சிம்புவின் `வெந்து தணிந்தது காடு’ இசை வெளியீட்டு நிகழ்ச்சி: ஹைலைட்ஸ் என்னென்ன?

சிம்புவின் `வெந்து தணிந்தது காடு’ இசை வெளியீட்டு நிகழ்ச்சி: ஹைலைட்ஸ் என்னென்ன?

நடிகர் சிம்புவின் ‘வெந்து தணிந்தது காடு’ இசை வெளியீட்டு விழா இன்று மாலை நடக்க இருக்கும் நிலையில் நிகழ்ச்சியின் ஹைலைட்ஸ் என்னென்ன என்பது குறித்தான தகவல் வெளியாகி உள்ளது.

’மாநாடு’ படத்திற்கு பிறகு நடிகர் சிம்புவின் ‘வெந்து தணிந்தது காடு’ படம் வெளியாக இருக்கிறது. கெளதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில், ஐசரி கணேஷ் தயாரிப்பில் வெளியாக இருக்கும் இந்த படத்தில் ராதிகா சரத்குமார், சித்தி இத்தானி உள்ளிட்ட பலர் நடித்திருக்கின்றனர். படத்திற்கு ஏ.ஆர். ரஹ்மான் இசையமைத்துள்ளார்.

இந்த மாதம் 15-ம் தேதி படம் வெளியாக இருக்கும் நிலையில், படத்தின் இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா சென்னை, பல்லாவரத்தில் உள்ள வேல்ஸ் பல்கலைக்கழகத்தில் நடைபெற இருக்கிறது. இதற்காக ‘வெந்து தணிந்தது காடு’ போல பிரம்மாண்டமான செட் அமைக்கும் பணிகள் நடைபெற்ற புகைப்படங்கள் வெளியாகி இணையத்தில் வைரல் ஆனது.

இசை வெளியீட்டு விழா என்பதால், இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மானின் இசை நிகழ்ச்சி ரசிகர்கள் மத்தியில் நேரலையாக நடத்த திட்டமிட்டிருக்கிறார்கள். இதற்காக பாடகி ஷ்ரேயா கோஷல் உள்ளிட்ட பல பிரபலங்கள் சென்னைக்கு வந்துள்ளனர். ‘பத்து தல’ படப்பிடிப்பில் பிஸியாக இருந்த நடிகர் சிம்புவும் இசை நிகழ்ச்சிக்காக சென்னை வந்திறங்கியுள்ளார்.

நடிகர் கமல்ஹாசன் நிகழ்ச்சியின் சிறப்பு விருந்தினராக வர இருக்கிறார். கெளதம் வாசுதேவ் மேனன், சிலம்பரசன், கமல்ஹாசன், தயாரிப்பாளர் ஐசரி கணேஷ் ஆகியோர் நிகழ்ச்சி நடக்கும் இடத்திற்கு ஹெலிகாப்டரில் வந்திறங்க உள்ளனர். கெளதம் மேனன் ‘வேட்டையாடு விளையாடு2’ மற்றும் ‘வெந்து தணிந்தது காடு2’ குறித்து அறிவிப்பார் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது.

இரவு ஒன்பது மணிக்கு வெளியாக இருக்கும் டிரெய்லர் அறிவிப்பிற்காக புதிய போஸ்டர் ஒன்றை படக்குழு வெளியிட்டுள்ளது. ‘எதிர்பாராததை எதிர்பாருங்கள்’ என்ற தலைப்புடன் இந்த புதிய போஸ்டரை நடிகர் சிலம்பரசன் பகிர்ந்துள்ளார். இந்த படத்தின் இரண்டாம் பாகம் இருக்கும் என்று இயக்குநர் கெளதம் வாசுதேவ் மேனன் தெரிவித்திருந்த நிலையில், இந்த போஸ்டர் அதற்கான லீட் என்று இணையத்தில் ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். முத்து என்ற கேங்ஸ்டர் கதாபாத்திரத்தில் நடிகர் சிம்பு இதில் நடித்துள்ளார்.

ஏற்கெனவே, இசையமைப்பாளர் ரஹ்மான் குரலில் ‘முத்து ஜர்னி’ என ஒரு பாடல் வெளியாகி வரவேற்பை பெற்ற நிலையில் மற்றொரு பாடல் ரஹ்மான் குரலில் வெளியாக இருக்கிறது . இது மட்டுமில்லாமல், ‘காலத்துக்கும் நீ வேணும்’ என்ற பாடலை நடிகர் சிலம்பரசன் பாடியுள்ளார். ’வெந்து தணிந்தது காடு’ படத்தின் இசை வெளியீட்டு விழா மற்றும் டிரெய்லர் அறிவிப்பினை ரசிகர்கள் இணையத்தில் ட்ரெண்ட் செய்து வருகின்றனர்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in