாற்றப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது. இதுவரை நடிகர் சூரி 5 முறைக்கும் மேல் வழக்கு தொடர்பாக சென்னை மத்திய குற்றப்பிரிவில் விசாரணைக்கு ஆஜராகி பதிலளித்துள்ள நிலையில், இன்றும் நடிகர் சூரி மீண்டும் மத்திய குற்றப்பிரிவு விசாரணை அதிகாரி முன் ஆஜராகி அவர்களது கேள்விகளுக்கு பதிலளித்தார். ஒரு மணி நேரத்திற்கும் மேல் நடைபெற்ற விசாரணைக்கு பின் வெளியே வந்த சூரி செய்தியாளர்களை சந்தித்தார்.

அப்போது பேசிய அவர், முதல் முறை வந்தேன் விசாரணை நடந்தது, இரண்டாவது முறை வந்தேன் விசாரணை நடந்தது, மீண்டும் வந்தேன் விசாரணை நடந்தது, இன்றும் வந்தேன் விசாரணை நடந்தது என விரக்தியாக பதிலளித்தார். தொடர்ந்து பேசிய அவர், முன்பெல்லாம் வீட்டைவிட்டு வெளியே சென்று வந்தால் ஷூட்டிங் சென்று வருகிறீர்களா எனக் கேட்பவர்கள், இப்போதெல்லாம் போலீஸ் ஸ்டேஷன் சென்று வருகிறீர்களா என கேட்பதாக தெரிவித்தார். மேலும், விசாரணை திருப்திகரமாக உள்ளது என நம்புவதாகவும், தனக்கு சாதகமாக முடியவேண்டும் எனக் கருதவில்லை, நியாயம் எதுவோ அது கிடைக்க வேண்டும் என மட்டுமே நினைப்பதாக கூறினார்.

எதிர்மனுதாரர்களை அழைத்து விசாரணை நடத்தினார்களா என்ற கேள்விக்கு, தனக்கு தெரியவில்லை என்ற அவர், எனக்கு காவல்துறை மீதும், நீதிமன்றம் மீதும், கடவுள் மீதும் நம்பிக்கை உள்ளது. தனக்கான நியாயம் கிடைக்கும் என நினைப்பதாக கூறினார்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in