நடிகர் பாண்டியன் : பாரதிராஜா கண்டெடுத்த வீரண்ணன்!

- நினைவுநாள் சிறப்புப் பகிர்வு
நடிகர் பாண்டியன் : பாரதிராஜா கண்டெடுத்த வீரண்ணன்!

இங்கே ஜெயித்தவர்களுக்குப் பின்னே ஒரு கதை இருக்கிறது. "நான் எப்படிலாம் கஷ்டப்பட்டு இந்தத் துறைக்குள்ளே நுழைஞ்சு, எனக்குன்னு ஒரு இடத்தைப் பிடிச்சேன் தெரியுமா?" என்று சொல்லக் கேட்டால் நெகிழ்ந்துபோவோம். "நான் வரணும்னெல்லாம் நினைச்சுக் கூடப் பாக்கல. ஆனா வந்தேன், ஜெயிச்சேன். எப்படித் தெரியுமா?" என்று சொன்னால், அதைக் கேட்டு வியந்து நிற்போம்.

அதாவது 'வாய்ப்பெல்லாம் தேடி வந்து நம் மடியில் உட்காராது. வாய்ப்பை உருவாக்கிக் கொள்ளவேண்டும்’ என்பது ஒரு வகை. ‘வாய்ப்பு எப்போது வேண்டுமானாலும் எப்படி வேண்டுமானாலும் எவர் மூலமாக வேண்டுமானாலும் வரும். அதைப் பயன்படுத்திக் கொள்பவனே புத்திசாலி’ என்பது இன்னொரு வகை. இதில் இரண்டாம் வகையின் மூலமாக வெற்றி பெற்றவர்களில் நடிகர் பாண்டியனின் வாழ்க்கையும் வாய்ப்பும் சுவாரஸ்யமானவை.

தமிழ் சினிமாவைப் புரட்டிப் போட்ட, திசையை அழகாக அடுத்தக் கட்டத்துக்குக் கொண்டு சென்ற படங்கள் பல உண்டு. அந்தப் பட்டியலில் தனியிடம் பிடித்தது ‘16 வயதினிலே’ திரைப்படம். இயக்குநர் பாரதிராஜாவின் பேச்சுதான் அடுத்த பதினைந்து ஆண்டுகளுக்கும் மேலாக கோலோச்சியது.

முதல் படத்தில் கமல், ரஜினி, ஸ்ரீதேவி என்றெடுத்தவர், அடுத்தடுத்த பல படங்களில், பலரையும் அறிமுகப்படுத்தினார். நடிப்பு ராட்சஷி என்று போற்றப்படும் ராதிகா, மேரியாகவே வாழ்ந்து காட்டிய ராதா, விச்சுவாய் அமர்க்களப்படுத்திய கார்த்திக், ஜெனிஃபர் டீச்சராகவே குடையுடன் நடந்து வரும் ரேகா என பாரதிராஜா கண்டெடுத்த முத்துக்களின் பட்டியல், கழுத்துக்கொள்ளாத அளவுக்கான மிகப்பெரிய மாலையாக்கிவிடும் அளவுக்கு நீளம்! அந்த வரிசையில் முத்துப்பேச்சியாக ‘மண்வாசனை’ மூலம் நடிப்பில் மகத்துவம் கொண்ட ரேவதியை முடிவு செய்துவிட்டார் பாரதிராஜா.

பத்திரிகையாளராகவும் பி.ஆர்.ஓ.வாகவும் தனக்கு உதவி இயக்குநராகவும் தன்னுடனேயே பயணித்து வரும் சித்ரா லட்சுமணனை தயாரிப்பாளராக்கி அழகு பார்க்க முடிவு செய்த பாரதிராஜா, பல வருடங்கள் திட்டமிட்டு இப்போது கைகூடிவந்ததுதான் ‘மண் வாசனை’ திரைப்படம்.

