`சினிமாத்துறைக்கு வர ஆசைப்பட்டால்..!'- மாணவர்களுக்கு நடிகர் நாசர் அட்வைஸ்

`சினிமாத்துறைக்கு வர ஆசைப்பட்டால்..!'- மாணவர்களுக்கு நடிகர் நாசர்  அட்வைஸ்

சினிமா துறைக்குத் திறமையாளர்களும் புதிய யோசனைகளும் தேவை என்று நடிகர் நாசர் கூறினார்.

லயோலா கல்லூரி ஆண்டு விழாவில், நடிகர்கள் நாசரும் ஜீவாவும் சிறப்பு விருந்தினர்களாகக் கலந்துகொண்டனர். இந்த விழாவில் நடிகர் நாசர் பேசும்போது, ``37 வருடமாக திரைத்துறையில் உள்ளீர்கள், அது எப்படி சாத்தியமாக உள்ளது என்று கேட்கிறார்கள். நான் இந்த துறையை ஒரு வேலையாக நினைத்து தான் வந்தேன். இன்றும் நடிப்பை ஒரு வேலையாக செய்து கொண்டிருக்கிறேன். மற்ற வேலைகளைவிட எனக்கு சம்பளம் அதிகம் என்பதால் எனது முழு முயற்சியையும் வெளிப்படுத்துகிறேன். நிறைய பேர் சினிமாத் துறைக்கு வருவதற்கு ஆசைப்படுகிறார்கள். இன்றைய காலத்தில் சினிமாத் துறை என்பது மற்ற துறைகளை விட மிகவும் ஈர்ப்புமிக்க துறையாக உள்ளது.

மாணவி ஒருவருக்கு விருது வழங்கும் நடிகர் நாசர்
மாணவி ஒருவருக்கு விருது வழங்கும் நடிகர் நாசர்

இதில் 2 விஷயங்கள் உள்ளன. நீங்கள் இதை வேலையாக நினைத்து சினிமாத் துறையில் பயணிக்கலாம். அல்லது, இதை ஆசையாக நினைத்தால் நீங்கள் இப்போது படிக்கும் படிப்பிற்கு ஏற்றவாறு ஒரு பணியில் அமர்ந்துவிட்டு நீங்கள் உங்கள் ஆசையை நிறைவேற்றி கொள்ளலாம். குறும்படம் எடுக்கலாம், ஆவணப்படம் எடுக்கலாம், அப்போதும் சாதிக்கலாம்.

இல்லையெனில், நீங்கள் எல்லாத்தையும் விட்டு விட்டு சினிமாவிற்கு வந்தீர்களேயானால், நான் பரந்த கைகளுடனும் பெரிய இதயத்துடனும் வரவேற்கிறேன். ஏனென்றால், இந்த துறைக்குத் திறமையாளர்கள் தேவை, புதிய யோசனைகள் தேவை.

சினிமாத்துறைக்கு வர ஆசைப்பட்டால் அதற்குண்டான படிப்பை படித்துவிட்டு வாருங்கள். என் மனைவி தான் என் அலுவலகத்தை பார்த்துக் கொள்கிறார். அவர் சைக்காலஜி படித்தவர். இருப்பினும், எல்லாத்தையும் எனக்காக விட்டுவிட்டு என் அலுவலகத்தை பார்த்துக் கொள்கிறார். என் குழந்தைகளையும் பார்த்துக் கொள்கிறார். ஒரு பொறுப்பை ஒரு பெண்ணிடம் கொடுத்தால் ஆண்களை விட சிறப்பாக செய்வார்கள். இது நான் கண்கூடாகப் பார்த்த அனுபவம்'' என்று கூறினார்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in