ரஜினியை அடுத்து தனுஷூடன் இணையும் சிவராஜ்குமார்!

ரஜினியை அடுத்து தனுஷூடன் இணையும் சிவராஜ்குமார்!

நடிகர் ரஜினிகாந்த் உடன் ‘ஜெயிலர்’ படத்தை அடுத்து நடிகர் தனுஷூடன் இணைகிறார் சிவராஜ்குமார்.

கன்னட சூப்பர் ஸ்டார் சிவராஜ்குமார் நடிகர் ரஜினிகாந்த்துடன் தற்போது ‘ஜெயிலர்’ படத்தில் இணைந்துள்ளார். தமிழில் இது அவருடைய அறிமுகப் படம் என்பது குறிப்பிடத்தக்கது. சிவராஜ்குமார் மற்றும் ரஜினிகாந்த் இருவரும் இணைகிறார்கள் என்ற செய்தி ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்ப்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில் தற்போது ரஜினிகாந்த்தை அடுத்து நடிகர் தனுஷ் படத்திலும் சிவராஜ்குமார் இணைகிறார் என்ற தகவல் வந்துள்ளது.

’திருச்சிற்றம்பலம்’, ‘நானே வருவேன்’ படங்களின் வெற்றியைத் தொடர்ந்து ‘வாத்தி’, ‘கேப்டன் மில்லர்’ ஆகிய படங்களைக் கைவசம் வைத்துள்ளார் நடிகர் தனுஷ். இதில் ‘கேப்டன் மில்லர்’ படத்தில் தான் நடிகர் சிவராஜ்குமார் இணைய இருக்கிறார். இது குறித்தான அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்ப்பார்க்கலாம்.

‘ராக்கி’, ‘சாணிக்காயிதம்’ படங்களை அடுத்து இயக்குநர் அருண் மாதேஸ்வரன் தனுஷூடன் ‘கேப்டன் மில்லர்’ படத்திற்காக இணைந்திருக்கிறார். 1980-களில் நடந்த உண்மைக் கதையை அடிப்படையாகக் கொண்டு பீரியாடிக் படமாக உருவாகி வரும் இந்தப் படத்தின் அறிவிப்பு, போஸ்டர் ஆகியவை ரசிகர்கள் மத்தியில் எதிர்ப்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

பிரியங்கா மோகன், நிவேதிதா சதீஷ், இளங்கோ குமரவேல் ஆகியோர் படங்களில் நடிக்கின்றனர். படத்திற்கு இசை ஜிவி பிரகாஷ். சமீபத்தில் இதன் பூஜை நடைபெற்றது. தமிழ்நாட்டின் பல்வேறு இடங்களில் இதன் படப்பிடிப்பு நடத்தத் திட்டமிட்டிருந்தாலும் இதன் பெரும்பகுதி தென்காசியில் நடக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in