நடிகர் ரஜினிகாந்த் இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் இயக்கியப் படத்தைப் பார்த்த புகைப்படம் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் இயக்குநராக அறிமுகமாக இருக்கும் திரைப்படம் ‘லே மஸ்க்’. விர்ச்சுவல் ரியாலிட்டி அடிப்படையில் இந்தத் திரைப்படம் உருவாக்கப்பட்டிருக்கிறது. இந்தத் திரைப்படத்தை நடிகர் ரஜினிகாந்த் விஆர் ஹெட்செட் அணிந்து விர்ச்சுவல் கண்ணாடியுடன் பிரத்யேகமான விர்ச்சுவல் நாற்காலியில் அமர்ந்து பார்த்து மகிழ்ந்திருக்கிறார்.
37 நிமிடங்கள் கொண்ட இந்தத் திரைப்படம் விர்ச்சுவல் ரியாலிட்டியை உள்ளடக்கிய இயக்கம், இசை மற்றும் கதை சொல்லல் ஆகியவற்றில் சிறந்த திரை அனுபவமாக இருக்கும். முனிரி கிரேஸ் மற்றும் மரியம் ஜோராபியன் ஆகியோருடன் நோரா அர்னெசெடர் மற்றும் கை பர்னெட் ஆகியோர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்திருக்கின்றனர். குராச்சி பீனிக்ஸ் திரைக்கதையை ஏ.ஆர்.ரஹ்மான் இயக்கி இருக்கிறார்.
சென்னையில் நடிகர் ரஜினிகாந்த் படத்தைப் பார்த்துக் கொண்டிருக்கும் படியான இந்தப் புகைப்படங்களை இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் தனது சமூகவலைதளப் பக்கத்தில் பகிர்ந்து மகிழ்ச்சியை வெளிப்படுத்தி இருக்கிறார். ஐஷ்வர்யா ரஜினிகாந்த் இயக்கும் ’லால் சலாம்’ படத்திற்கு இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.