HBD Sathyaraj: ‘சிவாஜி’யின் நிறைவேறாத ஆசை... திரையில் வாழ்ந்து காட்டிய சத்யராஜ்!

சத்யராஜ்
சத்யராஜ்

வில்லத்தனம், நக்கல் - நையாண்டி, ஹீரோயிசம், குணச்சித்திர நடிப்பு என ஆல் ஏரியாவிலும் நடிகர் சத்யராஜ் கில்லி. 90’ஸ் கிட்ஸ்க்கு தகிடு...தகிடு என்றால் 2கே கிட்ஸூக்கு கட்டப்பா. இன்று அவரின் 68வது பிறந்தநாள்.

சினிமாவிற்குள் நுழைந்த ஆரம்ப காலத்தில் எதிர்மறை கதாபாத்திரங்களில் அதிகளவில் நடித்து வந்தவருக்கு பாரதிராஜா இயக்கத்தில் வெளியான ‘கடலோரக் கவிதைகள்’ திரைப்படம் மிகப்பெரிய திருப்புமுனையாக அமைந்தது. ஜனரஞ்சக கதாநாயகனாக வேறு ஒரு பரிமாணத்தில் ரசிகர்கள் அவரைக் கொண்டாடினார்கள்.

‘கடலோரக் கவிதைகள்’ மட்டுமல்லாது, ’வால்டர் வெற்றிவேல்’, ‘மிஸ்டர் பாரத்’, ’மக்கள் என் பக்கம்’, ‘நண்பன்’ என அவரது சினிமா பயணத்தில் பல கதாபாத்திரங்களை ஏற்றிருந்தாலும் ரசிகர்களின் ஆல் டைம் ஃபேவரைட்டான சில கதாபாத்திரங்கள் குறித்து இங்கு பார்க்கலாம்.

’அமைதிப்படை’ அமாவாசை
’அமைதிப்படை’ அமாவாசை

’அமைதிப்படை’ அமாவாசை:

மணிவண்ணன் இயக்கத்தில் 1994ம் ஆண்டு வெளியானத் திரைப்படம் ‘அமைதிப்படை’. அரசியல்வாதி ஒருவரிடம் அடிமட்டத் தொண்டனாக இணையும் அமாவாசை, அரசியல் களத்தில் களமாடி எப்படி எம்.எல்.ஏ. நாகராஜ சோழனாக மாறுகிறான் என பொலிட்டிக்கல் சட்டையர் கதையாக உருவாகிய படம் ‘அமைதிப்படை’. இன்று வரை இந்தப் படத்தையும், கதாபாத்திரத்தையும் ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். இந்தப் படத்தில் மணிவண்ணன் - சத்யராஜ் காம்போவும் அவர்களது நடிப்பும் காட்சிக்கு காட்சி ரசிக்கக்கூடிய ஒன்றாக அமைந்திருக்கும்.

’ரிக்‌ஷா மாமா’ ராஜா...
’ரிக்‌ஷா மாமா’ ராஜா...

’ரிக்‌ஷா மாமா’ ராஜா :

பி.வாசு இயக்கத்தில் சத்யராஜ், கெளதமி, பேபி ஸ்ரீதேவி ஆகியோர் நடித்திருந்த படம் ‘ரிக்‌ஷா மாமா’. பேபி ஸ்ரீதேவி புவனா என்ற கதாபாத்திரத்தில் பெற்றோரின் உண்மையான அன்புக்கும் அக்கறைக்கும் ஏங்கும் குழந்தையாக நடித்திருப்பார். அந்த இடத்திற்கு ‘ரிக்‌ஷா மாமா’வாக சத்யராஜ் வர ‘ரிக்‌ஷா மாமா...ரிக்‌ஷா மாமா’ என உருகுவார். ஸ்ரீதேவி-சத்யராஜின் ஆன் ஸ்கிரீன் காம்பினேஷனும் அவர்களது அன்பும் ஸ்ரீதேவியின் ‘ரிக்‌ஷா மாமா’ குரலுக்கும் அப்போது படம் தாறுமாறாக ஹிட்டடித்தது.

’நிஜமாவே நான் வில்லன்மா...என் கேரக்டரையே புரிஞ்சிக்க மாட்டிங்கறியே பா’ என வில்லத்தனத்தில் மிரட்டிய சத்யராஜின் இந்த இன்னொரு முகத்திற்கு அப்போது பாராட்டுகள் குவிந்தது.