கதை ரெடி. கதைக்களம் என்று சொல்லப்படுகிற லொகேஷன் பார்த்தாகிவிட்டது. கதைக்குத் தேவையான மற்ற கதாபாத்திரங்களெல்லாம் முடிவு செய்யப்பட்டு, அவர்களிடம் தேதியும் வாங்கப்பட்டுவிட்டன. ‘காதலிக்க நேரமில்லை’ படத்தில் நாகேஷ், ‘’எல்லாம் ரெடி. ஆனா கதை... கதை... அதான் கிடைக்கல’’ என்பாரே! அதேபோல், பாரதிராஜாவுக்கு எல்லாம் ரெடி. ஆனால், கதைக்கு நாயகன் தான் கிடைக்கவில்லை. பள்ளி, கல்லூரி என அலைந்து ஓய்ந்து நாட்கள் கடந்ததுதான் மிச்சம்.

படப்பிடிப்பைத் தள்ளிப்போடவேண்டாம். எல்லோரையும் வரச்சொல்லும்படி பணித்தார் பாரதிராஜா. எல்லோரும் தேனிப்பக்கம் வந்துவிட்டார்கள். மதுரை மீனாட்சி அம்மன் கோயிலுக்குப் போனார். சாமி தரிசனம் செய்தார். வெளியே வந்தார். எல்லோரும் ‘பாரதிராஜா பாரதிராஜா...’ என்று அவரைப் பார்த்து கையசைத்தார்கள். அங்கிருந்த வளையல் கடையில் இருந்த அந்த இளைஞனும் கையசைத்தார். பாரதிராஜாவை அந்த முகம் ஏதோ அசைத்துப்பார்த்தது. அந்த மீனாட்சி அம்பாள், பாரதிராஜாவுக்கு அருள்புரிந்தாளா... அந்த இளைஞருக்கு அருள்புரிந்தாளா... தெரியவில்லை. ‘’தம்பி, உங்களுக்கு வேலை இருக்கா... என்கூட வரமுடியுமா?’’ என்று கேட்டார் பாரதிராஜா. இளைஞரும் சம்மதித்தார். நடிகரானார். நாயகனானார். அவர்தான் பாண்டியன்.

மதுரைப்பக்கமுள்ள கோபம், அன்பு, ஆத்திரம், மதுரை பாஷை என பாரதிராஜா சொன்னதையெல்லாம் செய்தார் பாண்டியன். ஆனால், கதாசிரியர் கலைமணிக்கும் சித்ரா லட்சுமணனுக்கும் பயம் வந்துவிட்டது. ’’பாண்டியன் வேண்டாமே...’’ என்பதை சூசகமாகவும் பூடகமாகவும் வெளிப்படுத்தினார்கள். ஆனால், பாரதிராஜா உறுதியாக இருந்தார்.

பாண்டியனை அறிமுகப்படுத்தினார். பாண்டியனும் ரேவதியும் நடித்த இந்தப் படம், முந்நூறு நாட்களைக் கடந்து ஓடியது. பாரதிராஜாவின் வருகைக்குப் பின்னர், கிராமத்துக் கதைகளையும் குறிப்பாக, மதுரையைச் சுற்றிய கதைக்களத்தையும் கொண்டு பல படங்கள் வந்தன. அதேபோல், கிராமத்துப் படங்களென்றால் பாண்டியனை நாயகனாக்கிவிடலாம் என்றும் முடிவு செய்தார்கள்.

பாரதிராஜாவின் சிஷ்யர் மணிவண்ணன் பாண்டியனைப் பயன்படுத்தினர். இன்னொரு சிஷ்யர் கே.ரங்கராஜ், அவரைப் பயன்படுத்தினார். பிற்காலத்தில் நடிகராக, கிராமத்து ராஜனாக வலம் வந்த ராமராஜன் தான் இயக்கிய படத்துக்கு பாண்டியனைப் பயன்படுத்தினார்.

பாண்டியன் - ரேவதி ஜோடி ஹிட் ஜோடி என்று பேசப்பட்டது. ’புதுமைப்பெண்’ படத்தில் நகரத்து இளைஞனாக பாண்டியனைக் காட்டினார் பாரதிராஜா. படங்கள் வரிசையாக வரத்தொடங்கின. கொடுத்த கதாபாத்திரத்துக்கும் நம்பிக்கைக்கும் உரிய வகையில் நடித்து அசத்தினார் பாண்டியன்.

