`கலைஞர்களுக்கு அங்கீகாரமும் பாராட்டும்தான் பிரதானம்’: முதல்வருக்கு நடிகர் நாசர் நன்றி

`கலைஞர்களுக்கு அங்கீகாரமும் பாராட்டும்தான் பிரதானம்’: முதல்வருக்கு நடிகர் நாசர் நன்றி

திரையுலகில் சிறந்து விளங்கியவர்களுக்கு ’கலைஞர் கலைத்துறை வித்தகர்’ விருது வழங்கப்படும் என்று அறிவித்த தமிழக முதல்வருக்கு நடிகர் சங்கத் தலைவர் நாசர் நன்றி தெரிவித்துள்ளார்.

தமிழ்த் திரையுலகில் சிறந்து விளங்கிய வாழ்நாள் சாதனையாளருக்கு முன்னாள் முதல்வர் கருணாநிதி பெயரில் "கலைஞர் கலைத்துறை வித்தகர் விருது" வழங்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. ஜூன் 3-ம் நாள் அன்று முதல் ஒவ்வொரு ஆண்டும் வழங்க ஏதுவாக, விருதாளரை தேர்வு செய்ய இயக்குநர் எஸ்.பி.முத்துராமனை தலைவராகவும், நடிகர் சங்கத் தலைவர் நாசர் மற்றும் நடிகரும், இயக்குநருமான கரு.பழனியப்பன் ஆகியோரை உறுப்பினர்களாகவும் கொண்ட தேர்வுக்குழுவை அரசு அமைத்துள்ளது.

இந்தக் குழு பரிந்துரைக்கும் விருதாளருக்கு விருதுத் தொகையான ரூ.10 லட்சம் மற்றும் நினைவுப்பரிசு ஆகியவற்றை முன்னாள் முதல்வர் கருணாநிதியின் பிறந்த தினமான ஜூன் 3-ம் நாளன்று தமிழக முதல்வர் வழங்கி கவுரவிப்பார் என்று அரசு அறிவித்திருந்தது. இந்நிலையில், நடிகர் நாசர், தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு நன்றி தெரிவித்துள்ளார்.

அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ``கலைஞர்களுக்கு பொருள் அல்ல, சமூகத்தில் அங்கீகாரமும் பாராட்டும்தான் பிரதானம். “கலைமாமணி” என்ற விருதமைத்த கலைஞரின் பெயரால் இருக்கும் இவ்விருது பெற்றிடும் பெரும் கலைஞர்கள் மனமகிழ்வார்கள். அத்தகைய விருதினை பெறுவதற்கான சான்றோரைத் தேர்ந்தெடுக்கக் குழு அமைத்தமைக்கும், அதில் ஒருவனாக என்னை நியமித்தமைக்கும் நன்றி. கொடுக்கப்பட்ட இப்பணியினை முத்தமிழறிஞர் ஆசியோடு செவ்வனே செய்வேன் எனவும் உறுதி கூறுகிறேன்'' என்று கூறியுள்ளார்.

நடிகர் சங்க பொதுச்செயலாளர் விஷாலும் முதல்வருக்கு நன்றி தெரிவித்துள்ளார்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in