’கல்யாணம்... கல்யாணம்னு பசங்கள டார்ச்சர் பண்ணாதீங்க!’ - பெற்றோருக்கு சிம்பு வேண்டுகோள்

’கல்யாணம்... கல்யாணம்னு பசங்கள டார்ச்சர் பண்ணாதீங்க!’ - பெற்றோருக்கு சிம்பு வேண்டுகோள்

சிம்பு, சித்தி இட்னானி உள்ளிடோர் நடித்துள்ள படம், ’வெந்து தணிந்தது காடு’. கௌதம் வாசுதேவ் மேனன் இயக்கியுள்ள இந்தப் படத்தை வேல்ஸ் பிலிம் இன்டர்நேஷனல் சார்பாக ஐசரி கணேஷ் தயாரித்துள்ளார். ஏ.ஆர்.ரஹ்மான் இசை அமைத்துள்ளார். சித்தார்த்தா ஒளிப்பதிவு செய்துள்ள இந்தப் படத்தை தமிழில் ரெட் ஜெயன்ட் மூவிஸ் வெளியிடுகிறது. இதன் பாடல் வெளியீட்டு விழா சென்னையில் நேற்று நடந்தது. கமல்ஹாசன் டிரெய்லரை வெளியிட்டார். விழாவில், நடிகர் சிம்பு பேசியதாவது:

“கௌதம் வாசுதேவ் மேனனுடன் மூன்றாவது முறையாக இந்தப் படத்தில் இணைந்துள்ளேன். கவுதமுக்கும் எனக்கும் ஒரு மேஜிக் இருக்குன்னு நினைக்கிறேன். இந்தப் படத்துல, ரசிகர்களுக்கு புதுசா ஏதாவது கொடுக்கணும்னு நிறைய மெனக்கிட்டிருக்கார். கவுதம் ஒரு காதல் கதை பண்ணலாம்னுதான் முதலில் சொன்னார். வித்தியாசமா வேற ஏதாவது பண்ணலாம்னு சொல்லும்போதுதான், ஜெயமோகன் கதை கிடைச்சது.

அந்தக் கதையில புது பையன் நடிச்சாதான் சரியா இருக்கும்னு சொன்னார் கவுதம். இல்லை நானே நடிக்கிறேன்னு சொன்னேன். திடீர்னு, இந்தக் கதையில 19 வயசு பையனா வரணும்னு சொன்னார்.

வாயைக் கொடுத்து வம்புல மாட்டிக்கிட்டேனோன்னு முதல்ல பயந்தேன். இந்தப் படம் பற்றி பெருசா பேச விரும்பல. படம் பண்ண வேண்டியதுதான் நம்ம வேலை. அதைப் பார்த்துட்டுப் பேச வேண்டியது அவங்க (ரசிகர்கள்) வேலை. இது கமர்சியலான படம் இல்லை. மாஸ் காட்சிகள் இருந்தாலும் இது ஒரு பயணம்; முயற்சி. சொந்த ஊரைவிட்டுட்டு வெளியூர்ல போயி குடும்பத்துக்காக கஷ்டப்பட்டுட்டு நிறையப் பேர் போராட்டிட்டு இருப்பாங்க. அவங்களுக்கு சமர்ப்பணம் பண்ற மாதிரி இந்தப் படம் இருக்கும். கிளைமாக்ஸ்ல ஒரு விஷயம் இருக்கு. நீங்க எல்லாரும் அதை ரசிப்பீங்கன்னு நம்பறேன்.

பாடல் வெளியீட்டு விழாவுல என்ன பேசப்போறீங்கன்னு நிறைய பேர் கேட்கிறாங்க. ஏன் அதைக் கேட்கிறீங்கன்னு கேட்டேன். மாநாடு பட பாடல் வெளியீட்டுல அழுதுட்டீங்க. இதுலயும் அழுதீங்கன்னா, படம் சென்டிமென்டா படம் ஹிட்டாயிடும்னு சொன்னாங்க. என்னய்யா இது, ஒருவாட்டி தெரியாம அழுதிட்டேங்கறதுக்காக ஒவ்வொரு முறையும் அழணும்னா எப்படி? இப்பதான் இவங்கள்லாம் அந்த கண்ணீரை துடைச்சுவிட்டு, சந்தோஷமா இங்க வந்து நிற்கிறேன்.

’மாநாடு’ என்னோட வெற்றி இல்லை. தமிழக மக்கள் கொடுத்த வெற்றி. மக்கள் வித்தியாசமான படங்களை பார்க்கணும்னு ஆசைப்படறாங்க. இங்க நிறைய மாணவர்கள் இருக்காங்க. ஒரு விஷயம் சொல்லணும்னு நினைக்கிறேன். இது அட்வைஸ் இல்லை. இன்னைக்கு நன்றியுணர்வு இல்லாம இருக்காங்க. நமக்கு யாராவது சின்னதா உதவி பண்ணியிருக்கலாம். நான் கூட நம்ம அதுக்கு தகுதியானதா இருக்கறதால, அவங்க உதவி பண்ணியிருக் காங்கன்னு நினைச்சிருக்கேன். ஆனா, அது அப்படியில்லை. அவங்க நல்ல மனசுதான் நமக்கு அப்படி செய்ய வச்சிருக்கு. அந்த மாதிரி நமக்கு யாராவது நல்லது பண்ணியிருந்தால், அவங்களை மறக்காதீங்க. நன்றியோட இருங்கங்கறதுதான் நான் சொல்ற விஷயம். அப்பா, அம்மாவை பார்த்துக்கோங்க. கடைசி காலத்துல கைவிட்டுடாதீங்க.”

இவ்வாறு நடிகர் சிம்பு பேசினார்.

பின்னர் கேட்கப்பட்ட கேள்விக்கு பதிலளித்த சிம்பு, ‘‘நான் எல்லா பெற்றோரிடமும் ஒரு வேண்டுகோள் வைக்கிறேன். பசங்களைப் போட்டு, கல்யாணம் கல்யாணம்னு டார்ச்சர் பண்ணாதீங்க. சமூகம் கொடுக்கிற அழுத்தங்களாலதான் நிறைய தவறான திருமணங்கள் கூட நடக்குது. பசங்களே அவங்க வாழ்க்கையை பார்த்துக்கிடட்டும். எல்லாத்தையும் மீறி, மேல ஒருத்தர் இருக்காரு. அவரா பார்த்து ஒருத்தரை அனுப்புவாரு. அதுவரை வெயிட் பண்ணுவோம்’’ என்றார்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in