HBD Parthiban | ஒத்துழைக்க மறுத்த வடிவேலு... பிரச்சினையைத் தீர்த்த பார்த்திபன்!

நடிகர் பார்த்திபன்...
நடிகர் பார்த்திபன்...

நடிகர் பார்த்திபன் பெயரை உச்சரிக்கும் போதே ஒவ்வொரு படத்திலும் அவர் எடுக்கும் வித்தியாசமான முயற்சிகள் தான் முதலில் நினைவுக்கு வரும். நடிகர், இயக்குநர், திரைக்கதை ஆசிரியர், பாடகர், பாடலாசிரியர் என பன்முகம் கொண்டவருக்கு இன்று 65வது பிறந்தநாள்.

தெலுங்கு பேசும் குடும்பத்தைச் சேர்ந்தவரான நடிகர் பார்த்திபன் பிறந்து, வளர்ந்தது எல்லாமே சென்னையில் தான். இதுவரை 15 படங்கள் இயக்கியும்,13 படங்கள் தயாரித்தும் 70க்கும் மேற்பட்ட படங்களில் நடித்தும் உள்ள பார்த்திபனின் சினிமா பயணம் 1984ம் ஆண்டு இயக்குநர் பாக்யராஜின் உதவி இயக்குநராகத் தொடங்கியது.

ஐந்து வருடங்களுக்குப் பிறகு அதாவது 1989ஆம் ஆண்டு இயக்குநராக படங்கள் இயக்கத் தொடங்கினார். அவரது முதல் படம் ‘புதிய பாதை’. முதல் படத்திலேயே விமர்சன ரீதியாக வெற்றிப் பெற்றதோடு தேசிய விருது முதல் தமிழ்நாடு ஸ்டேட் அவார்ட் என பல விருதுகளையும் இந்தப் படம் வாங்கிக் குவித்தது.

பார்த்திபன் - ரஜினி...
பார்த்திபன் - ரஜினி...

இயக்குநராக அறிமுகமாவதற்கு முன்பே திரைத்துறை அவரை நடிகராக வரவேற்றது. எஸ்.பி. முத்துராமன் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்த ‘ராணுவ வீரன்’ படத்தில் நடித்தார் பார்த்திபன். அதன் பிறகு சிவாஜி, ரஜினி படங்களில் சிறு சிறு கதாபாத்திரங்களில் நடித்து வந்தவர் தான் இயக்குநராக அறிமுகமான ‘புதிய பாதை’ படத்திலேயே கதாநாயகனாகவும் அறிமுகமானார்.

சீதாவுடன் பார்த்திபன்...
சீதாவுடன் பார்த்திபன்...

இந்தப் படத்தில் பார்த்திபன் - சீதா இடையில் ஏற்பட்ட நட்பு காதலாக மாறி பின்பு 1990ஆம் ஆண்டு திருமணத்தில் முடிந்தது. ஆனால், அது நீண்ட நாட்கள் நிலைக்கவில்லை. இந்த ஜோடி 2001ஆம் ஆண்டு விவாகரத்துப் பெற்று பிரிந்தனர். ‘மற்றப் பெண்களைப் போலவே என் கணவரின் அன்பு எனக்கு மட்டும்தான் கிடைக்க வேண்டும் என்று நினைத்தேன். ஆனால், அது நடக்கவில்லை’ என சீதா வருத்தத்துடன் பிரிவிற்கான காரணம் குறித்துப் பகிர்ந்திருந்தார்.

பார்த்திபன் - வடிவேலு...
பார்த்திபன் - வடிவேலு...

சினிமாவில் ஒவ்வொரு கதாநாயகன் - காமெடி நடிகர் இணை ரசிகர்களால் ரசிக்கப்படும். அப்படி பார்த்திபன் - வடிவேலு இணை ரசிகர்களால் ரசிக்கப்பட்டது. அவர்கள் இணைந்து நடித்த ‘வெற்றிக்கொடி கட்டு’, ‘குண்டக்க மண்டக்க’, ‘காதல் கிறுக்கன்’ போன்ற பல படங்களில் இவர்களது நகைச்சுவை இன்றளவும் ரசிக்கப்படுகிறது. குறிப்பாக ‘வெற்றிக்கொடி கட்டு’ படத்தில் நடிகர் வடிவேலுவை, நடிகர் பெஞ்சமின் திட்டும்படியான ஒரு காட்சியில் வடிவேலு ஒத்துழைக்காமல் இருக்க, அவரை அந்தப் பக்கம் கூட்டி சென்று விட்டு, பெஞ்சமினை கேமராவைப் பார்த்து திட்டும்படி சொல்லி விட்டு அந்தக் காட்சியை இயக்குநரைப் படமாக்கச் சொன்னாராம் பார்த்திபன்.

‘பொன்னியின் செல்வன்’
‘பொன்னியின் செல்வன்’

பார்த்திபன் நடித்தப் படங்களில் ‘புதிய பாதை’ ,’ஆயிரத்தில் ஒருவன்’, ’நானும் ரெளடிதான்’, ‘பொன்னியின் செல்வன்’, ‘அழகி’, ‘வெற்றிக்கொடி கட்டு’, ‘பாரதி கண்ணம்மா’ எனப் பல படங்களை சிறந்ததாகக் குறிப்பிடலாம்.

ஒவ்வொரு இயக்குநருக்கும் ஒரு மேக்கிங் ஸ்டைல் இருக்கும். அதுபோல, வித்தியாசம் என்பது தான் பார்த்திபனின் மேக்கிங் ஸ்டைல். தனது ஒவ்வொரு படத்திலும் எதாவது ஒரு வித்தியாச முயற்சியைத் திரையில் கொண்டு வருவார். சமீபத்தில் வெளியான அவரது ‘ஒத்த செருப்பு’ ஒரே நபரை வைத்து எடுக்கப்பட்ட திரைப்படம். ‘இரவின் நிழல்’ சிங்கிள் ஷாட்டில் எடுக்கப்பட்ட படம். அடுத்து அவர் முழுக்க முழுக்க விலங்குகளை வைத்து படம் எடுக்கிறார் என சொல்லப்படுகிறது. ஹாப்பி பர்த் டே பார்த்திபன்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in