`வாரிசு’ பட வெளியீட்டு சர்ச்சை: நடிகர் சசிகுமார் சொல்வது என்ன?

`வாரிசு’ பட வெளியீட்டு சர்ச்சை: நடிகர் சசிகுமார் சொல்வது என்ன?

‘வாரிசு’ பட வெளியீட்டு சர்ச்சை குறித்து நடிகர் சசிகுமார் கருத்து தெரிவித்துள்ளார்.

வம்சி இயக்கத்தில் நடிகர் விஜய் நடிப்பில் தமிழ், தெலுங்கு என பைலிங்குவலாக அடுத்த வருடம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வெளியாக இருக்கக்கூடியத் திரைப்படம் ‘வாரிசு’. இந்தப் படத்தினை தில் ராஜூ தயாரித்துள்ளார். சங்கராந்தி பண்டிகையை ஒட்டி தெலுங்கில் அல்லு அர்ஜூன், சிரஞ்சீவி ஆகிய நடிகர்களது படங்களும் வெளியாகவுள்ளது. இந்த சமயத்தில் ‘வாரிசு’ திரைப்படமும் தெலுங்கில் வெளியாகும் என்பதால் அது நேரடித் தெலுங்கு படம் இல்லை என்பதாலும் அதற்கு குறைவான எண்ணிக்கையிலான தியேட்டர்கள் மட்டுமே ஒதுக்கப்படும் என்ற விவாதம் எழுந்துள்ளது.

இது குறித்து நடிகரும் இயக்குநருமான சசிகுமார் காமதேனு யூடியூப் தளத்திற்கு அளித்துள்ள பேட்டியில், “இந்த சர்ச்சை ஒரு தகவலாக மட்டுமே வந்து கொண்டிருக்கிறது. ’வாரிசு’ படத் தயாரிப்பாளர் சார்பாக யாரும் இன்னும் உறுதியாக சொல்லவில்லை.

தடை என்பதையும் இன்னும் யாரும் சொல்லவில்லை. அதனால், நாம் எந்த ஒரு முடிவும் எடுக்க முடியாது. ஒருவேளை, அங்குத் தெலுங்கில் குறித்த தேதிக்கு வெளியாகவில்லை எனில், அது குறித்து நாமும் முடிவு எடுக்க வேண்டிய சூழல் வரும். இந்தப் படத்தின் தயாரிப்பாளரும் அந்த ஊரைச் சேர்ந்தவர்தான் எனும்போது எதையும் நாம் யூகத்தின் அடிப்படையில் சொல்ல முடியாது.

பான் இந்தியா என்ற பதம் எல்லாம் இப்போதுதான் வந்திருக்கிறது. சினிமாவை மொழிகள் கடந்து பார்வையாளர்கள் ரசித்து வருகிறார்கள். தெலுங்கு மட்டுமல்ல, எந்த ஒரு மொழிப்படம் எடுத்தாலுமே தங்களுடைய மொழிப் படங்களுக்குத்தான் முதலில் முக்கியத்துவம் தர வேண்டும் என்று நினைப்பார்கள். நாமும் அப்படித்தான். ஆனால், நம்மிடம் தியேட்டர்கள் எண்ணிக்கை அதிக அளவில் இருப்பதால், எல்லா மொழிப்படங்களுக்கும் முக்கியத்துவம் கொடுத்து படங்களை வெளியிட முடிகிறது. இதை நாமும் தயாரிப்பாளர்கள் ஒன்று சேர்ந்து பேச வேண்டும். ஆனால், என்னைப் பொருத்தவரை எல்லாமே சரியாகிவிடும் என்ற நம்பிக்கை உள்ளது” என்றார்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in