`இந்திய சினிமாவின் மாஸ்டர் பீஸ் `காந்தாரா`- ரிஷப் ஷெட்டியை பாராட்டிய ரஜினிகாந்த்!

`இந்திய சினிமாவின் மாஸ்டர் பீஸ் `காந்தாரா`- ரிஷப் ஷெட்டியை பாராட்டிய ரஜினிகாந்த்!

நடிகர் ரஜினிகாந்த் ‘காந்தாரா’ படம் பார்த்துவிட்டு ரிஷப் ஷெட்டியைப் பாராட்டி உள்ளார்.

கன்னடத்தில் ரிஷப் ஷெட்டி இயக்கி நடித்து வெளியானத் திரைப்படம் ‘காந்தாரா’. கன்னடத்தில் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்ற பிறகு தமிழ், தெலுங்கு உள்ளிட்டப் பிற மொழிகளிலும் ‘காந்தாரா’ திரைப்படம் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் வசூல் ரீதியாகவும் விமர்சன ரீதியாகவும் வெற்றிப் பெற்றது. படம் பார்த்துவிட்டு ரசிகர்கள் திரையுலகினர் அனைவரும் தங்களது பாராட்டுகளைத் தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில், ‘காந்தாரா’ படத்தைப் பார்த்துவிட்டு இயக்குநரும் நடிகருமான ரிஷப் ஷெட்டியையும் படக்குழுவினரையும் நடிகர் ரஜினிகாந்த் பாராட்டியுள்ளார்.

இது குறித்து அவர் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில், ‘”நமக்குத் தெரிந்தவற்றை விட தெரியாதவை எவ்வளவோ மேல்” என்று சொல்வார்கள். இதை ‘காந்தாரா’ படம் வழியே சொல்லி இருக்கிறார்கள் என்பது சிறப்பு. திரைக்கதையாசிரியராகவும் நடிகராகவும் இயக்குநராகவும் ரிஷப் ஷெட்டி என்னைப் புல்லரிக்க வைத்துள்ளார். இந்திய சினிமாவின் மாஸ்டர் பீஸாக இந்தப் படத்தைக் கொடுத்துள்ள மொத்தப் படக்குழுவுக்கும் எனது வாழ்த்துகள்’ என தெரிவித்துள்ளார்.

ரஜினிகாந்த்தின் இந்த ட்வீட்டிற்கு நடிகர் ரிஷப் ஷெட்டி, ‘இந்திய சினிமாவில் நீங்கள் மிகப் பெரிய சூப்பர் ஸ்டார். சின்ன வயதில் இருந்தே நான் உங்களது ரசிகன். நீங்கள் என்னைப் பாராட்டியுள்ளது என்னுடைய கனவு நிறைவேறியது என்றுதான் சொல்வேன். நிறையக் கதைகளால் எனக்கும் சினிமா ரசிகர்கள் பலருக்கும் முன்மாதிரியாக இருந்துள்ளீர்கள். உங்கள் வாழ்த்துக்கு மிக்க நன்றி சார்’ என அதில் தெரிவித்துள்ளார்.

மேலும், படத்தின் தயாரிப்பாளரான கார்த்திக் கெளடா ‘கந்தாரா’ படம் பார்த்து முடித்ததும் நடிகர் ரஜினிகாந்த்திடம் இருந்து நேற்று வந்த தொலைபேசி அழைப்புத் தனக்கு மகிழ்ச்சியளித்ததாகத் தெரிவித்துள்ளார். இதுமட்டுமில்லாமல், இந்த அழைப்புத் தங்களை உணர்ச்சிவயப்பட வைத்துள்ளதாகவும் தனது நன்றியைத் தெரிவித்துள்ளார்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in