பாக்யராஜின் சிஷ்யரான பாண்டியராஜன், தனது முதல் படம் ‘கன்னிராசி’யில் பிரபுவை நாயகனாக்கினார். அடுத்து ‘ஆண்பாவம்’ படத்தில், பாண்டியனை முதல் ஹீரோவாக்கி, தன்னை இரண்டாவது ஹீரோவாக்கி இயக்கினார். இந்த முறை, படத்தில் ரேவதி நடித்திருந்தாலும் பாண்டியனுக்கு ஜோடியாகச் சீதாவை அறிமுகப்படுத்தினார். மேலும், பெரியபாண்டியன், சின்னப் பாண்டியன், ரேவதி, சீதா என்று அவரவரின் பெயர்களே கதாபாத்திரத்துக்கும் அமைத்தார்.

இயக்குநர் ஆர்.சுந்தர்ராஜன், ‘நான் பாடும் பாடல்’ படத்தில் பாண்டியனுக்கு அற்புதமான கேரக்டர் கொடுத்தார். தொடர்ந்து பாண்டியனுக்கு நல்ல இயக்குநர்கள் கிடைத்தார்கள். நல்ல படங்கள் கிடைத்தன. நடிப்பை வெளிப்படுத்துகிற கேரக்டர்களும் கிடைத்தன. ஒரே வருடத்தில் பத்துப் படங்களெல்லாம் வரும் அளவுக்கு பிஸி நடிகரானார் பாண்டியன். ஒவ்வொரு படத்திலும் அப்பாவியாக, அமைதியானவராக, முரட்டுத்தனம் கொண்டவராக என்று வெரைட்டி காட்டி அசத்தினார்.

இந்தக் கட்டத்தில்தான், கிராமத்துப் படங்கள் வந்தன. ஆனால், பாண்டியனின் இடத்தை ராமராஜன் பிடித்தார். மளமளவென அவருக்கு படங்கள் வரத்தொடங்கின. கிராமத்துப் படங்களை இயக்கியவர்கள், நகரத்துப் பின்னணி கொண்ட கதைக்கு வந்திருந்தார்கள். புதுப்புது இயக்குநர்கள், கிராமப் பின்னணியில் கதைகளை உருவாக்கினார்கள். மனோபாலாவின் ‘ஊர்க்காவலன்’ படத்திலும் மீண்டும் ’குரு சிஷ்யன்’ படத்திலும் ரஜினியுடன் நடித்தார் பாண்டியன்.

ஒரு தேக்கம். சற்றே பிரேக். அந்தச் சமயத்தில், பாரதிராஜா விஜயகுமார், நெப்போலியன், ராதிகாவை வைத்து ‘கிழக்குச் சீமையிலே’ என்ற படத்தை இயக்கினார். வில்லத்தனம் கொண்ட வித்தியாசமான மைனர் கேரக்டரில் பாண்டியனுக்கு அட்டகாசமான எண்ட்ரி கொடுத்தார் பாரதிராஜா.

இதையடுத்து சில படங்கள் வந்தன. எண்பதுகளில் பல இயக்குநர்களின் படங்களில் நடித்தார். எண்பதுகளில் எல்லா நாயகர்களுடனும் நடித்து வலம் வந்தார் பாண்டியன். தொண்ணூறுகளில் படங்கள் குறையத் தொடங்கின. அரசியல் பக்கமும் சென்றார். தன் இயல்பான வட்டாரப் பேச்சாலும் வெள்ளந்தியானச் சிரிப்பாலும் பொசுக்கென்று கோபமும் ஆவேசமும் காட்டுகிற பாவனைகளாலும் யதார்த்தத்துடன் நம்மை ஈர்த்த பாண்டியன், அரசியல் களத்தில் ஏனோ பெரிதாக ஈர்க்கவில்லை. முன்னேறவுமில்லை.

ஆனாலும் நடிகர் நம் நெஞ்சில் தனியிடம் பிடித்து வீரண்ணனாகவே ஜொலித்துக் கலக்கிய பாண்டியனின் நினைவுநாள் இன்று (10.01.2023).

அந்த கிராமத்துக் கலைஞனை இந்தநாளில் நினைவுகூர்வோம்!

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in