
சிவாஜி கணேசன், எம்.ஜி.ஆர். ஆகியோர் திரைத்துறையில் கோலோச்சிக் கொண்டிருந்த காலத்தில் 'நவரச திலக'மாக தனக்கென ஒரு ரசிகர் பட்டாளத்தைக் கொண்டிருந்தவர் நடிகர் முத்துராமன். தமிழ் சினிமாவின் மிஸ்டர் க்ளீன். அவரது 42வது நினைவுநாளான இன்று அவர் குறித்தான நினைவலைகள்...
* தஞ்சையில் பிறந்த முத்துராமனின் குடும்பத்தில் அனைவருமே அரசு அதிகாரிகள். அதனால், அவரையும் அரசு வேலைக்கு அனுப்ப வேண்டும் என அனைவரும் வலியுறுத்த, அவரும் அரசுப் பணியில் சேர்ந்தார். ஆனால், நடிப்பின் மீதான ஈர்ப்பின் காரணமாக வேலையில் இருந்து கொண்டே, திரைப்படங்களில் நடிப்பதற்கான வாய்ப்புகளைத் தேடிக் கொண்டிருந்தார்
* நடிகர் முத்துராமன், 1947ல் மனோரமாவுடன் சேர்ந்து வைரம் நாடக சபாவின் மேடை நாடகங்களில் நடிக்கத் துவங்கினார். 'மணிமகுடம்', 'முத்துமண்டபம்' ஆகிய நாடகங்கள் இவர் நடிப்பில் புகழ் பெற்றவை.
* ஜெமினி கணேசன் கதாநாயகனாக நடித்த 'தென்தூசி’ படத்தில் சுப்பு எனும் ஒரு எளிய கதாபாத்திரத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். சில படங்களில் முக்கிய கதாபாத்திரத்திலும், பல படங்களில் துணை கதாபாத்திரத்திலும் என சுமார் 100க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துப் புகழ்பெற்றார். தனி கதாநாயகனாக நடித்திருந்தாலும், சிவாஜி கணேசனுடன் அதிக அளவில் இரண்டாவது கதாநாயகனாக நடித்துள்ளார் முத்துராமன்.
*கே.ஆர்.விஜயா- முத்துராமன் ஜோடி நடிப்பில் வெளியான 'காதலிக்க நேரமில்லை', 'ஊட்டி வரை உறவு', 'மூன்று தெய்வங்கள்', 'சர்வர் சுந்தரம்' ஆகியவை கிளாஸிக் வெற்றிப் பெற்றது. இந்த ஜோடி இணைந்து கிட்டத்தட்ட 19 படங்களில் நடித்துள்ளது.
*இவரது மகன் கார்த்திக் 'நவரச நாயகன்' எனப் புகழப்பட்டார். பேரன் கெளதம் கார்த்திக்கும் திரைத்துறையில் நடித்து வருகிறார்.
*முத்துராமன், ‘ஆயிரம் முத்தங்கள்’ படப்பிடிப்பில் கலந்துகொள்ள 1981ம் ஆண்டு ஊட்டி சென்றிருந்த நிலையில், அங்கு வழக்கமான ஜாகிங் உடற்பயிற்சி செய்து கொண்டிருந்த போது மயங்கி விழுந்து உயிரிழந்தார். முத்துராமனின் கடைசிப்படம் ரஜினிக்கு வில்லனாக நடித்த 'போக்கிரி ராஜா'.