நடிகர் நாகேஷ் பிறந்தநாள்: தடைகள் கடந்து தலைமுறை தாண்டி சாதித்தவர்!

நடிகர் நாகேஷ்
நடிகர் நாகேஷ்

நகைச்சுவை என்ற வட்டத்திற்குள் சுருக்க முடியாத அசாத்திய திறமை கொண்ட கலைஞன் நாகேஷின் 90-வது பிறந்தநாள் இன்று. காலம் கடந்தும் போற்றப்படும் அவர் குறித்தான சில சுவாரஸ்ய நினைவுகளை இங்கு பார்க்கலாம்.

நடிகர் நாகேஷ்
நடிகர் நாகேஷ்

* கவிஞர் வாலியும் நாகேஷும் ’வாடா போடா’ என சொல்லும் அளவுக்கு நெருங்கிய அறைத் தோழர்கள். இருவரும் எந்த அளவுக்கு நெருக்கம் என்றால், ‘டேய் ரங்கராஜா. உன் கைக்கு இந்த வாட்ச் நல்லா இல்லடா. கழட்டிரு’ என்பார் நாகேஷ். பிறகு அந்த வாட்ச் அடகுக்கடைக்குச் சென்று பணமாகி, ஹோட்டலுக்கும், சினிமாவுக்குமாகப் பயன்படுத்தப்படும். நாகேஷ் பாக்கெட்டில் காசு இருந்தால், அது வாலிக்கானது.

* ’சர்வர் சுந்தரம்’, ‘பாமா விஜயம்’, ‘நீர்க்குமிழி’ என நாகேஷின் நடிப்புத் திறனை பட்டியலிட எண்ணற்ற படங்களும், கதாபாத்திரங்களும் இருக்கின்றன. குறிப்பாக, ‘திருவிளையாடல்’ படத்தில் சிவாஜியுடன் தருமியாக நாகேஷ் நடித்த காட்சிகள் எல்லாம் காலத்தால் அழியாதவை.

நடிகர் நாகேஷ்
நடிகர் நாகேஷ்

* கமல் தீவிர நாகேஷ் ரசிகர். எந்த அளவிற்கு என்றால், எந்தவித முன்பயிற்சியும் இல்லாமலே குறைந்தது 3 முதல் 4 மணிநேரத்திற்காவது நாகேஷைப் பற்றி அவரால் பேச முடியும். நான் எப்போது சினிமா பேசினாலும், நாகேஷும் பாலச்சந்தரும் இல்லாமல் அந்த உரையாடல் முடிவுறாது என்பார். இன்று வரையில் கமலின் பிரத்யேக அறையில் இருக்கும் ஒரே புகைப்படம் நாகேஷூடையது மட்டுமே. வேறு எந்த நடிகர்களின் புகைப்படங்களுக்கும் அந்த அறையில் அனுமதியில்லை.

*நடிகர் நாகேஷின் புகழ்பெற்ற புகைப்படங்களில் ஒன்று 'சர்வர் சுந்தரம்' படத்தில் இடம்பெற்ற டம்ளர் அடுக்கி வைத்திருக்கும் காட்சி. முதலில் அந்த காட்சி திரைப்படத்தில் இடம்பெறுவதாகவே இல்லை. அந்த புகைப்படத்தை பார்த்த படத்தின் தயாரிப்பாளர் ஏ.வி.மெய்யப்பச் செட்டியார் இதைப் பாராட்டி, திரைப்படத்தில் அந்த காட்சி இல்லாதது குறித்துக் கேட்டுள்ளார். டெஸ்ட் ஷூட்டிற்காக எடுத்த அந்தப் புகைப்படம் படத்தில் இல்லை என்று தெரிந்தவுடன் அந்தக் காட்சியைப் படத்தில் சேர்க்கச் சொல்லி அறிவுறுத்தினார் செட்டியார். அதன் பிறகே அந்தக் காட்சி படத்தில் சேர்க்கப்பட்டு புகழ்பெற்றது.

நடிகர் நாகேஷ்
நடிகர் நாகேஷ்'சர்வர் சுந்தரம்' படத்தில்

*நாகேஷூக்கு திரையில் சிறந்த ஜோடி மனோரமா தான். இருவரும் இணைந்து நகைச்சுவையில் பட்டையை கிளப்புவார்கள். இருவரும் சேர்ந்து ஜோடியாக நடித்த கடைசித் திரைப்படம் 'இம்சை அரசன் 23-ம் புலிகேசி'.

தன்னுடைய உருவத்தை சினிமாவில் ஒரு தடையாக நினைக்காது தலைமுறை தாண்டியும் திரையில் சாதித்தவர் நாகேஷ். கிட்டத்தட்ட 1000-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்தவருக்கு 1974 ம் ஆண்டு கலைமாமணி விருது வழங்கப்பட்டது. இன்னும் எத்தனை ஆண்டுகள் ஆனாலும் தன்னுடைய நடிப்புத் திறனுக்காகவும் ஒப்பில்லா முக பாவங்களுக்காகவும் நினைவுகூரப்படுவார் நடிகர் நாகேஷ்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in