
நடிகை மீனாவின் கணவர் வித்யாசாகரின் மறைவு, திரையுலகினரையும் ரசிகர்களையும் கலங்கச் செய்திருக்கிறது. அனைவருடனும் நட்புடன் பழகும் மீனாவுக்கு ஏற்பட்ட துயரம் அவருடன் நடித்த கலைஞர்களை வேதனையில் ஆழ்த்தியிருக்கிறது. கணவரின் எதிர்பாராத மரணத்தை அவர் முதிர்ச்சியாகக் கையாண்டது பலரையும் நெகிழச் செய்தது.
இந்நிலையில் இதுகுறித்து நடிகர் பார்த்திபன் தன்னுடைய சமீபத்திய பேட்டி ஒன்றில் மனம் திறந்திருக்கிறார். “மீனாவை அவரது குழந்தையுடன் எங்காவது பார்த்தால், 'உனக்கே ஒரு குழந்தையா?' என்றுதான் விளையாட்டாகக் கேட்பேன். ஏனென்றால், மீனா பெரியவர் ஆன பிறகுகூட அவரது முகபாவனைகள் குழந்தைத்தன்மையுடனேயே இருக்கும். நான் அவருடன் ‘பாரதி கண்ணம்மா' படத்தில் நடிக்கும்போதுகூட அந்தக் குழந்தைத்தன்மையுடன்தான் இருப்பார். அப்படி இருக்கும்போது அவருக்கு ஒரு குழந்தை பிறந்து, அது இவ்வளவு பெரிதாக வளர்ந்துவிட்டதே என்றுதான் பார்ப்பேன்.
அப்படிப்பட்ட மீனாவை வேதனையான சூழலில் பார்க்கும்போது எனக்குச் சங்கடமாக இருந்தது. ஒரு மரணம் எப்போதுமே உங்களை ஐசியூவில் இருக்கும்வரை அழ வைக்கும். பிறகு அந்த முதிர்ச்சி தானாகவே வந்துவிடும். இதைத்தான் ஞானம் என்பார்கள்” என்று அந்தப் பேட்டியில் பார்த்திபன் கூறியிருக்கிறார்.
மேலும், “நமது அன்புக்குரியவர்கள் ஐசியூவில் இருக்கும்வரை எல்லா பிரார்த்தனைகளையும் செய்வோம். ஆனால், அது கடந்து நிதர்சனம் வரும்போது அழுகை உறைந்துவிடும். தனது கணவருக்கு நீண்ட நாட்கள் உடல்நிலை சரியில்லாத காரணத்தால் இது இப்படித்தான் நடக்கும் என்பதுகூட மீனாவுக்குத் தெரிந்திருக்கலாம். நான் பிறரை சமாதானப்படுத்தும்போது சொல்வேன். 'இவ்வளவு நாள் அவர் படுக்கையில் இருந்து பட்ட சிரமம் இனி இல்லை. அது ஒரு விடுதலை' என்பேன். அதைத்தான் இப்போதும் சொல்ல விரும்புகிறேன்” என அதில் பேசியிருக்கிறார் பார்த்திபன்.