`ஜிகர்தண்டா’ படக்குழுவுக்கு நேரில் சர்ப்ரைஸ் கொடுத்த ரஜினிகாந்த்... குஷியில் படக்குழு!

'ஜிகர்தண்டா2’ படக்குழுவுடன் ரஜினிகாந்த்
'ஜிகர்தண்டா2’ படக்குழுவுடன் ரஜினிகாந்த்

’ஜிகர்தண்டா2’ படத்தைப் பார்த்துவிட்டு நடிகர் ரஜினிகாந்த் படக்குழுவினருக்கு வாழ்த்து தெரிவித்தது மட்டுமல்லாது அவர்களை நேரில் அழைத்தும் தனது வாழ்த்துகளையும் அன்பையும் பகிர்ந்துள்ளார். இந்தப் புகைப்படத்தைப் படக்குழு பகிர்ந்து மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளது.

கார்த்திக் சுப்பாராஜ் இயக்கத்தில் நடிகர்கள் ராகவா லாரன்ஸ், எஸ்.ஜே.சூர்யா உள்ளிட்டப் பலரது நடிப்பில் தீபாவளி பண்டிகை விடுமுறையை ஒட்டி வெளியானப் படம் ‘ஜிகர்தண்டா2’. படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றுவரும் நிலையில், இந்தப் படத்தினைப் பார்த்துவிட்டு நடிகர் ரஜினிகாந்த் தனது வாழ்த்துகளை நேற்று தெரிவித்திருந்தார்.

அவர் வெளியிட்ட அறிக்கையில், ‘’ஜிகர்தண்டா டபுள் எக்ஸ்’ திரைப்படம் ஒரு குறிஞ்சி மலர். கார்த்திக் சுப்பாராஜின் அற்புதமான படைப்பு. லாரன்ஸால இப்படியும்‌ நடிக்க முடியுமா என்ற பிரம்மிப்பை நமக்கு உண்டாக்குகிறது. எஸ்.ஜே.சூர்யா இந்நாளின்‌ திரை உலக நடிகவேள்‌. வில்லத்தனம்‌, நகைச்சுவை, குணசித்திரம்‌ என மூன்றையும்‌ கலந்து அசத்தி இருக்கிறார்’ எனச் சொன்னதோடு இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன், ஒளிப்பதிவாளர் திரு மற்றும் படத்தில் நடித்திருந்த பழங்குடிகள் என அனைவரையும் பாராட்டி கார்த்திக் சுப்பாராஜை நினைத்து பெருமைப்படுவதாகவும் கூறியிருந்தார்.

இந்த நிலையில், படக்குழுவினர் அனைவரையும் நடிகர் ரஜினிகாந்த் நேரில் சந்தித்துத் தனது வாழ்த்துகளை கூறியுள்ளார். இந்தப் புகைப்படத்தினை இயக்குநர் கார்த்திக் சுப்பாராஜ் தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்து, ‘உங்களது அன்பும் பாராட்டும் நீண்ட உரையாடலும் எங்கள் மொத்த அணிக்கும் பாசிட்டிவான எனர்ஜியைக் கொடுத்தது தலைவா. ’ஜிகர்தண்டா டபுள் எக்ஸ்’ படக்குழுவிடம் இருந்து தலைவருக்கு நிறைய அன்பு’ எனப் பகிர்ந்துள்ளார்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in