நடராஜனாக நடிக்கிறாரா சிவகார்த்திகேயன்?

நடராஜனாக நடிக்கிறாரா சிவகார்த்திகேயன்?

ஐபிஎல் போட்டிகளில் அசத்தலாக விளையாடி கவனம் ஈர்த்த தமிழக கிரிக்கெட் வீரர் நடராஜனின் வாழ்க்கைக் கதை திரைப்படமாக உருவாவதாகவும், அவரது பாத்திரத்தில் நடிகர் சிவகார்த்திகேயன் நடிக்கவிருப்பதாகவும் தகவல்கள் பரவிவருகின்றன.

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் நடிகர் சிவகார்த்திகேயன். அவரது படங்கள் அனைத்தும் தொடர்ந்து குடும்பங்கள் கொண்டாடும் படங்களாகவே அமைந்திருப்பது ரசிகர்களை ஆச்சரியப்படுத்தியிருக்கிறது. நகைச்சுவை, ஆக்‌ஷன் எனக் கலந்துகட்டி அவர் நடிக்கும் பாத்திரங்கள் குடும்பங்கள், இளைஞர்கள் மட்டுமின்றி குழந்தைகளுக்கு மிகவும் பிடித்த நடிகராக அவரை வளர்த்தெடுத்திருக்கின்றன.

சமீபத்தில் வெளியாகி வெற்றி பெற்ற ‘டான்’ படத்துக்குப் பிறகு தெலுங்கு இயக்குநர் அனுதீப் இயக்கும் ‘பிரின்ஸ்’ திரைப்படத்தில் சிவகார்த்திகேயன் நடித்துள்ளார். இத்திரைப்படம் வருகிற 21-ம் தேதி தீபாவளியை முன்னிட்டு வெளியாகவுள்ளது. இந்த படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக உக்ரைன் நாட்டைச் சேர்ந்த மரியா ரியாபோஷப்கா நடித்துள்ளார். இப்படத்தின் ட்ரெய்லர் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்றிருக்கிறது. இதைத் தொடர்ந்து ‘மாவீரன்’ திரைப்படத்தில் நடித்துவருகிறார். இதில் அதிதி ஷங்கர் அவருக்கு ஜோடியாக நடிக்கிறார்.

இந்நிலையில் பிரபல கிரிக்கெட் வீரரான நடராஜனின் வாழ்க்கை வரலாற்றுப் படத்தில் நடிகர் சிவகார்த்திகேயன் நடிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. சேலம் மாவட்டம் சின்னப்பம்பட்டி அருகே உள்ள குக்கிராமத்தை சேர்ந்தவர் நடராஜன், ஐபிஎல் போட்டிகளில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி தமிழ்நாட்டுக்கே பெருமை சேர்த்தவர். அவரது வாழ்க்கை வரலாற்றுப் படத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பதாக வெளியான் தகவல், இருவரின் ரசிகர்களிடமும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கிறது. எனினும், இதுகுறித்து அதிகாரபூர்வமாக எந்தத் தகவலும் இதுவரை வெளியாகவில்லை.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in