சர்ச்சை பேச்சு: நடிகையை கைது செய்ய போலீஸார் தீவிரம்

நடிகை ஸ்வேதா திவாரி
நடிகை ஸ்வேதா திவாரி

சர்ச்சை கருத்துகளைத் தெரிவித்ததாக, நடிகை ஸ்வேதா திவாரியை போலீஸார் கைது செய்ய திட்டமிட்டுள்ளனர்.

பிரபல இந்தி நடிகை ஸ்வேதா திவாரி. இவர் டிவி தொடர்களிலும் நடித்து வருகிறார். இப்போது இவர் ‘ஷோ ஸ்டாப்பர்’ என்ற வெப் தொடரில் நடித்துள்ளார். இதில், ரோகித் ராய், திகன்கனா சூரியவன்சி, சவுரப் ராஜ் ஜெயின் உட்பட பலர் நடிக்கின்றனர். இந்தப் படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு, மத்திய பிரதேச மாநிலம் போபாலில் நடந்தது.

அப்போது, நடிகை ஸ்வேதா, கடவுளைத் தொடர்புபடுத்தி நகைச்சுவைக்காக தெரிவித்த கருத்து சர்ச்சையானது. அம்மாநில உள்துறை அமைச்சர் நரோட்டம் மிஸ்ரா, நடிகை மீது நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார். அதோடு, நடிகையின் பேச்சுகுறித்து அறிக்கை சமர்ப்பிக்குமாறும் போபால் போலீஸ் கமிஷனரிடம் தெரிவித்தார்.

மேலும், அந்தப் பகுதியைச் சேர்ந்த சோனு பிரஜாபதி என்பவர், மத உணர்வுகளை புண்படுத்திவிட்டதாக நடிகை மீது புகார் கொடுத்தார். அதன் அடிப்படையில் வழக்குப் பதிவு செய்துள்ள போலீஸார், நடிகைக்கு சம்மன் அனுப்ப உள்ளனர்.

இதுபற்றி காவல் துறை உதவி ஆணையர் பிட்டு சர்மா கூறும்போது, ‘‘இந்த வழக்கில் நடிகை ஸ்வேதா திவாரி முறையாக கைது செய்யப்படுவார். அவர் காவல் நிலையத்தில் இருந்தே ஜாமீன் பெறலாம். பிறகு அவர் நீதிமன்றம் செல்லலாம்’’ என்று தெரிவித்துள்ளார்.

இதையடுத்து நடிகையை கைது செய்ய போலீஸார் தீவிரம்காட்டி வருகின்றனர்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in