நன்றிக்கடனாக நண்பரைத் தயாரிப்பாளராக்கிய நடிகர் மோகன்!

ஒரு நண்பர் தயாரிப்பாளர்; இன்னொரு நண்பர் இயக்குநர்
நன்றிக்கடனாக நண்பரைத் தயாரிப்பாளராக்கிய நடிகர் மோகன்!

இயக்குநரும் ஒளிப்பதிவாளருமான பாலுமகேந்திராவால் கன்னடத்தில் ‘கோகிலா’ படம் மூலமாக அறிமுகமாகி 45 ஆண்டுகள் ஆனதை நடிகர் மோகன் சமீபத்தில் கொண்டாடினார். இயக்குநர் மகேந்திரனின் ‘நெஞ்சத்தைக் கிள்ளாதே’, இயக்குநர் துரையின் ‘கிளிஞ்சல்கள்’, இயக்குநர் ஆர்.சுந்தர்ராஜனின் ‘பயணங்கள் முடிவதில்லை’ என மளமளவென உயர்ந்து, தனக்கென தனியிடம் பிடித்தார் மோகன். முன்னதாக நடிக்க வாய்ப்பு தேடி அலைந்ததையும் அப்போது உதவியவர்களையும் மறக்கவே இல்லை அவர். அந்த நன்றியின் வெளிப்பாடாகத்தான் வந்தது ‘நான் உங்கள் ரசிகன்’ திரைப்படம்.

நடிகர் மோகன் நடித்த முதல் படம் ‘கோகிலா’. இது கன்னடப்படம். கமல்ஹாசன், ஷோபா, ரோஜாரமணி ஆகியோர் நடித்த இந்தப் படத்தை பாலுமகேந்திரா இயக்கியிருந்தார். 1977 அக்டோபர் மாதம் 7-ம் தேதி இந்தப் படம் வெளியானது.

பிறகு, நடிகர் மோகன் சென்னைக்கு வந்து வாய்ப்பு தேடினார். அப்போது அவருக்குப் பழக்கமானார் மனோபாலா. மோகனை அழைத்துக்கொண்டு ஒவ்வொரு படக்கம்பெனியாக அலைந்தார் மனோபாலா. ஒருகட்டத்தில் ‘ஆகாய கங்கை’ படத்தை இயக்கும் வாய்ப்பு கிடைத்தது. அது தோல்விப்படமாக அமைந்ததால் அடுத்த வாய்ப்புக்காக ஏங்கிக்கொண்டிருந்தார் மனோபாலா.

’நான் உங்கள் ரசிகன்’ டைட்டில்
’நான் உங்கள் ரசிகன்’ டைட்டில்

இந்த சமயத்தில், மோகனுக்கு வரிசையாகப் படங்கள் கிடைத்தன. வெற்றிப் படங்களாகவும் வெள்ளிவிழாப் படங்களாகவும் அமைந்தன. மோகனுக்கு கால்ஷீட் கொடுக்கவே தேதியோ நேரமோ இல்லாமல் இருந்த நிலை அப்போது. நண்பன் மனோபாலாவுக்கோ வாய்ப்பே வரவில்லை. தயாரிப்பாளர் ஒருவர் மோகன் கால்ஷீட் கேட்டு தொடர்ந்து வந்துகொண்டே இருந்தார். ‘’நான் கால்ஷீட் தரணும்னா மனோபாலாவுக்கு டைரக்‌ஷன் சான்ஸ் கொடுக்கணும்’’ என்று கண்டிஷன் போட்டார் மோகன். தயாரிப்பாளரும் ஒப்புக்கொண்டார். அது த்ரில்லர் படம். ‘பிள்ளைநிலா’ படத்தின் கதைதான் நமக்குத் தெரியுமே? படத்தின் பெரும்பகுதி இருளில் நடப்பதுபோல் எடுக்கப்படுவதால், தினமும் இரவில் தூங்கும் நேரத்தையெல்லாம் மனோபாலாவுக்காக வழங்கினார் மோகன். இரவு நேரங்களில்தான் பெரும்பாலான படப்பிடிப்பு நடந்தது. மிகப்பெரிய வெற்றியைப் பெற்றது.

ஆரம்பகாலத்தில் அவரை அழைத்துக்கொண்டு, வாய்ப்பு தேடி அலைந்தார் மனோபாலா. அதேபோல், படங்கள் குவியத் தொடங்கிய பிறகு, மனோபாலாவுக்கு டைரக்‌ஷன் வாய்ப்பு வழங்கினார் மோகன்.

