நடிகர் எம்.எஸ்.பாஸ்கர்: ‘என் முதல் படம் வெளியாகி 36 வருடங்கள்!’

- எம்.எஸ்.பாஸ்கர் நடித்த முதல் படம் இதுதான்!
நடிகர் எம்.எஸ்.பாஸ்கர்
நடிகர் எம்.எஸ்.பாஸ்கர்

அந்தக் காலத்தில், படத்துக்கான கதையை யோசிக்கும்போதே, ‘இதில் எஸ்.வி.ரங்காராவ் நடித்தால்தான் நன்றாக இருக்கும்’ என்று கே.எஸ்.கோபாகிருஷ்ணன் முடிவு செய்து, அதற்கு தகுந்தார் போல் கதாபாத்திரம் அமைப்பார். டி.எஸ்.பாலையா, எஸ்.வி.சுப்பையா, எம்.ஆர்.ராதா, மேஜர் சுந்தர்ராஜன் முதலான பல நடிகர்களை அப்படித்தான் பயன்படுத்தினார்கள்.

அந்த வரிசையில், இன்றைக்கு தனது யதார்த்த நடிப்பால் எல்லோரையும் ஈர்த்து வருபவர் நடிகர் எம்.எஸ்.பாஸ்கர். ஒரு இயக்குநரின் ஒவ்வொரு படங்களிலும் நடிப்பவராக எம்.எஸ்.பாஸ்கர் இருக்கிறார். அதேபோல், ஒரு படத்தில் அவரின் கதாபாத்திரத்தை, வேறு எவரும் சிறப்பாக நடித்துவிட முடியாது என்று தன் திறமையை வெளிப்படுத்துகிறார். இப்படியாக அற்புதமான கேரக்டர் நடிகராக வலம் வந்துகொண்டிருக்கிற எம்.எஸ். பாஸ்கரின் திரைப்பயணம் மிக நீண்டது!

எம்.எஸ். பாஸ்கரின் முகம் இன்றைக்கு நமக்கெல்லாம் பரிச்சயம். ‘மொழி’, ‘உப்புக்கருவாடு’, ‘உத்தம வில்லன்’, ‘பாபநாசம்’ மற்றும் ‘எட்டுத் தோட்டாக்கள்’ என படத்துக்குப் படம் நடிப்பில் வெரைட்டிக் காட்டி, தானொரு மேம்பட்ட கலைஞன் என்பதை நிரூபித்துக் கொண்டே இருக்கிறார். ஆனால் ஆரம்பகாலத்தில், அவரின் முகம் நமக்குப் பரிச்சயமாவதற்கு முன்பாக, தனது குரல் வழியேதான் நமக்கு அறிமுகமானார்.

’’ரேடியோவிலும் தொலைக்காட்சிகளிலும் குரல் கொடுத்துக் கொண்டிருந்தேன். சினிமாக்களில் எத்தனையோ படங்களுக்கு எத்தனையோ பேருக்கு குரல் கொடுத்துவந்தேன். இதையெல்லாம் கணக்கில் வைத்துக் கொள்ளவே இல்லை. அந்த அளவுக்கு தொடர்ந்து கடுமையாக உழைத்துக் கொண்டே இருந்தேன். எப்படியாவது ஒரு நடிகனாக திரையில் முகம் காட்டிவிட வேண்டும்; நடிகனாக பேரெடுத்துவிடவேண்டும் என்பதுதான் என் லட்சியமாக இருந்தது’’ என்கிறார் நடிகர் எம்.எஸ்.பாஸ்கர்.

அவரே தொடர்ந்தார்...

‘’அந்த சமயத்தில், நடிகரும் இயக்குநருமான விசு சார், அவரின் படங்களுக்கெல்லாம் என் குரலை ஏதேனும் ஒரு கதாபாத்திரத்துக்குப் பயன்படுத்திக் கொண்டே வந்தார். ’உன் வாய்ஸ்ல ஒரு மெஸ்மரிஸம் இருக்கு. அந்தந்த கேரக்டருக்குத் தகுந்தது போல ‘ஸ்லாங்’ மாத்தறது உனக்கு சரளமா வருது’ என்று பாராட்டினார்.

‘சம்சாரம் அது மின்சாரம்’ படத்துக்காக என் குரலை பயன்படுத்திக் கொண்டிருந்தார். அப்போது அவரிடம், ‘அண்ணா, எனக்கு நடிக்க வாய்ப்பு கொடுக்கக் கூடாதா?’ என்று கேட்டேன். அதேசமயத்தில், ‘பசி’ இயக்குநர் துரை சார், என்னை அழைத்தார். அவருக்கும் என் குரல் மிகவும் பிடிக்கும். ‘உனக்கு ஒரு கேரக்டர் இருக்கு. இந்தப் படத்துல நீ நடிக்கிறே’ என்று அவர் படத்தில் என்னை நடிக்கவைத்தார். நானும் நடித்தேன். அந்தப் படம்... ‘புனித மலர்கள்’.