’பாகுபலி’ கட்டப்பா
’பாகுபலி’ கட்டப்பா

’பாகுபலி’ கட்டப்பா:

இராஜமெளலி இயக்கத்தில் பிரபாஸ், தமன்னா, அனுஷ்கா, ரம்யா கிருஷ்ணன் உள்ளிட்டப் பலர் நடிப்பில் கடந்த 2015ஆம் ஆண்டு வெளியான 'பாகுபலி’ திரைப்படம் இந்திய சினிமா வரலாற்றில் பல புதிய சாதனைகளைப் படைத்தது. குறிப்பாக அதில் கட்டப்பா கதாபாத்திரம் 2கே கிட்ஸூக்குப் பிடித்தமான ஒன்று.

அமேந்திர பாகுபலியின் மாமனாக மகிழ்மதியின் காவலனாக வரும் கட்டப்பா கதாபாத்திரம் பாசத்தைக் கொட்டி வளர்த்த பாகுபலியை தன் கையாலேயே குத்தி கொன்று விடும். ‘கட்டப்பா ஏன் பாகுபலியை கொன்றான்?’ என கேள்வியிலேயே தொக்கி நிற்கும் இந்த கதாபாத்திரமும் படமும் பல முறை பார்த்தாலும் சலிக்காதவை.

’கனா’ முருகேசன்...
’கனா’ முருகேசன்...

’கனா’ முருகேசன்:

வில்லன், ஹீரோ என நடித்து வந்த சத்யராஜ் ஒரு கட்டத்திற்குப் பிறகு குணச்சித்திரக் கதாபாத்திரங்களில் நடிக்கத் தொடங்கினார். அதில் ‘கனா’ முருகேசன் ஜனரஞ்சக பார்வையாளர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றது. தன் கனவுகளுக்காக போராடும் மகளுடன் துணை நின்று அவள் வெற்றியை தன் வெற்றியாகக் கொண்டாடும் ஒரு எளிமையான தந்தையாக முருகேசன் கதாபாத்திரத்தில் நெகிழ வைத்திருப்பார் சத்யராஜ்.

தந்தை பெரியார்...
தந்தை பெரியார்...

தந்தை பெரியார்:

மூடநம்பிக்கைகள், பெண் விடுதலை என பல விஷயங்கள் குறித்தான விழிப்புணர்வையும் அறிவையும் புகட்டுவதை தன் வாழ்நாள் முழுவதும் தொடர்ந்து செய்து கொண்டிருந்த திராவிடத் தலைவர்களில் முக்கியமானவர் பெரியார். இவரின் கதையை இயக்குநர் ஞான ராஜசேகரன் படமாக்க தீவிர பெரியார் தொண்டனான சத்யராஜே இதில் பெரியார் வேடம் ஏற்றிருந்தார். சிவாஜி கணேசன் முதல் பல நடிகர்கள் ஏற்று நடிக்க விருப்பப்பட்ட இந்த கதாபாத்திரம் தனக்கு கிடைத்ததில் எப்போதும் மகிழ்ச்சி என கூறுவார்.

தனக்கு ‘சிவாஜி’ என்று பெயர் சூட்டிய பெரியாரின் வாழ்க்கை கதையில் ‘பெரியாராக’ நடிக்க வேண்டும் என்கிற நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் வாழ்நாள் கனவு நிறைவேறாமலேயே போனது. பெரியார் கொள்கைகளால் ஈர்க்கப்பட்டு, தன் வாழ்விலும் கடைப்பிடித்து வரும் நடிகர் சத்யராஜ், பெரியாரை அந்த படத்தில் ரசிகர்களின் கண்முன்னே கொண்டு வந்திருப்பார்.

ஹீரோக்களுக்கு இரண்டாவது இன்னிங்க்ஸ் என்பதெல்லாம் கிடையாது. திரையுலகில் மறுபிரவேசம் என்றால், ஹீரோவாக நடித்தவர்கள் குணசித்திர நடிகர்களாகவோ, அப்பா, அண்ணன், வில்லன் என்று ட்ராக் மாறினால் தான் ரசிகர்களிடம் இரண்டாவது இன்னிங்ஸில் வரவேற்பு இருக்கும். இதிலும் சத்யராஜ் சாதித்திருந்தார்.

மகா நடிகன், இங்கிலீஷ்காரன், கோவை பிரதர்ஸ் என இரண்டாவது இன்னிங்ஸிலும் அன்றைய யூத் ஹீரோக்களுக்கு போட்டியாக வசூல் வேட்டை நடத்தியவர் சத்யராஜ்.

காமதேனு வாசகர்கள் சார்பிலும் பிறந்தநாள் வாழ்த்துகள் சத்யராஜ்...

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in