சந்தோஷம், நிம்மதி 10 சதவீதம் கூட கிடையாது: நடிகர் ரஜினிகாந்த் பரபரப்பு பேச்சு

சந்தோஷம், நிம்மதி 10 சதவீதம் கூட கிடையாது: நடிகர் ரஜினிகாந்த் பரபரப்பு பேச்சு

பணம், புகழ், பெருமை, உச்சம் எல்லாம் பார்த்துவிட்டேன். அதில் சந்தோஷம், நிம்மதி 10 சதவிகிதம் கூட கிடையாது என்று நடிகர் ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார்.

கிரியா யோகா தியானத்தைப் பயிற்சி செய்வது குறித்து பரமஹம்ச யோகானந்தர், தனது யோகதா சத்சங்கப் பாடங்களில் விளக்கியுள்ளார். இந்தப் பாடங்கள், ’கிரியா யோகா மூலம் இனிய வெற்றிகர வாழ்வு’ என்ற தலைப்பில் தமிழில் புத்தகமாக வெளியிடப்பட்டுள்ளது. இந்த நூலை சென்னையில் நேற்று நடந்த நிகழ்ச்சியில், நடிகர் ரஜினிகாந்த் வெளியிட்டார்.

அப்போது அவர் பேசியதாவது: நான் எத்தனையோ படங்கள் நடித்திருந்தாலும், எனக்கு ஆத்ம திருப்தி தந்தது ராகவேந்திரா, பாபா படங்கள்தான். இந்த படங்கள் வந்த பின்னர் தான் அனைவருக்கும் இவர்களைப் பற்றி தெரிய வந்தது. ராகவேந்திரர் இங்குள்ள புவனகிரியில் பிறந்தவர் என்பது அந்தப் படம் வருவதற்கு முன் யாருக்கும் தெரியாது. எனக்கு சந்தோஷமான விஷயம், என் ரசிகர்கள் இருவர் சன்னியாசியாக மாறியுள்ளனர். ஆனால் நான் இன்னும் நடிகராக இருக்கிறேன்.

இமயமலையில் இயற்கையாகவே அமைந்துள்ள குகைகள் சொர்க்கம் போல் காட்சியளிக்கும். குகைகளில் சில மூலிகைகள் கிடைக்கும். அதனைச் சாப்பிட்டதால் ஒரு வாரத்திற்கான புத்துணர்ச்சி அதிகமாக கிடைக்கும். கங்கை நதி ஏன் புனிதம் என்றால், மூலிகைகள் அதில் கலக்கும். அதுமட்டுமல்ல, அங்கே உள்ள சித்தர்கள் குளிப்பதால் பவித்ரமாக இருக்கும்.

அனைவருக்கும் உடல் ஆரோக்கியம் முக்கியம். 18 வயதில் உடலை நன்றாக பார்த்துக் கொள்ள வேண்டும். அதை விட முக்கியம் 60 வயதுக்கு பிறகு நம் உடலை நன்றாகப் பார்த்துக்கொள்ள வேண்டும். சொத்துகளை விட்டுச் செல்வதை விடவும், கடைசிகாலத்தில் நோயாளியாக இருந்து விடக் கூடாது. இருந்தால் அது குடும்பத்துக்கும் துன்பம், நோயாளிக்கும் துன்பம். சந்தோஷமாக இருக்கும்போதே உயிர் போய்விட வேண்டும். ஏனென்றால் இரண்டு முறை மருத்துவமனை சென்றுவந்தவன் நான்.

அதேபோல் அறிவை வளர்த்துக் கொள்ள வேண்டும். மனசு அறிவோட பைபுராடக்ட்தான். அதுவே மூலாதாராம். மனசு, அறிவு, உடம்பு, எல்லாம் செயல்பட ஒரு சக்தி, அதுதான் உயிர். அதை ஆத்மா, ஜீவாத்மா என்கின்றனர். மனிதனுக்கு வியாதியே, கவலைதான். அதுதான் பிரச்சினையே. மனம் கடந்த காலத்தில்தான் இருக்கும். யார், யார் நம்மைத் திட்டினான், மோசம் செய்தான் என்றுதான் செல்லும். கவலை நம் எல்லா பலத்தையும் எடுத்து விடும். நிம்மதி நமக்குப் போதும். நான் எங்கிருந்து வந்தேன் என்று எல்லோருக்கும் தெரியும்.

பணம், புகழ், பெருமை, உச்சம் எல்லாம் பார்த்துவிட்டேன். பெரிய பெரிய அரசியல் தலைவர்கள், தொழிலதிபர்கள் எல்லோரிடமும் பழகிவிட்டேன். அதில் சந்தோஷம், நிம்மதி 10 சதவிகிதம் கூட கிடையாது. ஏனென்றால், அதெல்லாம் தற்காலிகமானதுதான். கிரியாவில் பயிற்சி செய்யுங்கள். அதில் மாற்றம் எனக்குத் தெரிகிறது. ஆரோக்கியமாக வாழுங்கள். இவ்வாறு நடிகர் ரஜினிகாந்த் பேசினார்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in