நல்ல கதை. இயக்குநர் துரை சாருக்கே உண்டான சமூக அக்கறையுடன் வளர்ந்த ‘புனித மலர்கள்’ திரைப்படம், ஏனோ வராமலேயே போய்விட்டது. நான் முதன்முதலாக நடித்த படம் வரவே இல்லையே என்று வருத்தம்தான். ஆனாலும் என் முயற்சியில் நான் மனம் தளரவே இல்லை. தொடர்ந்து டப்பிங் ஒர்க், தொடர்ந்து நடிக்க வாய்ப்பு என்று உறுதியாக சான்ஸ் தேடிக் கொண்டிருந்தேன். அந்தச் சமயத்தில்தான் விசு சார் அழைத்தார். கே.பாலசந்தர் சாரின் கவிதாலயா தயாரிப்பில், ‘திருமதி ஒரு வெகுமதி’ படத்தை எடுத்தார். அந்தப் படத்தில், எனக்கு சிறிய வேடம் கொடுத்தார்.

’திருமதி ஒரு வெகுமதி’ படத்தில் தாடியுடன் எம்.எஸ்.பாஸ்கர்
’திருமதி ஒரு வெகுமதி’ படத்தில் தாடியுடன் எம்.எஸ்.பாஸ்கர்

நடிகர் பாண்டியன் கல்லூரி மாணவராக நடித்தார். அந்தக் கல்லூரியின் நானும் ஒரு மாணவன். அப்போது தாடி வைத்துக்கொண்டிருந்தேன். அதே தாடியுடன், படத்தில் தோன்றினேன்.

அந்தப் படத்தில், சக மாணவிகளை ஈவ் டீஸிங் செய்வது போலவும், அதைப் பார்த்துவிட்டு நடிகை ஜெயஸ்ரீ என்னை அறைவது போலவும் அதைக் கண்டிக்கும் வகையில், பாண்டியன் ஜெயஸ்ரீயை மன்னிப்புக் கேட்கச் சொல்வது போலவுமான காட்சிகள். சொல்லப்போனால், பாண்டியனும் ஜெயஸ்ரீயும் சேருவதற்கு லீட் காட்சிகளாக அவை இருந்தன.

இந்தக் காட்சிகளில் எனக்கு பெரிய க்ளோஸப் ஷாட்டுகளும் கிடையாது. ’என் முகம் தெரியுது பார்’ என்று எல்லோரிடமும் பெரிதாகச் சொல்லவும் முடியாது. முக்கியமாக, என் நடிப்பை வெளிக்காட்டவோ டயலாக் பேசவோ பெரிய வாய்ப்பெல்லாம் இல்லை. ஆனாலும் ‘திருமதி ஒரு வெகுமதி’ பார்த்துவிட்டு, என் நண்பர்கள் உறவினர்கள் பலர் என்னைக் கண்டுகொண்டார்கள். ‘நீ கஷ்டப்பட்டதுக்கும் பொறுமையா இருந்து போராடினதுக்கும் பலன் கிடைச்சிருச்சு’ என்று வாழ்த்தினார்கள்.

இதன் பிறகு, ‘வேடிக்கை என் வாடிக்கை’, ‘காவலன் அவன் கோவலன்’ என விசு சார் தொடர்ந்து தனது படங்களில் என்னை ஏதேனும் ஒருவகையில் பயன்படுத்தினார். பின்னர் ஒரு இடைவெளி விழுந்தது. ஆனாலும் நான் தளரவே இல்லை. டப்பிங் பணிகளில் மும்முரமாக ஈடுபட்டேன். ‘காத்திருந்தால் பலன் நிச்சயம் உண்டு’ என்பார்கள். அப்படிக் காத்திருந்ததற்கு பலனாக, இன்றைக்கும் நல்ல கேரக்டர்கள், இயக்குநர்கள், நடிகர்கள் என சந்தோஷமாகவும் ஆர்வமாகவும் இயங்கிக் கொண்டிருக்கிறேன்.

‘திருமதி ஒரு வெகுமதி’ வெளியாகி, 36 ஆண்டுகளாகிவிட்டன. எனக்கு நல்ல கதாபாத்திரங்கள் கொடுத்து, என் மீது நம்பிக்கை கொண்ட அத்தனை இயக்குநர்களுக்கும் அனைத்து நடிகர்களுக்கும் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்’’ என்று நெகிழ்ச்சியும், மகிழ்ச்சியுமாகத் தெரிவித்தார் நடிகர் எம்.எஸ்.பாஸ்கர்.

36ம் ஆண்டில் அடியெடுத்து வைக்கும் எம்.எஸ்.பாஸ்கர் சாருக்கு நம் வாழ்த்துகளைச் சொல்லுவோம். இன்னும் மகத்துவம் மிக்க கதாபாத்திரங்கள் கிடைத்து ஜொலிக்க வாழ்த்துகள் பாஸ்கர் சார்!

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in