
கிட்டத்தட்ட 47 ஆண்டுகளுக்குப் பிறகு இது நடந்திருக்கிறது என நடிகர் ரஜினிகாந்த் நெகிழ்ச்சியாகப் பகிர்ந்துள்ளார்.
’ஜெயிலர்’ படத்திற்குப் பிறகு நடிகர் ரஜினிகாந்த் தனது 170வது படத்தில் நடித்து வருகிறார். ‘ஜெய்பீம்’ ஞானவேல் இயக்கத்தில் உருவாகி வரும் இந்தப் படத்திற்கு தற்காலிகமாக ‘தலைவர் 170’ எனத் தலைப்பிடப்பட்டுள்ளது. கடந்த நான்காம் தேதி முதல் கட்டப் படப்பிடிப்பு கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் பூஜையுடன் தொடங்கியது. இப்போது இதன் இரண்டாம் கட்ட படப்பிடிப்பு நெல்லை மாவட்டம் பணகுடியில் உள்ள ஓடு தயாரிக்கும் தொழில் கூடத்தில் கடந்த இரண்டு நாட்களாக நடைபெற்று வருகிறது.
இதற்காக ரஜினிகாந்த் கன்னியாகுமரியில் உள்ள தனியார் ஹோட்டலில் தங்கி இருந்தபடி தினமும் படப்பிடிப்பில் கலந்து கொள்கிறார். கேரளாவைப் போலவே நெல்லையிலும் ரசிகர்கள் அவருக்கு உற்சாக வரவேற்பு கொடுத்து வருகின்றனர்.
இந்த நிலையில், படப்பிடிப்புத் தளத்தில் 47 ஆண்டுகளுக்கு பிறகு நெல்லை வந்துள்ளதாக நெகிழ்ச்சியுடன் பழைய நினைவுகளைப் பகிர்ந்துள்ளார் ரஜினிகாந்த். அதாவது, ‘புவனா ஒரு கேள்விக்குறி’ படத்திற்காக 1977ம் ஆண்டு கன்னியாகுமரி மற்றும் நெல்லை மாவட்டங்களுக்கு ரஜினிகாந்த் வருகை தந்து இருந்தார். அதன் பிறகு தற்போது தான் படப்பிடிப்பிற்காக நெல்லை வந்துள்ளதாகக் கூறியுள்ளார்.