இதேபோல், வாய்ப்பு தேடி மோகன் அலைந்தபோது மனோபாலாவைப் போலவே மோகனுக்கு உறுதுணையாக இருந்தவர் ஸ்டில்ஸ் ரவி எனும் புகைப்படக் கலைஞர். மோகன், ஸ்டில்ஸ் ரவி, மனோபாலா மூவரும் நண்பரானார்கள்.

’நான் உங்கள் ரசிகன்’ டைட்டில்
’நான் உங்கள் ரசிகன்’ டைட்டில்

மோகனை வளைத்து வளைத்துப் படங்களாக க்ளிக்கித் தள்ளினார் ஸ்டில்ஸ் ரவி. அவற்றை ஆல்பமாக்கி, மோகனையும் அழைத்துக்கொண்டு, தனக்குத் தெரிந்த கம்பெனிகளுக்கெல்லாம் சென்று மோகனுக்காக வாய்ப்பு கேட்டார். இதையும் மறக்கவில்லை மோகன்.

சில வருடங்களில், மோகன் மிகப்பெரிய நடிகரானார். மோகன் படங்கள் தொடர்ந்து ஹிட்டடித்துக் கொண்டே இருந்தன. ஸ்டில்ஸ் ரவியை அழைத்தார். மனோபாலாவையும் அழைத்தார். ‘’ரவி படம் தயாரிக்கட்டும். நீ டைரக்ட் பண்ணு. நான் நடிச்சிக் கொடுக்கறேன். எனக்கு சம்பளம்லாம் வேுணாம். ரவிக்காக நான் செய்ற சின்ன நன்றிக்கடன்’’ என்று படத்துக்கான எல்லா வேலைகளையும் ஏற்பாடு செய்து தொடங்கி வைத்தார். அப்படி ஸ்டில்ஸ் ரவி தயாரிக்க, மனோபாலா இயக்க, மோகன் நடிப்பில் வந்ததுதான் ‘நான் உங்கள் ரசிகன்’.

கிராமத்தில் சுற்றிக்கொண்டிருக்கும் இளைஞன் சுப்ரமணி. இவனுக்கு நடிகை ரஞ்சனி என்றால் கொள்ளை ஆசை. அவருடைய தீவிர ரசிகன். ரஞ்சனி நடித்த படம் வந்தால், முப்பது நாற்பது தடவை பார்ப்பான்.

ஒருகட்டத்தில், ரஞ்சனியின் அறிமுகம் கிடைக்கிறது. அவரிடமே வேலைக்கு சேர்கிறான். நடிகையிடம் ரசிகனாக இருப்பவன், வேலைக்காரனாகவும் ஆகிறான். இன்னும் நெருங்கிப் பார்க்க, அவள் மீது காதல் கொள்கிறான்.

ஆனால் இதெல்லாம் ரஞ்சனிக்குப் பிடிக்கவில்லை. கொஞ்சம் கொஞ்சமாக ஒரு சைக்கோ போல் மாறி, நேசித்த ரஞ்சனியையே கொல்கிறான். அதைத் தெரிந்துகொண்ட மேனேஜரையும் பத்திரிகை புகைப்படக்கலைஞரையும் கொல்கிறான். ரஞ்சனியின் தங்கைக்கு இது தெரியவருகிறது. அவளையும் அவளின் குழந்தையையும் கொல்லத் துணிகிறான். இறுதியில் அவர்கள் கொல்லப்பட்டார்களா, அவன் மாட்டிக்கொண்டானா என்பதைச் சொன்னதுதான் ‘நான் உங்கள் ரசிகன்’.

கிராமத்து இளைஞன் சுப்ரமணியாக மோகன். நடிகை ரஞ்சனியாக ராதிகா. அவருடைய தங்கையாக நளினி. நளினியின் கணவர் போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜீவ். கிராமத்தில் மோகனின் வெகுளித்தனம் அவருக்கு வித்தியாசமான கேரக்டராக அமைந்திருந்தது. ராதிகாவைப் பார்க்கும்போது வெள்ளந்திச் சிரிப்புடன் அசடு வழிந்து பேசுவது மோகனின் நடிப்புக்குத் தீனியாக அமைந்தது.

