
நடிகர் ரஜினிகாந்த்தின் ‘ஜெயிலர்’ பட வெளியீடு தள்ளிப்போக வாய்ப்புள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் நடிகர் ரஜினிகாந்த், மோகன்லால், தமன்னா, ரம்யா கிருஷ்ணன் உள்ளிட்டப் பலரும் நடித்து வரக்கூடியத் திரைப்படம் ‘ஜெயிலர்’. அனிருத் இசையமைக்கும் இந்தப் படத்தினை சன் பிக்சர்ஸ் தயாரிக்கிறது. சென்னை, ஹைதராபாத் என இதன் படப்பிடிப்பு பரபரப்பாக நடந்து வருகிறது. இந்த வருடம் கோடை விடுமுறைக்கு இந்தப் படம் வெளியாக திட்டமிட்டிருப்பதாகச் சொல்லப்பட்ட நிலையில் தற்போது இதன் வெளியீடு தள்ளிப்போக வாய்ப்புள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
இயக்குநர் மணிரத்னத்தின் ‘பொன்னியின் செல்வன்’ திரைப்படத்தின் இரண்டாம் பாகம் வருகிற ஏப்ரல் மாதம் வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தப் படத்தின் முதல் பாகம் ஏற்கெனவே உலகெங்கிலும் வசூல் ரீதியாகவும் விமர்சன ரீதியாகவும் வெற்றிப் பெற்ற நிலையில், இதன் இரண்டாம் பாகமும் ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பினை ஏற்படுத்தியுள்ளது. இதனால், ‘பொன்னியின் செல்வன்’ படத்தின் இரண்டாம் பாகத்துடன் ‘ஜெயிலர்’ போட்டி வேண்டாம் என ஆகஸ்ட் மாதம் தள்ளிப் போக வாய்ப்புள்ளதாகவும் கூறப்படுகிறது. மேலும், இதன் படப்பிடிப்பும் இன்னும் முடிவடையவில்லை. விரைவில் இது குறித்தான அதிகாரப்பூர்வ அறிவிப்பினை எதிர்ப்பார்க்கலாம்.