
’அஜீத் நடித்த ’துணிவு’, விஜய்யின் ’வாரிசு’ என இரண்டு திரைப்படங்களுமே நன்றாக போகும்’ என்று வாழ்த்துடன் கூடிய கணிப்பை தந்திருக்கிறார் நடிகர் பிரபு.
பொங்கலுக்கு ஒருசேர களமிறங்கும் அஜித் மற்றும் விஜய் நடித்த துணிவு மற்றும் வாரிசு திரைப்படங்கள் குறித்தான எதிர்பார்ப்புகள் ரசிகர்கள் முதல் சக நடிகர்கள் வரை விரவிக் கிடக்கின்றன. மாறிய தலைமுறைகள், ரசிகர்களின் ரசனைகள், போட்டிக்கான காட்சி ஊடகங்கள் இவற்றின் மத்தியில், உச்ச நட்சத்திரங்கள் இருவரின் படங்கள் நேருக்கு நேர் மோதுவதை பலரும் சுவாரசியத்துடன் எதிர்நோக்கி உள்ளனர்.
அவர்களில் திரையுலகின் மூத்த நடிகர்களும் அடங்குவார்கள். அந்த வகையில் இளைய திலகம் பிரபு தன்னுடைய கருத்தினை பதிவு செய்திருக்கிறார். தூத்துக்குடி மாவட்டத்தில் நடைபெற்று வரும் ’காதர்பாஷா என்ற முத்துராமலிங்கம்’ திரைப்படத்தின் படப்பிடிப்பில் கலந்து கொள்வதற்காக நடிகர் பிரபு வந்திருந்தார். அப்போது தூத்துக்குடி விமான நிலையத்தில் இன்று காலையில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார்.
”அஜீத் நடித்த துணிவு, விஜய் நடித்த வாரிசு என இரண்டு படங்களுமே நன்றாக போகும். இரண்டு பேரும் நம்ம தம்பிகள்தான். இருவரின் படங்களும் வெற்றி பெறட்டும். சந்தோஷம்” என்றபடி பிரபு விடைபெற்றார்.