ராதிகா வழக்கம்போல் தன் கேரக்டரை ரொம்ப ஸ்டைலாகவும் உணர்வுபொங்கவும் செய்துகொடுத்திருப்பார். தங்கை நளினி மீது கொண்ட பிரியத்தைக் காட்டுகிறபோதெல்லாம் நெகிழவைத்துவிடுவார். ஒரு நடிகைக்கே உண்டான பரபரப்புடனும் பந்தாவுடனும் ஸ்டைலீஷ் நடிப்பில் முத்திரை பதித்திருப்பார் ராதிகா.

நளினி, பயந்த சுபாவம் கொண்டவராக, புருஷனுடன் அன்பு செலுத்தும் இயல்பான மனைவியாக, அக்காவிடம் பேரன்பு கொண்டவராக, குழந்தையைக் கொஞ்சிக்கொண்டு வலம் வரும் கதாபாத்திரத்தை உணர்ந்து நடித்திருப்பார். ராஜீவ் எப்போதுமே மிடுக்கான நடிப்பால் நம்மையெல்லாம் கவருவார். இதிலும் அப்படித்தான்.

நடிகை ரஞ்சனியை தவறாகப் பேசிய கிராமத்துப் பெரியவர் செந்தாமரையைக் கொன்றுவிட்டுத்தான் சென்னைக்கே வந்திருப்பார் மோகன். ஆகவே ஆரம்பத்திலேயே மோகனுக்குள் இருக்கிற மிருக குணத்தையும் கோடிட்டுக் காட்டியிருப்பார் இயக்குநர் மனோபாலா. வசனத்தை எம்.எஸ்.மது எழுதினார்.

திரைப்படங்களில் ஸ்டில் போட்டோகிராபராக பணியாற்றிய ஸ்டில்ஸ் ரவி, படத்தைத் தயாரித்தார். கங்கை அமரன் இசையில் பாடல்கள் இனிமையும் இளமையுமாக இருந்தன. ‘பூவுல மாலை கட்டுங்க நாயனம் மேளம் தட்டுங்க’ என்றொரு பாடல், ‘ஒரு தேவதை வரும் நேரமே சுபராகமே உருவாகுமே’ என்றொரு பாடல், ’பூவே இளம்பூவே பொதிகை மலையின் பூங்காற்றே’ என்றொரு பாடல் என பாடல்கள் அனைத்துமே சுகமாகத்தான் இருந்தன.

அப்போதெல்லாம் மோகனுக்கு எஸ்.என்.சுரேந்தர்தான் குரல் கொடுத்தார். இந்தப் படத்துக்கு முன்பும் அவர் குரல் கொடுத்திருக்கிறார். இந்தப் படத்துக்குப் பின்னரும் சுரேந்தர் குரல் கொடுத்தார். ஏனோ தெரியவில்லை... இந்தப் படத்துக்கு ரத்னகுமார் என்பவர் மோகனுக்குக் குரல் கொடுத்தார்.

1985 அக்டோபர் 11-ம் தேதி வெளியானது ‘நான் உங்கள் ரசிகன்’. வெளியாகி 37 வருடங்களாகின்றன. படத்தின் தொடக்கத்தில் ‘என்னைத் தயாரிப்பாளராக்கிய நடிகரும் நண்பருமான மோகனுக்கு நன்றி’ என்று டைட்டிலில் போட்டிருப்பார் ஸ்டில்ஸ் ரவி. காதலித்தவளையே கொன்றுவிட்டு, அடுத்தடுத்து கொலையும் செய்கிற சைக்கோ கொலைகாரனாக மாறுவதற்கான காரணங்கள் கட்டமைக்கப்பட்டிருந்தால், மிகப்பெரிய ஹிட் படமாகவே அமைந்திருக்கும். ஆனால் இத்தனை கொலைகளையும் செய்துவிட்டு, கடைசியில் மோகனும் செத்துப்போவார். அவர் கையில் இருந்து ரத்தம் சொட்டுச்சொட்டாக ராதிகாவின் நெற்றியில் குங்குமமாக வந்து உட்கார்ந்துகொள்ளும். ‘இதுவும் காதல் கதைதான்...’ என்று டைட்டிலைப் போட்டு படத்தை முடித்திருப்பார் மனோபாலா. ‘இது காதலா..?’ என்று ரசிகர்கள் நினைத்துவிட்டார்களோ என்னவோ!

ஆனால், வாய்ப்பு தேடிய காலத்தையும் அப்போது உதவிய ஸ்டில்ஸ் ரவியையும் மனோபாலாவையும் மறக்காத மோகனுக்கும் அவரின் நன்றியுணர்வுக்கும் ஒரு சபாஷ்!

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in